மனம் கவரும் மழை…

நவம்பர் 27, 2009

 

மழைக் காலம் வந்து விட்டால் போதும்..
தானாய் மனது இதமாகி விடுகிறது..

சில நேரங்களில் உள்ளாடை நனையும் வரை
மணிக்கணக்கில் சொட்டச் சொட்ட நிற்கப் பிடிக்கிறது..

சில நேரங்களில் வாசலில் அமர்ந்து
அமைதியாய் ரசிக்கப் பிடிக்கிறது..

சில நேரங்களில் தலை நனைய தனியே
சாலையில் நடக்கப் பிடிக்கிறது..

சில நேரங்களில் மௌனமாய் புல்தரையில்
மல்லாந்து படுத்து தூறல்களை
ஒவ்வொன்றாய் எண்ணப் பிடிக்கிறது..

சில நேரங்களில் ஜன்னலோர சாரல்களை
முகத்தில் வாங்கி சிலிர்க்கப் பிடிக்கிறது..

சில நேரங்களில் துள்ளி விழும் துளிகளின்
சந்தோஷ சங்கீதம் கேட்கப் பிடிக்கிறது..

சில நேரங்களில் மழையை ரசித்து..
சில நேரங்களில் மழையை ருசித்து..

சில நேரங்களில் மழையை அடித்து..
சில நேரங்களில் மழையை குடித்து..

சில நேரங்களில் மழையை படித்து..
சில நேரங்களில் மழையை பிடித்து…

மழையில் நனைந்து.. மழையில் கரைந்து..
மழையில் இணைந்து.. மழையில் கலந்து..

முடிவில் மழையாகவே மாறிவிடத்தான் 
பிடிக்கிறது எனக்கு…

.


இயக்குனர் ஷங்கருக்கு நன்றிகள்…

நவம்பர் 20, 2009

 

shankar

 

“நினைத்தாலே இனிக்கும்” படத்தில் அடியேன் எழுதிய “செக்சி லேடி..” பாடலைப் பற்றி வேட்டைக்காரன் இசை வெளியீட்டு விழாவில் புகழ்ந்து பேசிய பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அவர்களுக்கு என் மகிழ்ச்சி கலந்த நன்றிகள்…

 

.


அருள் புரிவாய் ஆதியே..

நவம்பர் 12, 2009

 

சுற்றிப் படர்கின்ற எண்ணமழித்து..
சூட்சுமப் பொருளின் அர்த்தம் உணர்த்தி..

அத்தனைக்கும் ஆதாரமான  
ஆனந்த மூலமதை 
அப்படியே அள்ளிப் பருகி..

அனைத்திலும் கலந்து.. அனைத்திலும் நிறைந்து..
அனைத்தையும் கடந்து.. அனைத்துமாகி.. 
அழிவற்று இருக்க அருள் புரிவாய் ஆதியே..

 

.

 


காலை நேரச் சாலை…

நவம்பர் 5, 2009

 

வேலை நாளொன்றில் கண் விழித்த 
அந்த பிரதான சாலையின் மத்தியில்.. 
முந்தைய இரவில்.. 

அடையாளம் தெரியாத வாகனத்தால் 
அடித்துக் கொல்லப்பட்டு.. 
பின் வரும் வாகனங்களால் 
பிய்த்து எறியப்பட்டு..  

சின்னா பின்னமாய் சிதைந்து கிடக்கிறது 
பெயர் தெரியாத ஒரு நாய்க்குட்டி !

 

அது வீட்டு வளர்ப்போ.. 
அல்லது தெரு வளர்ப்போ.. 
கட்டி வைத்தக் கயிறை 
அவிழ்த்துக் கொண்டு வந்த அவலமோ.. 
வேறொரு நாயைக் கண்டு 
எல்லைத் தாண்டியதால் வந்த விபரீதமோ.. 
தெரியாது..

 

ஆனால்.. 
அடிப்படை உடல் அமைப்புக் கூட 
அப்பளமாய் நொறுங்கிப் போக 
இங்கே நசுங்கிக் கிடக்கிறது அது !

 

அந்த நேரத்தில்  
சாலையோரத்தில் தேங்கிய நீரில் 
அவசரக் குளியல் போட வந்த 
அத்தனைக் காகங்களுக்கும் 
அடித்தது யோகம் !

 

இன்று அவைகள் 
வேறெங்கும் அலைந்து திரிய வேண்டியது இல்லை 
காலை உணவுக்காய்..

 

ஆனால் அவை ஒரு குட்டிச் சதையை 
சாலை மத்திக்குச் சென்று 
கொத்தித் தின்பதற்க்குள்.. 
விரைந்து வரும் இருபது வாகனங்களில் இருந்து 
தப்பித்து உயிர் பிழைக்க வேண்டி இருந்தது !

 

தலைத் தெறிக்க ஓடிக் கொண்டிருக்கும் வாகனங்களின் 
ஒன்றுக்கும் மற்றொன்றுக்குமான இடைவெளிகளில் 
அவை பார்த்துப் பார்த்து பறந்து கொண்டிருந்தன 
தமக்கு கிடைத்த இரை மீதான இலக்குடன் !

 

சட்டென ஒரு சத்தம்.. 
சின்னதாய் ஆனால் தெளிவாய்..
பகிர்ந்துண்ண பறந்துக் கொண்டிருந்த 
காகங்களில் ஒன்று.. 
பார்வையற்ற பழைய வண்டியில் மோதி 
பரிதாபமாய் இறந்து கொண்டிருந்தது !

 

வேலைநாள் காலை அவசரத்தில் 
சுழன்று கொண்டிருக்கும் மக்களுக்கு 
சக மனிதர்களே கண்ணுக்குத் தெரியாது.. 
பாவம் இந்தக் காகமும் நாயும் எம்மாத்திரம் !

 

பசியோடு ஒவ்வொரு நொடியும் 
உயிரோடு போராடி 
அடுத்து வரும் வாகனங்களில் 
எந்த நொடியிலும் 
அடிபடலாம் என்ற சூழலிலும்.. 

தன் உணவுக்காய் உயிரைப் பணயம் வைத்து 
பறந்து கொண்டிருக்கும் 
இந்தக் காகங்களைப் பார்த்தவுடன் 
ஒன்று தோன்றியது !

 

ஒவ்வொரு நிமிடமும் 
செத்துச் செத்து பிழைக்கும் 
இந்தக் காகங்களை விட.. 

ஒரே நிமிடத்தில் 
அடிபட்டுச் செத்துப் போன 
அந்த நாய்க்குட்டி அதிர்ஷ்டசாலி !

 

 

 

இறுதியாய் எனக்கொரு கவிதையைத் தந்து விட்டு இறந்து போன அந்த  நாய்க்குட்டிக்கும் காகத்துக்கும் எனதுக் கவிதாஞ்சலி !

 

.