ஏற்றுக்கொள்வோம்…

திசெம்பர் 29, 2008

 

காற்றை மட்டும்
கடித்துத் தின்ன முடிந்தால்..
யாருக்கும் இருக்காது பசி !

 

கடலை மட்டும்
அள்ளிக் குடிக்க முடிந்தால்..
யாருக்கும் இருக்காது தாகம் !

 

தேவைகளை மட்டும்
தீர்க்க முடிந்தால்..
யாருக்கும் இருக்காது தேடல் !

 

இன்பம் மட்டுமே
வாழ்வாகிப் போனால்
கொஞ்ச நாளில்
இன்பமாய் இருப்பதே
துன்பமாகக் கூடும்…

 

வெயிலும் மழையும்..
இரவும் பகலும்..
கதிரும் நிலவும்..
ஆணும் பெண்ணும்..
தீயும் நீரும்..
சந்தோஷமும் சோகமும்..
புன்னகையும் அழுகையும்..
ஒரு அர்த்தத்தொடே படைக்கப்பட்டிருக்கின்றன…

 

அதனால் எதற்க்கும் முரண்படாது
எளிதாய் ஏற்றுக்கொள்வோம்
அதனை அதன் வழியில்…


வார்த்தைகளின் வலிமை…

திசெம்பர் 25, 2008

 

அறைந்துவிட்ட கன்னம் தடவி
மறுகன்னம் காட்டச் சொன்னது
சாதாரண வார்த்தைகள் இல்லை…

 

சொன்னதை நிரூபிக்க
சிரிப்போடு சிலுவையில் மரித்ததும்
சாமானியம் இல்லை…

 

அற்புதங்களுக்கு இடையில்
அன்பே பிரதானமாய் வாழ்ந்ததால்தான்
அந்த புண்ணியனின் வாழ்க்கை வரலாறானது…

 

கல்வாரி மலையில் வழிந்த
ரத்தக் கறைகள்
புனிதமாகிப் போட்டன
பிழைகள் நிறைந்த அன்றைய பூமியை…

 

இதோ…
திக்கெட்டும் முற்றிப்போய் கிடக்கும்
பாவங்களையும் மனித உரிமை மீறல்களையும்
வன்முறைகளையும் வன்கொடுமைகளையும்
சுத்தமாக்க…

 

தான் சொன்ன சத்திய வார்த்தைகளுக்குள்
இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கும்
அந்த தேவன்… தேவதேவன்…

இங்கு மீண்டும் தேவை…
இன்று அவசியம் தேவை…

 

இந்த தினத்தில் பிறந்து
அன்று மூன்றாம் நாளில் விழித்தெழுந்த
அந்த இறைவனின் வருகைக்காக
ஆவலோடு காத்திருக்கிறேன்
உங்களைப்போல நானும்…

 

பிரியமானவர்களுக்கான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களோடு…

பிரியமுடன்…
பிரியன்..


யாரிருக்கா உனக்கு சொல்ல…

திசெம்பர் 23, 2008

 

பத்துபேரு கூடி நின்னு
பல்லாயிரம் தடவையின்னு
பால் பாலுன்னு சொல்லி வைச்சா..

பச்சத் தண்ணி இனிச்சிடுமா…
பாலப் போல ருசிச்சுடுமா…

 

என் மச்சானே…

ஒத்த சொல்லு நீ சொல்லி
முடிப்பதுக்குள்ளார
உசுர கூட வுட்டுடுவேன்…
உன் மூச்சு காத்தா சுத்திடுவேன்…

 

தாமரைப்பூ கொளத்துகுள்ள
மாமரந்தான் வளர்வதில்ல…

உன்ன விட்டா நெஞ்சுக்குள்ள
சத்தியமா யாருமில்ல…

 

வாசலுல கொட்டி வைச்ச
அரிசியத்தான் குருவி திங்கும்…

ஜோடி சேந்து பறக்குறப்போ
ஏனோ மனசு உன்ன எண்ணும்…

 

காலையில முழிச்செழுந்தா 
கண்ணு ரெண்டும்
உன்னத் தேடும்…

ராத்திரிக்கு தூங்கும் வர
வாசல் எட்டிப் பாத்து வாடும்…

 

நட்சத்திரக் கூட்டமெல்லாம்
நடுவானில் சுத்தி வந்தும்..

பாவம் அந்த நிலவுக்குத்தான்
எந்தவொரு துணையுமில்ல…

 

கட்டபொம்மன் உன் வருகைக்காக
காதலோட காத்துருக்கேன்…

காதுல என் கதைய மெல்ல
யாரிருக்கா உனக்கு சொல்ல…


வாசனையின் சுவை…

திசெம்பர் 17, 2008

  

அன்றொருநாள்
என் வீட்டிற்கு நீ
வந்தபொழுது…

எனது அறையெங்கும்
நிரப்பிவிட்டுச் சென்றாய்
உன் வாசனையை…

 

வேறு யாராலும் உணரமுடியாத
அந்த அழுத்தமான ஆழமான
தீர்ந்து போகாத
வாசனையின் சுவையை…

ரசித்து ரசித்து
நாள்தோறும் பருகிக்கொண்டே இருக்கிறேன்
என் மூச்சுக்கூட்டுக்குள்…

 

உன்னைப் பற்றிய நினைவுகளோடு
அந்த அறைக்குள்
நுழைகையில் எல்லாம்
என்னை தழுவிக்கொள்ளும்
அது மிருதுவாய்…

 

உன் பெண்மை கலந்த
அந்த சுக வாசனை
எங்கிருந்து புறப்படுகின்றது
என்பது மட்டும்
என்றும் ரகசியமாகவே
இருந்தது எனக்கு…

 

மற்றொருநாள் 
மீண்டும் என் வீட்டிற்கு நீ
வந்த பொழுது…

 

உன்னிடம் மெல்ல கேட்டேன் 
இந்த வாசனை புறப்படும் 
ரகசிய இடம் எதுவென்று…

 

அந்த நொடிப்பொழுதில்
பிரகாசமாகி 
பின் அமைதியாய் அருகில் வந்து…

என் இதயத்தில் கை வைத்து கூறினாய்
இதோ இங்கிருந்துதான் என்று…


இன்று – 12/12/2008…

திசெம்பர் 13, 2008

tn-07-al-4777-3

 

GV FILMS நிறுவனத்தின் தநா 07 அல  4777

  

இலட்சுமிகாந்தன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி இசையில் எனது இரண்டு பாடல்களோடு இன்று இசை வெளியீடு !


VIJAY ANTONY MUSIC !

திசெம்பர் 11, 2008

 

4777-scan-3

விஜய் ஆண்டனி மியூசிக் !

இன்று என் பிரியமான இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அவர்கள் தனது சொந்த இசை நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்கள்….

 

அவரது அதிகபட்ச படங்களில் பாடல்கள் எழுதிக் கொண்டிருக்கும் அவரது பிரியமான கவிஞன் என்ற முறையில் எனக்கு மிக மிக மகிழ்சி இது…

 

அதுவும் அவரது இசை நிறுவனம் முதல்முறையாய் வெளியிடும் தநா அல 4777     படத்திலும் எனது பாடல்கள் இருப்பதற்கான பெருமையில் இருக்கிறேன்…

 

” விஜய் ஆண்டனி சார் –  நமது நிறுவனம் உங்கள் மனம் போலவே அனைவரையும் கவரும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது… ” 

 

இன்னும் மேலும் மேலும் உயர்வதற்கான வாழ்த்துக்களோடும்…

ஆண்டவனிடம் அதற்கான வேண்டுதல்களோடும்…

தங்களுடன் இணைந்திருப்பதற்கான மகிழ்ச்சியோடும்…

தங்கள் வளர்ச்சியை கூட இருந்து பார்ப்பதற்கான நன்றிகளோடும்…

பிரியமுடன்…
பிரியன்…


முத்தங்கள்…

திசெம்பர் 11, 2008

 

கடன் போலல்ல முத்தங்கள்
பெறுவதை போல கொடுப்பதும் சுகமே…

 

வருமானம் போலல்ல முத்தங்கள்
வரவுகள் போல செலவுகளும் சுகமே…

 

பந்தயங்கள் போலல்ல முத்தங்கள்
ஜெயிப்பதை போல தோற்ப்பதும் சுகமே…

 

என் உதடுகள் இரண்டும்
உனக்கென குவிந்தே
முத்தங்களாய் மாறும்…

 

உன் உதடுகள் இரண்டும்
அந்த சில நொடிகளில்
வெட்கத்தால் நாணும்…

 

என் ரகசிய முத்தங்களுக்கு சொந்தக்காரியே…

மௌனமாய் வரிசையில்
காத்துக்கொண்டிருக்கின்றன
உனக்கு மட்டுமேயான
என் இனிப்பு முத்தங்கள்…

 

வார்த்தைகள் தாண்டி
உணர்த்தும் அவை
பாசத்தின் மொத்தங்கள்…


மல்லிகை நினைவுகள்…

திசெம்பர் 6, 2008

 

கூட்டமற்ற பேருந்தின்
ஜன்னலோர தொலைதூர
பயணத்தின் இடையில்…

என்னை அறியாமல்
ஒரு ஆழ மௌனத்திற்குள்
விழுந்துவிட்ட என் நினைவுகளை
மீட்டிக்கொண்டு வந்தது…

பக்கத்தில் இல்லாத
உன் மல்லிகை வாசனை…

 

எப்பொழுதும் அழகாய் இருக்கும் நீ
மல்லிகை சூடி வரும் நாட்களில்
பேரழகி ஆகிவிடுகிறாய்…

 

உனக்கும் எனக்குமான
சண்டைப் பொழுதுகளில்
என்னை சமாதானம் செய்வதற்கும்…

என்னிடம் ஏதாவது
காரியம் சாதிப்பதற்க்குமான
வேளைகளில் எல்லாம்
உன் கூந்தலில் காணலாம்
குண்டு மல்லிகை பூக்களை…

 

” உனக்கு மல்லிகை பிடிக்குமா
இல்லை என்னை பிடிக்குமா… ?  ” என
விவரமாக கேள்வி கேட்கும் உனக்கு…

மல்லிகை சூடிய உன்னை
என்று தெளிவாக
சமாளிக்க தெரியாதா எனக்கு…

 

குவிந்திருந்தாலும்
விரிந்திருந்தாலும் மல்லிகை…

துக்கத்தில் இருந்தாலும்
சந்தோஷத்தில் இருந்தாலும்
உன்னைப்போல அழகுதான்…


சொற்களின் வேண்டுகோள்…

திசெம்பர் 4, 2008

 

மனங்களே…
போதும்… போதும்…
வேண்டாம்… வேண்டாம்…

 

உங்கள் பூவிதழ்களில்
மலரும் சொற்களில்
முட்களை விதைத்து
நடமாடாதீர்கள் மண்ணில்…

 

வார்த்தைகளை விட வலிமையான ஆயுதமும்…
சந்தேகத்தை விட கொடுமையான தாக்குதலும்…
இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை இந்த உலகில்…

 

தோட்டாக்களின் வலி தாங்கும் இதயம்கூட
வார்த்தைகளின் வலியை தாங்குவதில்லை…

தோட்டாக்களின் ரணம் ஆறக்கூடும்…
வார்த்தைகளின் ரணம்…………

 

ஆம்… உண்மைதான்… 

வார்த்தைகளும் கண்ணாடிகளும் ஒன்றுதான்…
தவறி விழுந்துவிட்ட பின்
என்ன செய்தாலும் ஓட்ட முடியாது இரண்டையும்…

 

உங்கள் உதடுகளை தாண்டி
நெருப்பு பூசி வந்து விழுந்து விடுகிற
அந்த பிழையான வார்த்தைகள்…

சமாதானங்களாலும் மன்னிப்புகளாலும்
ஒருபோதும் சரியாகி விடுவதில்லை…

 

சந்தோஷ துக்கங்களைத் தாண்டி…
என்றும் நம் வாழ்வில்…

நிஜப்பிரியங்களை தவிர எதுவும்
முழுதாய் திருப்தியை தருவதில்லை…

 

அதனால் பிரியமாய் இருங்கள் எல்லோர் மீதும்…
எப்போதும் காயப்படுத்தாதீர்கள் உங்கள் பாசத்துக்குரியவர்களை…

 

பிரியம் ஒன்றே உறுதி செய்யும்
நம் இதயம் எப்படிப்பட்டதென்று…

 

என்றும் பிரியமுடன்…
பிரியன்…


மாறிவிட்டோம்…

திசெம்பர் 2, 2008

 

சாலையில் எதிர்படும்
முன்பின் அறியா குழந்தையை
வாஞ்சையோடு கொஞ்சினால்
சந்தேகப் படுகிறார்கள்…

 

மழைக்கு ஒதுங்கி நிற்கையில்
பதுங்கி நிற்கும் சக மனிதரை
நனையாதீர்கள் இப்படி வாருங்கள் என்றால்
ஒரு மாதிரி பார்க்கிறார்கள்…

 

தாமதமாகிப் போன இரவுகளில்
இல்லம் திரும்பிக் கொண்டிருக்கையில்
அவசர அவசரமாக
பதட்டத்துடன் சென்று கொண்டிருக்கும்
மனிதரை பார்த்து பரிதாபப்பட்டு
வண்டியில் வர சொன்னால்
பயந்து விலகுகிறார்கள்…

 

எப்பொழுது பார்த்தாலும் பரபரப்புடனும்
பக்கத்தில் இருப்பவன்மேல்
ஒருவித எச்சரிக்கை உணர்வுடனும்
சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்…

 

ஏன் இப்படி ஆனார்கள்…
எதற்காய் இப்படி சந்தேகப் படுகிறார்கள்…
இது என் ஊர்தானா…

 

முகவரி கேட்டு வந்தவர்களை
வீட்டுக்குள் அழைத்து
மோரும் நீரும் கொடுத்தனுப்பிய ஊர்தானா…

 

வாய் நிறைய புன்னகையுடன்
எல்லாரும் ஒன்றாய்
ஒரே குடும்பமாய்
எப்போதும் பாசமாய் சுற்றித் திரிந்த
என் ஊர்தானா…

 

இல்லை இல்லை…
இது என் ஊர் இல்லை…
என் ஊர் இல்லை…
என புலம்பியபடி நான் நடக்கையில்…
உள்ளிருந்து ஒரு குரல்…

 

ஊர் மாறவில்லை…
ஊரில் உள்ளவர்கள்தான் மாறிவிட்டார்கள் உன்னைப்போல்…
என்றது எனக்கு மட்டும்…

 

என்னது நான் மாறிவிட்டேனா…
இன்றுவரை எனக்கு
அப்படியேதும் தோன்றவில்லையே என நான்
என்னுள்ளே விவாதித்துக் கொண்டிருக்கும் வேளையில்…

 

மீண்டும் அதே குரல்…

ஆம் நீ மாறிவிட்டாய்…
இந்த ஊர் மக்களைப் போல
நீயும் மாறித்தான் விட்டாய்…

சின்னப் பிள்ளையில் இருந்து இளைஞனாய்…
மாற்றங்களைப் பற்றி எல்லாம் புலம்பும் சக மனிதனாய்…

 

பேசிக்கொண்டே இருந்தது அந்த குரல்…

என்னிடமோ வெற்று மௌனத்தைத் தவிர
பதிலாக்க ஒன்றுமில்லை…

உண்மைதான் நாம் மாறிவிட்டோம்…