நினைவுகளின் மணம்…

ஜூன் 27, 2008

 

உனக்காய் எரிந்துகொண்டிருக்கும்
நான் மெழுகுவர்த்தி அல்ல…
ஊதுபத்தி !

 

எரிந்தாலும் புகைந்தாலும்
கரைந்தாலும் கருகினாலும்
உன் நினைவுகளை மட்டுமே
மணமாகப் பரப்பிக்கொண்டிருக்கிறேன் !

 

என் எண்ணங்கள் மட்டும்
சாம்பலாய் விழுந்து கிடக்கின்றன
எனக்கான சுவடுகளாய்…


நிஜமான கற்பனை…

ஜூன் 25, 2008

 

எத்தனையோ பேர் வந்து போகையிலும்
தங்கிப்போகையிலும்
அமைதியாய் இருந்த என் இல்லம்…

 

நான் தனிமையில் இருக்கையில் மட்டும்
என்றோ நீ என்னுடன் இருந்த
என்னருகில் அமர்ந்த
காட்சிகளை எல்லாம்
கண்முன்னே அரங்கேற்றுகிறது !

 

என் அறைகள் முழுவதும்
நிறையும் உன் வாசத்தை
நினைவுகளில் சுமந்தபடியே
அமர்ந்திருக்கிறேன்
அசைவுகள் ஏதுமின்றி  !

 

அடிக்கடி எனக்கு மட்டும்
கேட்கின்ற உன் சிரிப்பு சத்தங்களும்
நீ அன்போடு என்னை அழைக்கும் அந்த சத்தமும்
இப்பொழுதெல்லாம் எனக்கு பழகிவிட்டது !

 

ஒருவேளை நீ நிஜத்தில்
என் முன் வந்து நின்றாலும்
பேசினாலும்கூட
இதுவும் கற்பனை என்று 
நான் உன்னை கடந்துபோகக்கூடும்
எச்சரிக்கையாய் இரு…


வெயிலின் பயணம்…

ஜூன் 23, 2008

 

வண்ணக் கதிர் வானம் விலகிட
வண்டித் தடம் பதிந்து வழிமாறும்
வெயிலின் பயணம் !

 

மஞ்சள் பூசும் 
மாலைநேர மர இடுக்குகளில் 
மெல்ல வழிந்துகொண்டிருக்கும்
இருளின் ஜனனம் !

 

தட்டுத் தடுமாறி
விட இடம் தேடி
அலைந்துகொண்டிருக்கும்
சில பறவைக் கூட்டம் !

 

இல்லம் சேர விரைந்துகொண்டிருக்கும்
வண்டிமாடுகளோடு…

அவைகளின் மணியோசைகளுக்கு  
அழகாய் தலையாட்டியபடி…

இருட்டும் சேர்ந்து அமர்ந்து
பயணம் செய்துகொண்டிருக்கும்…

ஒளிவீசிக்கொண்டிருக்கும்
அந்த சிவந்த லாந்தர் விளக்கை
முறைத்தபடியே…


எதிர்பாரா தருணத்தில்…

ஜூன் 23, 2008

 

எதிர்பாராமல் என்னை
எதிரில் கண்டு…

ஆச்சர்யத்தில் விரியும்
உன் அகண்ட விழிகளில்
அடக்க முடியாத
சந்தோசத்தை நிரப்பிக்கொண்டு…

மலர்ந்திருக்கும் மகிழ்ச்சியை
மனதிற்குள் மறைத்துக்கொண்டு… 

இயல்பாய் கேட்பதுபோல
“ என்ன இந்த பக்கம் “ என்கிறாய் !

 

நான் உன் முகத்தையே
உற்றுப்பார்க்க…

வெட்கம் சிந்தும் சிரிப்புடன்
சட்டென வேறு பக்கம் திரும்பிக்கொள்கிறாய் !

 

அடியே…
நீ திரும்பிய திசையெங்கும் 
திணறிச் சிதறுகிறது  
என்மேல் நீ கொண்ட காதல் !


காதலியின் கோலம்…

ஜூன் 23, 2008

 

பனித்துளிகளை வாரி இறைத்து
உடல் நனைய உடை உடுத்தி
குளித்த வாசனையுடன்
நீ வாசலில் இடும் கோலத்தைக் காணவே       
சீக்கிரமாய் வந்துவிடுகிறது இந்த விடியல்…

 

நிலவினை அரைத்து
நீள்வட்டக் கோடுகளாக்கி
விண்மீன்கள் பறித்து
புள்ளிகளாய் வைக்கிறாய் கோலத்தில்…

ஒன்றுமில்லை வானத்தில் !


கனவுகளின் இளைப்பாறுதல்…

ஜூன் 23, 2008

உன் உறக்கத்தில் மெல்ல நுழையும் 
என் அழகான கனவுகள் இளைப்பாற
உன் தலையணையின் ஓரத்தில்
எனக்கும் கொஞ்சம் இடம் விட்டுத் தூங்கு…

 

நீ விடும் சுவாசத்தினால்
உன் தனி வாசத்தினால்
அது இன்னும் அழகாகக்கூடும்
என்னைப் போல !


புகைப்படங்கள்…

ஜூன் 21, 2008