சலனச் சத்தம்..

நவம்பர் 20, 2011
மூட முடியாத ஜன்னல்..
முகத்தில் அறையும் குளிர்க்காற்று..
வசதியற்ற இருக்கை..
தூக்கிப் போடும் சாலைகள்..
தூக்கம் தொலைத்த கண்ணெரிச்சல்..
தனிமை தின்னும் நடு நிசி..
வியர்வை நாற்றம்..
குறட்டைச் சத்தம்..
படுத்தும் அலுப்பு..
பயணக் களைப்பு..
இப்படி பலவித இடைஞ்சல்களுக்கிடையில்..
நள்ளிரவுப் புறநகர் பேருந்தில்..
தூரப் பயணித்துக் கொண்டிருக்கும் வேளையிலும்..
சுவாரஸ்யமாய் கவனத்தை
எழுப்பித் திசை திருப்பி..
மெதுவாய் சலனத்தை
சிந்தாமல் சிதறடிக்கிறது..
முன் இருக்கையில் அமர்ந்திருக்கும்
புதுமணப் பெண்ணின்
வளையல்கள் சிணுங்கும் சத்தம்…
.

உன் தினப் பார்வை..

நவம்பர் 5, 2011
 
 
தினசரிகளின் சில நொடிகளில்
உன்னைக் கடந்து செல்ல நேர்கையில் எல்லாம்..
வார்த்தைகளோ.. ஜாடைகளோ.. ஏதுமன்றி..
இமை அசைக்காமல்.. விழி எடுக்காமல்..
கூரான பார்வை ஒன்றால்..
குத்திக் கடந்து விடுகிறாய்..
 
கடக்கும் கடைசி நொடித் துளியில்
கள்ளப் புன்முறுவல் வேறு..
 
 
மூர்ச்சையுராமல் மூர்ச்சையுருவதும்..
மயக்கமடையாது மயக்கமடைவதுமாய்..  
நான் தவிப்பது..
சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன..
 
 
.