உன் வாசனை…

மார்ச் 30, 2010

 

உன் வீட்டைக் கடந்து செல்லும்போதே
நீ வீட்டுக்குள் இருக்கிறாயா இல்லையா என்பதை
என்னால் கண்டுகொள்ள முடியும்..

கோவிலெங்கும் நிறைந்திருக்கும்
கற்பூர வாசனை போல
நீ வீட்டில் இருக்கையில் எல்லாம்
எனக்கு மட்டும் வீசுகிறதே
உன் தனி வாசனை !

.


தன்னை உணர்தல்…

மார்ச் 25, 2010

 

காஞ்சிபுரத்துக் கோவில் கருவறைக்குள் காமபூஜை..
அடுத்தவர்களை கதவைத் திறக்கச் சொல்லி 
கமுக்கமாய் தன் கதவை 
அடைத்துக்கொண்டவனின் இச்சைக் கூத்து..
தியானநிலை பரவசம் என்ற பெயரில் ஆசிரமத்துக்குள்
போதையில் பாதை மாறிப் போன மனிதக் கூட்டம்..

என்ன நடக்கிறது இந்த சமூகத்தில்..
எங்கு போய்க்கொண்டிருக்கிறது இந்த மனிதம்..

சுத்த முட்டாளாகிக் கொண்டிருக்கிறார்கள் அனைவரும்
முட்டாளாக்கிக் கொண்டிருப்பவர்களை முழுதாய் நம்பி..

இருக்கின்ற ஒற்றை வாழ்க்கையை 
அர்த்தத்தோடு அழகாய்  
வாழ்ந்துவிட்டுப் போவதை விட்டுவிட்டு
தேவையற்றதை தேடி 
அசிங்கத்துக்குள் விழுந்து தொலைவது ஏன்..

முதலில்..
உண்மையான ஆன்மிகம் என்பது கடவுளைப் புரிதல்..
கடவுளைப் புரிதல் என்பதற்கு பொருள்
தன்னை உணர்தல்..

தன்னை உணர்ந்து.. தன் இலட்சியம் கொள்கைகள் நோக்கி
தெளிவாய் பயணிப்பவனைத் தேடி வருமய்யா கடவுள்..

தன்னை புரிந்து.. தன்னை நேசித்து.. தன்னை படித்து..
தன்னை தெளிவுபடுத்திக்கொள்ளும் எவனுக்கும்
வெற்றுத் தேடல் இருக்காது வேறு இடத்தில்..

குடும்பத்தோடும் சுற்றத்தோடும்
இன்பதுன்பம் பகிர்ந்து பிரியம் கொடுத்து வாங்கி 
நிம்மதியாய் நிமிடங்களைக் கழிக்காமல்
நாளெல்லாம் நாயாய் ஓடிக்கொண்டிருந்தால்
ஒரு கட்டத்தில் எதுவும் பிடிக்காமல்போய்
இப்படித்தான் ஏதாவது 
பைத்தியக்காரத்தனம் தோன்றும்..

என் சக மனமே..
இனியாவது திருந்து..

கடவுளைப் புரிந்து கொள்வதாய்ச் சொல்லி
கண்டவன் காலில் விழுவதைவிட  
உன்னைப் புரிந்துகொண்ட
உனக்கான வாழ்தலை
உயிர்ப்போடு வாழ்ந்துபார்
அதுதான்.. அந்த உன்னதமான 
உண்மையான வாழ்க்கைதான் கடவுள்…

.

நானும் ஆன்மீகக்காரன்தான்.. அதற்காய் ஆர்வக்கோளாரில் அளவுமீறிச் செல்பவன் அல்ல… தவறுகள் சுட்டிக் காட்டப்பட வேண்டும்.. அதில் தவறே இல்லை… பொய்களெல்லாம் இப்படித்தான் ஒருநாள் கேவலமாய்  வெளிப்படும்..  உண்மையான ஆன்மீகம் என்றும் சத்தியத்தோடு நிலைக்கும்…

உண்மை வேண்டி…

பிரியமுடன்…
பிரியன்…

.


நீ உறங்கும் மெத்தை…

மார்ச் 22, 2010

 

இருந்தாலும் நீ தினம் படுத்துறங்கும் மெத்தை
ரொம்ப திறமைசாலிதான்..

உன் மொத்த அழகையும் சுமந்தும்
இன்னும் அது எப்படி சும்மா இருக்கிறது..

நீ தூங்கி எழுந்து சென்று விட்ட
ஒரு பொழுதில்தான் உணர்ந்தேன்
அது உன் அழகை தாங்க முடியாமல் 
மூர்ச்சையாகிக் கிடப்பதை…

.


இன்று – 19 / 03 / 2010

மார்ச் 19, 2010
 
 
 
செவன்த் சேனல் தயாரிப்பில்.. 
மகிழ்த்திருமேனி இயக்கத்தில்..
தமன் இசையில்..
 
“இன்றே இன்றே…” ,  “மனதின் அடியில்…” ,  ” முன்தினம் பார்த்தேன்…”  மற்றும் “கனவினைப்போல…” ஆகிய எனது நான்கு பாடல்களோடு முன்தினம் பார்த்தேனே திரைப்படம் வெளியீடு !
 
.

சொல்லக்கூடாத உண்மை…

மார்ச் 8, 2010

 

இந்தக் கவிதை சொல்லக்கூடாத ஒரு உண்மை.. பலர் சொல்லத் தயங்கிய உண்மை..   உண்மையில் சொல்லப் பட வேண்டிய உண்மை !

எந்த படைப்பாளியும் தொடுவதற்குத் தயங்குகிற திசை இது..  ஆனால் யாராவது ஒருவர் தொட்டாக வேண்டிய அவசியம் மிக்கதும் இதுதான் !

இதுவரை எனது கவிதைகளுக்கு நிறைய பெண் ரசிகைகள் இருக்கிறார்கள்.  இந்தக் கவிதைக்குப் பிறகு அப்படித் தொடர்ந்து இருப்பார்களா என்பது சந்தேகம்..   இருந்தால் சந்தோஷம் !

என் வார்த்தைகளில் எங்கேனும் முரட்டுத்தனம் தெரிந்தால் அதற்காய்  வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன், ஆண்மைத் திமிர் தெரிந்தால்  மன்னிக்க வேண்டுகிறேன் !

இனி கவிதைக்குள்….

இனிய பெண் தோழிகளே.. நவயுக தேவதைகளே..
நகரும் அருவிகளே.. வளர்ந்த நிலாக்களே..
கொஞ்சம் பேச வேண்டி இருக்கிறது உங்களுடன்..  
கார சாரமாய்..

இனி வருபவை உங்கள் அனைவரைப் பற்றியும் அல்ல..
உங்களில் சிலரைப் பற்றி !

ஆள் பாதி ஆடை பாதி என்ற பழமொழியை
நீங்கள் தப்பாய் புரிந்து கொண்டீர்கள் எனத்  
தோன்றுகிறது எனக்கு !

இப்போதெல்லாம் ஆடை பாதி ஆள் மீதிஎன 
நீங்கள் திரிவதைக் காண முடிகிறது !

இயற்கையின் படைப்பில் 
அழகானவர்கள் நீங்கள் என்பதை 
என்றும் மறுப்பதற்கில்லை..

ஆணினம் அனைத்தும் உங்கள் விழியசைவுகளில் 
விழுந்து விடுவதும் உண்மை !

அப்படி இருக்க 
அரைகுறை ஆடைகள் அணிவதன் மூலமும் 
அங்கத்தின் பாகங்கள் அப்படியே தெரிய 
வலம் வருவதன் மூலமும்
எதை உணர்த்த விரும்புகிறீர்கள் நீங்கள் ?

உங்கள் அழகை மெருகூட்டுவதற்காய் எனச் சொல்லி
எடைக் குறைப்பு செய்கிறீர்கள்..
அது உங்கள் தனிப்பட்ட விஷயம் !

ஆனால் உடைக் குறைப்பு செய்வது 
தனிப்பட்ட விஷயம் இல்லையே !

சேலையின் அசவ்கர்யம் தவிர்க்க 
நீங்கள் சுடிதாருக்கும், ஜீன்சுக்கும் 
மாறியதை வரவேற்கலாம் !
அத்தோடு நில்லாமல்..

கை வைக்காத மேல் சட்டையின் கை இடுக்கு இடைவெளிகள்..
மேல் உள்ளாடை தெரிகின்ற சன்னமான குர்தாக்கள்..
கைகளைத் தூக்கினால் எடுப்பாய் இடுப்பு பிரதேசங்கள் 
தெளிவாய்த் தெரிகின்ற டைட் ஷர்ட்டுகள்..
கீழ் உள்ளாடை தெரிகின்ற லோ வெஸ்ட் ஜீன்சுகள்..
இறுக்கிக் காட்டும் மார்புப் பகுதியில் 
ஏடாகூடமான வார்த்தைகள் பதித்த டி ஷர்ட்டுகள்..

இப்படி உங்களை அங்குலம் அங்குலமாய் 
அடுத்தவர்களுக்குக் காட்டுவதன் மூலம் 
என்ன சொல்ல வருகிறீர்கள் ?

உடல் பிதுங்கி 
அங்கங்கள் அங்கங்கே அப்படியே
அப்பட்டமாய் திமிறித் திணறி நிற்க 
நீங்கள் அணியும் உடைகள் 
உங்களுக்கு அப்படி என்னதான் தருகின்றன ?

உங்களின் ஜன்னல்களை 
நீங்களே திறந்து வைத்து விட்டு 
ஆண்களின் கண்களை மட்டும் 
கதவடைக்கச் சொல்வதில் என்ன நியாயம் ?

அதற்காய் ஆண்கள் அத்தனை பேரையும் 
நான் ராமனாக்கவில்லை !

உண்மையில் ராமனே சீதையை சந்தேகித்து 
தீயில் இறங்கச் சொன்ன
சராசரி மனிதன்தானே  !

இருந்தும் கடந்த சில வருடங்களாக
அதிகமாய் சமூகத்தை கெடுத்திருப்பவை 
பாலியல் குற்றங்கள்தான் !

இவை எப்படி நிகழ்கின்றன ?
பத்து வயது சிறுமியை 
பலாத்காரம் செய்கிற வன்மம்
எப்படி முளைத்தது ?

உண்மையில் ஊரெங்கும் உலவும் 
உங்கள் தேகம் பிதுக்கும் உடைகள் காட்டும்
உடல்களின் இடைவெளிகள் கண்டுக் கண்டு 
பழுதடைகிற நெஞ்சம்..

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் 
தனிமையின் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு 
ராட்சச விஷ்வரூபம் எடுத்து 
மொத்தமாய் வரம்பு கடந்து
தன வன்மத்தைத் தீர்த்துக் கொள்கிறது !

அத்தனைக்கும் காரணம் 
நீங்கள்தானென சொல்லவில்லை..
முக்கியக் காரணமாய் நீங்கள்….

அதற்காய் உங்களை 
ஆடைக் கூண்டுகளுக்குள் 
அடைந்து கிடக்கச் சொல்லவில்லை..

அநாகரீகமற்ற..  அடுத்தவர் கண்கள் கூசாத..
ஆண்கள் அவதிப்படாத ஆடைகளை..
முகத்தைத் தாண்டி மற்றதைப் 
பார்க்கத் தூண்டாத நாகரீக உடைகளை..
நீங்கள் அணிவதால் 
எந்த விதத்திலும் குறைந்து விடப் போவதில்லை..

அங்கம் காட்டவில்லை என்பதற்காய் 
ஆண்களும் உங்களைப் பார்க்காமல் இருக்கப் போவதில்லை !

அதனால் உங்கள் உடைகளை உன்னதமாய் உடுத்தி 
இனி வரும் சமூகத்தை 
பாலியல் வக்கிரங்களில் இருந்து 
கொஞ்சம் காப்பாற்ற உதவுங்கள்..

ஏன் எனில் என்றும் புனிதமானவர்கள் நீங்கள் !
எங்களுக்கு மிகவும் முக்கியமானவர்கள் நீங்கள் !
எங்களின் தலைமுறைகளைப் படைக்கப் போகிறவர்கள் நீங்கள் !
எங்களின் நேற்றும் இன்றும் நாளையும் நீங்கள் !!!

இது ஒரு ஆண் பெண்கள் மீது போடுகின்ற பழியும் அல்ல..  சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சாடுகின்ற இகழ்ச்சியும் அல்ல..

ஒரு நண்பன் தோழிகளுக்குக் கூறும் அன்பான அறிவுரை !  ஒரு கவிஞன் சொல்லத் தவித்த கசப்பான உண்மை !  ஒரு படைப்பாளி தன பெண்  சமூகத்தை விழிப்படைய வைக்கச் செய்யும் சின்ன முயற்சி !

பலிக்கும் என்ற நம்பிக்கையோடும்.. மகளிர்தின நல்வாழ்த்துக்களோடும்..

பிரியமுடன்…
பிரியன்…

.


இன்று 05 / 03 / 2010

மார்ச் 5, 2010

 

சதீஷ் இயக்கத்தில்..

சாஜன் மாதவ் இசையில்..

எனது “குறுகுறு பார்வை..” மற்றும் “கொட்டி வைச்ச தீயா..” இரண்டு பாடல்களோடு..

“வீரசேகரன்”  திரைப்படம் வெளியீடு…

.


இன்று – 01 / 03 / 2010

மார்ச் 1, 2010

இயக்குனர் A.வெங்கடேஷ் அவர்களது பள்ளியைச் சேர்ந்த ஸ்டீபன்  இயக்கத்தில்..

“சொல்லாமலே” படத்திற்காக தமிழக அரசு விருது பெற்ற  பாபி இசையில்..

எனது மூன்று பாடல்களோடு..

மார்கழி 16 திரைப்படத்தின் பாடல்கள் வெளியீடு..

.