சிப்பியா நத்தையா….

மார்ச் 28, 2009

 

இருப்பது கடலில்தான் என்றாலும்
நத்தைகளும் சிப்பிகளும் ஒன்றாவதில்லை…

 

தேடல் கொண்ட சிப்பிகள்
முத்துக்கள் ஈணும்…

கொள்கையற்ற நத்தைகள்
வெறும் விட்டைகள்தான் ஈணும்….


நிலையற்றவை…

மார்ச் 23, 2009

 

நிலைத்து நிற்க தகுதியற்ற மரங்கள்தான்
பெயர்ந்து விழுகின்றன…

பெருமழையோ கடும் காற்றோ தேவையன்றி
சின்ன அசைவுகளைக்கூட காரணங்களாக்கி
அவற்றை சரிந்து விழ செய்பவை
கிளைகளோ இலைகளோ அல்ல வேர்கள்..
ஆழப்பதியாத வேர்கள்…

 

நமது மனித உறவுகளும் கூட
ஒருவகையில் இப்படிதான்..

ஆழமற்றவை அழிந்து போகின்றன
அர்த்தங்கள் ஏதுமற்று..

 

மரங்கள் விழுந்துவிட்ட இடத்தில்
சுவடுகளாவது மிஞ்சும்..

உறவுகள் முறிந்துவிட்ட இடத்தில்
வெறும் நினைவுகள்தான் மிஞ்சும்..

முடிவில் எதுவும் மிச்சமில்லை என்பதை
உணர்த்தியபடி…


இச்சைப் பொய்கள்…

மார்ச் 18, 2009

 

உடல் துளைகளின்
இச்சைப் பசிக்கு
காதலென அர்த்தம் சொன்னால்…

கருவறைகள் எல்லாம்
கழிவறைகள் என்று அர்த்தம்…

 

உள்ளத்துத் தேடலில்
உயிர்த்த ஒன்றை
காதலென அர்த்தம் கண்டால்…

கடவுளின் இருப்பிடம்
கருவறை என்று அர்த்தம்…

 

பசித்த காமத்துக்கு
புனிதக் காதலின்
முகம் மாட்டித் திரிவதை விட
விரும்பி விபச்சாரம் ஏற்கலாம்…


சுதந்திரத்தின் உறுத்தல்…

மார்ச் 14, 2009

 

தகிக்கும் தார் சாலைகளில்
அடர்ந்த வாகன கூண்டுகளுக்குள் அடைபட்டு
நெரிசல்களில் சிக்கி
கார்பன் புகை தின்று
வியர்வையோடு உள்ளே புலம்பியபடி
பயணிக்கின்ற நிமிடங்களில்…

 

தலைக்கு மேல் ஆனந்தமாய்
சிறகசைத்து பறந்து செல்கின்ற
அந்த பெயர் தெரியாத பறவையின் சுதந்திரம்
கொஞ்சம் உறுத்தத்தான் செய்கிறது இதயத்தை…


அட்டைப் பெட்டி வீடுகள்…

மார்ச் 10, 2009

 

கான்கிரீட் காடுகளுக்கு இடையில்
எட்டுக்கு பத்து அட்டைப் பெட்டி அறைகள் கட்டி
ஜன்னல் கதவுகள் அடைத்து வைத்து
புழுக்கத்தில் பழகிப் போய்
தூங்கும் இதயம்
ஒவ்வொரு நாளும்
ஏக்கத்தோடு நினைத்துப் பார்க்கும்..

வேப்ப மரத்தடியில் கயிற்றுக் கட்டிலில்
குளிர் காற்று வாங்கி
ஆசுவாசமாய் கண்ணசந்த
அப்பாவுடனான கிராமத்து நாட்களை…


காதலின் கதை…

மார்ச் 6, 2009

 

மனது முழுக்க நிறைந்திருக்கும்
வாஞ்சையான வரிகளை
காற்றலைகளில் பாடலாக்கி
பரவசப்பட்டுக் கொண்டிருக்கும்
என் நளினமான நாட்களுக்கிடையில்..

எழுத்தைத் தவிர எதுவும்
தோன்றியதில்லை எனக்கு பெரிதாக…

 

பல சமயங்களில்
எனது வார்த்தைகளின் வசீகரத்தில் வளைந்து
என்மேல் ஆசைத் தூறல் தூவிய
மெல்லின மேகங்களுக்கெல்லாம்.. 

மௌனத்தை மட்டுமே பதிலாய் தந்து
மறுபடி எழுத்துக்குள் புதைந்துவிடுவது
எனது நெடுநாள் வழக்கம்…

 

எனது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும்
கவிதைகளுக்கான காலமாய்
கச்சிதமாய் கரைந்துகொண்டிருந்த சமயத்தில்…

பலபேர் போல் அவளும் அறிமுகமானாள்
எந்தன் ரசிகையாய்..

 

ரசனைகளின் பரிமாற்றம்
தோழமையாய் தோற்றம் எடுத்தது…

அந்த கண பிழையில்லா பகிர்தல்களின் மத்தியில்
ஒன்றை மட்டும் முழுதாய் உணர்ந்துகொள்ள முடிந்தது..

இருவருக்குமான எண்ண அலைகள்
ஒன்றென்பதுதான் அது….

அப்பொழுது நிறைவாய் நான்
அவளிடம் கூறியது ” நீ என் நகல்…
என்ற ஒன்றைத்தான்…

 

எந்த சலனமும் இன்றி
நட்போடு நகர்ந்துகொண்டிருந்த
அந்த கண்ணியமான காலங்களில்
பழகிவிட்டிருந்தோம் இருவர் வீடுகளிலும்..

 

ஆழ ஆழ அடர்ந்துகொண்டிருந்த
எங்கள் பழகுதல்களின் பாரம் தாங்காமல்
ஒருநாள் இதழ் விரித்து அவள் சொல் மலர்ந்தாள்..

உங்கள் கவிதையும் காதலும்
வேண்டும் என் வாழ்நாள் முழுதும்…
” என…….

ஆம்.. தன் மொத்தக் காதலையும்
இந்த கவிஞனிடம் அழகாய் வரிகளில் வார்த்துவிட்டாள்..

சட்டென சின்ன புன்னகையைத் தவிர
அப்பொழுது பதிலாய் தர ஏதுமில்லை என்னிடம்..

 

நிறைய அவகாசங்களுக்கும்..
நிறைய பரிமாற்றங்களுக்கும்..
நிறைய நிறைய கலந்துரையாடல்களுக்கும் பிறகு..

சொல்லித்தான் விட்டேன்
நானும் என் சம்மதத்தை…

 

அடுத்த கட்டம்..
பெற்றவர்களுடனானது..

ஜாதகங்களின்.. சாதிகளின் வேறுபாடுகளால்
இருவரின் பெற்றோரும் நேரில் சந்திக்கும் வரை
கொஞ்சம் நீடிக்கத்தான் செய்தன குழப்பங்கள்..

 

ஒரு கோவிலில் நிகழ்ந்த
அனைவரின் சந்திப்பு
அமைதியாக்கியது அனைத்தையும்…

மெதுவாய் பழகப் பழக பாசமாகி
எங்களுக்கான முழு சம்மதத்தோடு மட்டுமல்லாமல்
திருமணம் செய்வதில் ஆழ்ந்த திருப்தியோடும்
மகிழ்வோடும் இருக்கிறார்கள்  
எங்கள் பெற்றோர்கள் இருவரும்..

 

மெல்ல மெல்ல மெல்ல மெல்ல
விதைத்து வேர்விட்டு
துளைத்து முளைத்து
செழித்த பாசம்..

திருமண பேச்சுக்களால்
வீசியது பூக்களின் வாசம்…

 

இதோ இத்தனை நாட்களை
வாழ்வதற்கான கர்ப்பகாலமாய் எடுத்து..
இந்த  08 / 03 / 2009  தேதியில்
நாளைகளுக்காக நல்லபடியாக
திருமணமாய் பிரசவமாகி இருக்கிறது
எங்கள் சத்தியக் காதல்…

இனி…
பிரியமுடன் ரம்மியமும்….
 

 

 

 

 

 

பிரியம் நிறைந்த மனதிற்கு பிரியனின் வணக்கங்கள்…

என் கவிதைகளில் மட்டுமல்லாது.. எனது வாழ்விலும் எப்போதுமே நான் வெளிப்படையாய் இருக்கத்தான் விரும்புகிறேன்.. எனது வார்த்தைகள் உண்மையாய் இருக்கும் வரைதான் அதற்க்கு மற்றவரை வசீகரிக்கும் சக்தியும் இருக்குமென நம்புகிறேன் நான்…

நான் எனது நாளைகளை தீர்மானிக்க ஒரு வகையில் இந்த பக்கங்களும் காரணம்.. அதனால் அதற்கான வார்த்தைகள் தாண்டிய நன்றிகளோடு நான் எழுதி இருக்கும் இந்த கவிதை கவிஞனின் நிஜ பிம்பம்…………….

 

தங்கள் பார்வைக்காக இத்தோடு எனது திருமண அழைப்பிதழையும் இணைத்திருக்கிறேன்…

என்றும் பிரியமுடன்..
பிரியன்…

pathirikkai-for-blog


காணும் முன்பு வரை…

மார்ச் 4, 2009

 

குறு நட்சத்திரங்களும்
குட்டி மின்மினிகளும்
அழகாய்தான் தெரிந்தன..

இருட்டு நேரத்தில் விளக்கு வெளிச்சத்தில்
உன்னை காணும் முன்பு வரை…


உன் பிரிவின் பொழுதுகளில்…

மார்ச் 2, 2009

 

என்னருகில் நீ
இருக்கின்ற பொழுதுகளில் எல்லாம்
நகர்கின்ற நேரங்கள் போதாமல்
ஆனது பஞ்சம்..

 

என்னை விட்டு நீ
பிரிந்து செல்கின்ற
அந்த வலி மிக்க நொடிகளை மட்டும்
தேடிக் கண்டுபிடித்து
மொத்தமாய் தீயிட்டு
கொளுத்திவிட சொல்கிறதென் நெஞ்சம்..

 

இன்னும் சில நிமிடங்களில்
நீ என்னை விலகி விடுவாய் என்றறிந்து
இருக்கும் நிமிடங்கள்
இன்னும் கொஞ்சம் நீளாதா என
இதயமும் மௌனமாய் கெஞ்சும்..

 

நீ பிரிந்தபின் வரப்போகும்
தனிமையின் வெறுமையை எண்ணி
இப்போதே உயிர் துடித்து அஞ்சும்…