சிதறிக்கிடக்கும் நினைவுகள்…

பிப்ரவரி 24, 2010

 

சின்னக் குழந்தைகள் இருக்கும் வீடெங்கும்
சிதறிக் கிடக்கும் பொருட்கள் போல
என் மனமெங்கும் சிதறிக் கிடக்கின்றன
உன் நினைவுகள் !

.


மோட்சம்…

பிப்ரவரி 19, 2010

 

காதலிக்குள் இருந்த மனைவியையும்
காதலனுக்குள் இருந்த கணவனையும்
கண்டு கொண்ட மனதால்..

மனைவிக்குள் இருக்கும் காதலியையும் 
கணவனுக்குள் இருக்கும் காதலனையும்
கண்டுகொள்ள முடிந்தால்..

அதுதான் வாழும்போதே காணும் மோட்சம் !

.


பிடிவாதக்காரனும் பிடிவாதக்காரியும்…

பிப்ரவரி 13, 2010

 

காதல் எப்போதும் அடம் பிடிக்கின்ற குழந்தையாகவே இருக்கின்றது… அதில் அடிக்கடி இருவரும் பிடிக்கின்ற பிடிவாதம்தான் அழகாகிறது…

காதலனுக்கும் காதலிக்கும் இடையிலான.. ஒரே தருணத்தில்.. இருவரின்  மனநிலையையும் அழகாய் விவரிக்கும் கவிதை இது…
 

காதலியின் பார்வையில் –  பிடிவாதக்காரன்…

காதலனின் பார்வையில் –  பிடிவாதக்காரி…
 

ஒரே இடம்… ஒரே சூழல்… ஒரே நிகழ்வு… ஆணின் மனநிலை… பெண்ணின் மனநிலை… ரசியுங்கள்… ரசியுங்கள்…

உண்மைக் காதலர்களுக்கான காதலர் தின வாழ்த்துக்களோடு…

பிரியமுடன்…
பிரியன்…

 

.


பிடிவாதக்காரன்…

பிப்ரவரி 13, 2010

 

முதல் முறை 
எனக்காக நீ காத்திருக்கும் பொழுது..
இனம் புரியா இன்ப அவஸ்தை
எனக்குள் நிகழ்த்தி விட்டாய்…

முதல் முறை
நீ என்னைப் பார்த்த பொழுது..
நெஞ்சுக்குள் இடி மின்னல்
மழை கொட்டிச் சென்று விட்டாய்…

முதல் முறை  புன்னகையை
நீ வீசிச் சென்ற பொழுது..
மனதிற்குள் நிலநடுக்கம்
நீ நடத்தி வைத்து விட்டாய்…

முதல் முறை  ஒரு வார்த்தை
நீ பேசிச் சென்ற பொழுது..
ஒட்டு மொத்த மௌனம் வந்து
எனைத் தாக்கச் செய்து விட்டாய்…

முதல் முறை  சம்மதத்தை
என்னிடம் நீ சொன்ன பொழுது..
உயிர்த்து எழும் மெய் சிலிர்ப்பில்
மூழ்கடித்து நகர்ந்து விட்டாய்…

முதல் முறை என்னை
நீ திட்டி விட்ட பொழுது..
இதயத்தின் மத்தியில்
விரிசல்கள் விழ வைத்தாய்..

முதல் முறை  உந்தன்
கைக்கோர்த்து நடக்கும் பொழுது
ஊர் பார்க்கும் பெரும் பயத்தை
உள்ளுக்குள் விதைத்து விட்டாய்…

சலிக்காது இத்தனையும்
தாங்கி உனை காதலனாய்
நானின்று கொண்ட பின்னும்..

ஒரே ஒரு முத்தமதை
என்னிடம் நீ கேட்கும் பொழுது..
வெட்கமுண்டு பெண்மைக்கு
என்பதை மட்டும் மறந்து
தொடர்ந்து நச்சரிக்கிறாயே..

இருந்தாலும் சரியான
பிடிவாதக்காரன் நீ…

.


பிடிவாதக்காரி…

பிப்ரவரி 13, 2010

 

ஒரே ஒரு முறை
உன்னை பார்த்து விடுவதற்க்காய்..
ஒவ்வொரு நாளும் என்னை
சாலை முனைகளில் மணி நேரம்
காத்திருக்க வைத்தாய்…

ஒரே ஒரு உன் ஓரப் பார்வை
என் மேல் விழுவதற்க்காய்..
ஒவ்வொரு நொடியும் எனை
ஏக்கத்தோடு நிற்க வைத்தாய்…

ஒரே ஒரு உன் புன்னகை
என்னை வசீகரிப்பதற்க்காய்..
ஒவ்வொரு தடவையும் எனை
துடித்துத் தவிக்க வைத்தாய்…

ஒரே ஒரு வார்த்தை
நீ என்னோடு பேசி விடுவதற்காய்..
ஓராயிரம் முறை என்னை
திக்கித் திணற வைத்தாய்…

ஒரே ஒரு சம்மதம்
நீ சொல்லி விடுவதற்க்காய்..
ஓயாமல் எப்போதும்
உன் பின்னால் திரிய வைத்தாய்…

ஒரே ஒரு முறை
உன்னைத் திட்டி விட்டதற்க்காய்..
பல இரவுகள் உறங்காது
எனை அழுது புரள வைத்தாய்…

ஒரே ஒரு முறை
உன் கைக் கோர்த்து நடப்பதற்க்காய்..
ஒன்றரை மணிநேர
தொலைப்பேசி புலம்பல் வைத்தாய்…

சலிக்காது இத்தனையும்
செய்து உனை காதலியாய்
நானின்று கொண்ட பின்னும்…

ஒரே ஒரு முத்தமதை
உன்னிடம் நான் கேட்டதற்க்காய்..
ஓராயிரம் தடவை என்னை
கெஞ்சி சிணுங்க வைக்கிறாயே…

இருந்தாலும் சரியான
பிடிவாதக்காரி நீ…

.


இன்று – 12 / 02 / 2010

பிப்ரவரி 12, 2010

 

 

 

விஜய் ஆண்டனி இசையில்..   வித்யாதரன் இயக்கத்தில்..  

நான் உன்னைப் பார்க்கும் நேரம் நீ மண்ணைப் பார்ப்பதேனோ..” மற்றும்

“கோடி கோடி மின்னல்கள் கூடிப் பெண்மை ஆனதே..”  ஆகிய எனது இரண்டு பாடல்களோடு..  

“ரசிக்கும் சீமானே”  திரைப்படம் வெளியீடு…

.


கனவில் வந்த வேந்தன்…

பிப்ரவரி 7, 2010

 

காற்றையும் இருளையும் கிழித்துக்கொண்டு
வெளிச்சத்தோடு வேகம் கொண்டு பாயும்
வெண்ணிறப் புரவியில் ஏறி வரும்
வேந்தனாய் உனை என்
கனவில் கண்டு கண் விழித்தேன்..

நீயோ ஒரு குழந்தையைப் போல
அமைதியாய் உறங்கிக்கொண்டு இருக்கிறாய் 
மெலிதாய் என்னை அணைத்தபடி !

எனக்கென்னவோ அந்தக் கனவைவிட
இந்த நிஜம்தான் 
ரொம்பப் பிடித்திருக்கிறது…

.


உன் வீட்டுப் பூக்கள்…

பிப்ரவரி 2, 2010

 

உன் வீட்டு கொல்லைப்புறத்துப் பூக்களுக்கு மட்டும்
தனி வாசனை இருப்பதன் ரகசியம்
இப்போதுதான் தெரிந்தது எனக்கு..

தினமும் அவை
நீ குளிக்கும் நீரில் அல்லவா வளர்கின்றன..

.