உண்மை…

ஜனவரி 26, 2009

 

நதியில் விழுந்து நகர்வதா
வெறும் தரையில் விழுந்து உருள்வதா என்பதை..

எப்போதும் தீர்மானிப்பது
இலைகள் இல்லை காற்று !


நுண்ணிய இடைவெளி…

ஜனவரி 22, 2009

 

உனக்கும் எனக்குமான
பழகுதல் நாட்களில்..

நமக்கே தெரியாமல் நமக்கிடையில் விழுந்து
நம்முடனே பயணிக்கும்
நுண்ணிய இடைவெளி..

மிக மிக அபாயகரமானது !

 

சட்டென்று சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு..
உள்ளார்ந்த உறவுகளுக்கு இடையில்
விரிசலை உண்டாக்குவதில்
அது கை தேர்ந்தது…

 

ஒரு இதயம் காயப்பட்டிருக்கும் நேரத்தில்..
அதற்கு மருந்திட மனமில்லை என்றாலும்..

மேலும் காயமாக்கிவிட்ட இன்னொரு இதயத்தின்
சூழ்நிலை செயல் வழி..

விரிசலை உண்டாக்குவது
அதற்கு எப்பொழுதும் ரொம்ப பிடிக்கும்…

 

 இதை சரி செய்ய..
நமக்கிடையிலான ஆழப்புரிதல்கள் அன்றி
வேறு வழியே இல்லை…

 

என் முத்தங்களையும் கொஞ்சல்களையும்
எப்பொழுதும் ஏற்றுக்கொள்ள முடிந்த உன்னால்..

என் கோபங்களையும் திட்டுக்களையும்
கடந்து செல்ல முடியாமல் போகையில் எல்லாம்..

எங்கிருந்தோ வந்து
நமக்கிடையில் அமர்ந்து விடுகிறது
இந்த இடைவெளி !

 

 

உன்னை கொஞ்ச உரிமை கொண்ட
என் உதடுகளுக்கு..

திட்டவும் உரிமை உண்டென நான்
நினைத்துக்கொண்டிருக்கும் வேளைகளிலும்..

யார் யாரோ என் மேல் திணித்த
கனத்த வலிகளின் சுமைகளுக்கான
ஆறுதலாய் நீ இருப்பாயென..

உரிமையோடு உன்மீது நான் கோபப்பட்டு
உன் ஆற்றுதல் கிடைக்குமென
நான் நினைக்கும் வேளைகளில்..

உன் மீது கோபப்பட்டதற்க்காய்
நீ வருந்த நேர்கையில் எல்லாம்..

கொஞ்ச இருக்கும் உரிமை
கோபப்பட இல்லையோ என
மனம் நினைக்கும் மறுநொடியில்..

மத்தியில் வந்து மௌனமாய்
அமர்ந்துவிடுகிறது அதே இடைவெளி..

 

இந்த நுண்ணிய இடைவெளி
எப்போதும் தனது வலிமையை காட்ட
கிடைக்கும் வாய்ப்புகளுக்காக
காத்துக்கொண்டிருக்கிறது….

 

நமது புரிதல்களின் ஆத்மார்த்த பிணைப்புகள் அன்றி
அவற்றை யார் என்ன செய்ய முடியும்…

 

எனவே என் இணையே..
மிக மிகக் கடினமானதுதான் என்றாலும்..

என்னை நீயும் உன்னை நானும்
இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம்
ஆழப் புரிந்துகொள்வோம்..

 

இந்த நுண்ணிய இடைவெளியின்
எதிர்பாரா தாக்குதல்களில் இருந்து
எப்படியாவது தப்பிக்க…

 

இல்லையென்றால்..
நம் காதலை நம்மால் கூட
காப்பாற்ற முடியாமல் போகக் கூடும்……


நிஜப் பூக்கள்…

ஜனவரி 18, 2009

 

நந்தவனங்களில் மட்டும் இல்லை
நடைபாதைகளில் பூத்தாலும்
பூக்கள் அழகுதான்..

நம் சேரிக் குழந்தைகள் போல…


சக்தி மிக்க பொங்கல்…

ஜனவரி 14, 2009

 

தீமைகளைக் கண்டால்
தீயாகி எரித்து..
மனதை என்றும்
சுத்தமாக்கி வைத்து..
புனிதமாய் வாழ்பவனின் போகி…..

 

கடன் வாங்கி பயிர் செய்து
பசியோடு அடுத்தவன் வயிறு நிரப்பும்
எம் பாசமான உழவனின் வீட்டுப் பொங்கல்..

 

உழைத்துக் களைத்த கால்நடைகளின்
கால்கள் தொட்டு வணங்கி..
ஜல்லிக்கட்டில் துள்ளித் தெரியும்
காளைகளை அடக்கி..
நெற்றிப் பொட்டில் வெற்றி திலகமிடும்
எம் ஊர் இளைஞனின் மாட்டுப் பொங்கல்…..

 

சுற்றம் நட்பு உள்ளம் குளிர
இன்பம் பகிர்ந்து..
துன்பம் துடைத்து..
என்றும் மற்றவர்க்கு
துணையாய் நிற்பவனின் காணும் பொங்கல்…..

 

பொங்கல் பொங்கல்..
பொங்கலோ பொங்கல்…..

பொங்கல் பொங்கல்..
பொங்கலோ பொங்கல்…..

 

அது சரி…..

வீட்டுக் குக்கரில் அரிசி கொட்டி..
கேஸ் அடுப்பில் நெருப்பை ஏற்றி..
சூரியின் எழுந்த நெடுநேரம் கழித்து எழுந்து..
பெயருக்கு பொங்கலோ பொங்கல் சொல்லி..
சம்பிரதாயத்திற்க்காய் சாமி கும்பிடும்
வறண்ட மனங்களுக்கு எதற்கு…

சாமானியன் கொண்டாடும்
சக்தி மிக்க பொங்கல்………


எங்களுக்கில்லை வட்டம்…

ஜனவரி 13, 2009

 

மீன்களை நடக்கச் சொல்லாதவர்கள்..
மான்களை பறக்கச் சொல்லாதவர்கள்..

 

சூரியனை உடையச் சொல்லாதவர்கள்..
சந்திரனை உருகச் சொல்லாதவர்கள்..

 

காற்றை கரையச் சொல்லாதவர்கள்..
கடலை கருகச் சொல்லாதவர்கள்..

 

மலரை அழச் சொல்லாதவர்கள்..
மலையை விழச் சொல்லாதவர்கள்..

 

இரும்பை இனிக்கச் சொல்லாதவர்கள்..
உடம்பை மிதக்கச் சொல்லாதவர்கள்..

 

ஏன் சொல்கிறீர்கள்..

கவிஞர்களை மட்டும்
உங்களைப் போல்
வட்டத்துக்குள் வாழ…


இன்று – 09/01/2009…

ஜனவரி 9, 2009

 

aaaeeemoviestills3

 AVM நிறுவனத்தின் ௮.. ஆ.. இ.. ஈ..

 

சபாபதி இயக்கத்தில், விஜய் ஆண்டனி இசையில் எனது இரண்டு பாடல்களோடு படம் வெளியீடு !


அழுவதின் சுகம்…

ஜனவரி 6, 2009

எப்போதும் சிரித்துக்கொண்டே
சந்தோஷித்திருக்கத்தான் ஆசை எல்லோர்க்கும்..

அழுவதின் சுகம் அறியாதவரை…


என்ன செய்ய முடியும்…

ஜனவரி 6, 2009

தீப்பொறிகளுக்கு இடையில்
தவறி விழுந்துவிட்ட பனித்துளி..
பாவம் என்ன செய்ய முடியும்…

உருகி இளகி கடைசியில்
கரைந்து போவதைத் தவிர…

 

என் முத்தங்களுக்கு இடையில்
விரும்பி விழுந்துவிட்ட உன் உதடுகள்..
பாவம் என்ன செய்ய முடியும்…

வெட்கித் திணறி கடைசியில்
ஒன்றிவிடுவதைத் தவிர…


விருக்க்ஷா…

ஜனவரி 1, 2009

vrksa

 அப்பா…

ஆசையோடு நீங்கள் வளர்த்து வரும் உங்கள் விருக்க்ஷா கலைக்கூடம் இன்று முதல் புதுப் பொலிவு எடுத்திருக்கிறது…

www.wire2craft.com

www.vrksa.net

http://www.vrksa.blogspot.com

 

அதற்கான வாழ்த்துக்களோடு…

பிரியமுடன்…
பிரியன்…


புத்தாண்டுப் பரிசு…

ஜனவரி 1, 2009

 

பூக்கள்.. இனிப்புகள்..
விலை உயர்ந்த பல பரிசுகள்..
இவைகளுக்கு இடையில்…

 

இந்த புத்தாண்டுக்கான பரிசாய்
நீங்கள் விரும்பினால்
பிரியத்தோடு கொடுங்கள்
உங்கள் செல்லப் புன்னகைகளில் ஒன்றையும் சேர்த்து…