படித்துக்கொண்டே இருங்கள்…

 

எதையாவது படித்துக்கொண்டே இருங்கள்..
எதைப் பற்றியது..
எதற்காக இதைப் படிக்க வேண்டும்
என்கிற கேள்விகளை எல்லாம்
ஓரமாய் ஒதுக்கி வைத்துவிட்டு
எடுத்துப் படித்துக்கொண்டே இருங்கள்
எதையாவது ரசனையோடு..

ஆன்மீக நூல்களில் உங்களின்
காமத்திற்கான விடைகள் கிடைக்கலாம்..
காதல் பக்கங்களில்
ஆன்மிகத்திற்கான அர்த்தங்கள் புலப்படலாம்..
கவிதைப் புத்தகங்களில்
அறிவியல் விடைகள் இருக்கலாம்..
அறிவியல் நூல்களில்
அழகியல் குறிப்புகள் தென்படலாம்..

ஏதாவதொன்றில்
எதிர்பாரா விடைகள்
எதிர்ப்பார்த்தபடி கிடைக்கக்கூடும்..

நேரமில்லை என்கிற 
சாக்கு மூட்டைகளை எல்லாம்
ஒன்றாய்க் கட்டி கடலில் போட்டுவிட்டு..
ஒருநாளைக்கு குறைந்தது
ஐந்து பக்கங்களாவது
எதையாவது படித்துக்கொண்டே இருங்கள்..

அது உங்கள் மனதிற்கு
மிகவும் பிடித்தமானதாய் இருக்கவேண்டும் 
என்பது மட்டும்தான் மிகவும் முக்கியம்..

பிடித்ததைப் படித்துக்கொண்டே இருங்கள்..
அப்போது பக்கங்கள் வாய் பேசும்..
அர்த்தங்கள் புலனாகும்..

பாதைகள் தெளிவாகும்..
பயணங்கள் புதிதாகும்…

.

4 Responses to படித்துக்கொண்டே இருங்கள்…

  1. pratheesmca சொல்கிறார்:

    கவிஞரே உங்கள் கவிதை வாசிக்கும் போது
    எனக்கும் நிறைய படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது
    இந்த நல்ல எண்ணம் தோன்ற செய்த
    கவிக்கு நன்றிகள் பல……

  2. piriyan சொல்கிறார்:

    மிக்க மகிழ்ச்சி… நன்றி…

  3. பிடித்ததைப் படித்துக்கொண்டே இருங்கள்..
    அப்போது பக்கங்கள் வாய் பேசும்..
    அர்த்தங்கள் புலனாகும்..

    பாதைகள் தெளிவாகும்..
    பயணங்கள் புதிதாகும்…

    அருமையான வரிகள் சார்

  4. piriyan சொல்கிறார்:

    நன்றி கவிஞர் வினோத்குமார் 🙂

பின்னூட்டமொன்றை இடுக