விழித்துக்கொள் வீணையாளே…

செப்ரெம்பர் 27, 2009

 

ஞானத்தின் பிறப்பிடமாய் நாளும் உனைப் போற்றுகிறோம்..
கல்விக் கடவுள் நீ என கைக்கூப்பி வணங்குகிறோம்..
சரஸ்வதி பூஜை என தனி நாள் கொடுத்துக் கொண்டாடுகிறோம்..
இதெல்லாம் இருக்கட்டும்..

 

கண் மூடி தியானத்தில் அமர்ந்திருக்கும் உந்தன் கற்பை 
கண் முன்னே களவாடிக் கொண்டிருக்கிறார்களே..
இதை நீ அறிவாயோ ?

ஆம்.. இன்றையக் கல்வியின் நிலை என்ன..

 

வெள்ளைக்காரன் எழுத்தர் வேலைக்காய் 
பகுத்துக் கொடுத்த பாடத்திட்ட முறையை
பழுது நீக்காமல் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம் இன்று வரை !

 

மதிப்பெண்களின் பின்னால்  
தலைதெறிக்க நம் பிள்ளைகளை ஓட வைப்பதில் 
நமக்கு எவ்வளவு பெருமை !

 

ஒரு வருடம் காற்புள்ளி அரைப்புள்ளி கூட மாறாமல்
அப்படியே மனப்பாடம் செய்து செய்து
மூன்று மணி நேரத்திற்குள் முடிந்தவரை
வாந்தி எடுக்கத் தெரிந்தவரைத்தான்
அறிவாளிப் பிள்ளையென அரங்கேற்றுகிறோம் !

 

யதார்த்த உலகை ஏனோ அவர்களுக்கு 
எப்போதும் நாம் காட்டுவதே இல்லை !
ஏறக்குறைய கல்லூரிப் படிப்பு முடியும் வரை
அவர்கள் அந்த மாயவலைக்குள்தான் 
மயங்கிச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் !

 

படிப்பு முடிந்து சுயமாய் உலகை
அணுகும் பொழுதுதான்
உண்மையில் அவர்களின் வாழ்க்கை தொடங்குகிறது !

 

எவ்வளவு பெரிய வித்தியாசம்..
இதுவரை படித்த அத்தனையும் 
வெறும் அடிப்படை..
இனி இருப்பதை சமாளிப்பதுதான்
இங்கு வெளிப்படை என 
மனம் காட்டிக்கொடுக்கையில்..
அவர்கள் என்னமாய் குழம்பிப்போகிறார்கள் !

 

அதனால்.. இனியாவது நமது
வேட்டிக்கதைப் பேச்சுக்களை 
பாடத்திட்டத்தில் இருந்து வெட்டி எறிந்துவிட்டு..

அவரவர் விருப்பத்திற்க்கேற்ப 
அவர்கள் விரும்பும் திசையில் 
நாளைகளை அமைத்துக்கொள்ளும் திறன் வாய்ந்த
தொழில்நிலை செயல்முறை நிறைந்த
யதார்த்தம் தப்பாத 
பயனுள்ள பாடத்திட்டங்களை
நம் வருங்காலத் தலைமுறைக்கு
அறிமுகம் செய்வோம் !

பின்.. நம் வியாபார புத்தியை எல்லாம்
வேறெங்காவது வைத்துக்கொள்ளலாம்..
கல்வி பாவம் அதை விட்டுவிடலாம் !

 

கடலைப் பொட்டலம்போல கல்வியையும்
காசு கொடுத்து வாங்கும் நிலை போதும் !

 

இவையெல்லாம் தேவியே
நீ அறிந்தாயோ இல்லையோ என்றுதான்
எடுத்துரைக்கிறேன் என்னால் முடிந்தவரை..

 

நீயோ இன்னமும் உன்
புன்னைகை தவழும் முகம் மாறாமல் 
வீணையை அணைத்துக்கொண்டு
அமைதியாய் அமர்ந்திருக்கிறாய் !

 

நன்றாய் கவனித்துப் பார்..
உன் கையில் வீணை இருப்பது உண்மைதான்..

ஆனால் அதன் தந்திகளை எல்லாம் 
அறுத்து விற்று பல காலமாயிற்று !
வேண்டுமென்றால் சோதித்துப் பார்த்துக்கொள்..

 

செல்வியே உன் உன்னதக் கல்வியை
விபச்சாரக் கலவிபோல எண்ணி
விரசமாய் வியாபாரம் பேசி
வெட்கமின்றி விற்றுக் கொண்டிருக்கிறார்கள்..

 

கலைமகள் நீ விலைமகளாகும் முன்
விழித்துக்கொள் வாணியே.. விழித்துக்கொள்..

 

 
இன்றைய  கல்வியின் நிலை வருத்தத்திற்குரியது..  கண்டனத்திற்க்குரியது..  பால்வாடி தொடங்கி பாரீன் சென்று படிப்பது வரை அந்தந்த படிப்புக்கேற்ற பணம்..  அரசுப்பள்ளியில் தொடங்கி அமெரிக்கப்பள்ளியில் படிப்பது வரை  அந்தந்த பள்ளிக்கேற்ப பணம்..   இது தகுமா !

 

இன்று நம் பிள்ளைகள் புத்தக மூட்டை சுமக்க..  அதற்க்கு இணையாய் நாம் பணமூட்டையை கொடுக்க வேண்டியிருக்கிறது.   இப்படியே போனால் மூட்டைத் தூக்குபவன் பிள்ளைக்கெல்லாம் கல்வி என்பது காணக்கூட  கிடைக்காத கனவாகிவிடும் போலிருக்கிறது.

 

ஆகையால் கல்வி நிறுவனங்களே.. அதிபர்களே..  இனியாவது கல்வியை கண்டபடி கூறு போட்டு காசுக்கு விற்பதை விட்டு கண்ணியமாய் கற்றுத் தர முயலுங்கள். அனைவருக்கும் அதற்க்கு உதவுங்கள். தலைமுறைகள் பல வாழ்த்தும் உங்களை.. சரஸ்வதியும்தான் !

 

.


இன்று – 26 / 09 / 2009

செப்ரெம்பர் 26, 2009

 veerasekaran-tamil-movie-03

 

வீரசேகரன் இசை வெளியீடு…

 

சதிஷ்குமார் இயக்கத்தில், என் பிரியமான இசையமைப்பாளர் சாஜன் மாதவ் இசையில், எனது இரண்டு பாடல்களோடு இன்று வீரசேகரன் திரைப்படத்தின் பாடல்கள் வெளியீடு !


வாழ்த்துக்கள் சாஜன்…

செப்ரெம்பர் 26, 2009

 

edit 2

 

 

இசையமைப்பாளாராய் உங்கள் முதல் படம் வீரசேகரனின் இசை வெளியீடு..

முதல் முயற்சி முழு வெற்றியடைய வாழ்த்துக்கள்…

 

 

edit 1

 

இசை – கவி என்ற அடையாளத்தோடு பல வருடங்களுக்கு முன் துவங்கிய நமது நட்பு..   இன்று..   குடும்பத்தில் ஒருவர் போல..   அண்ணன் தம்பி போல..   உயர்ந்துவிட்டதில் மிக்க மகிழ்ச்சி எனக்கு..   உங்களுக்கும்தான்..

 

மலையாள திரையிசை சரித்திரத்தில் தனது பெயரை அழுத்தப் பதிவு செய்த தங்கள் அப்பா ரவீந்திரன் அவர்களின் ஆசிர்வாதம் தங்களை உயரம் செல்ல வழிநடத்தட்டும்…

 

எனது ஆரம்ப நாட்களில் இருந்து எனது வளர்ச்சியை அறிந்து.. என்றும் என் பலமாய் இருந்து வரும் உங்களின் இந்த இசைப் பயணத்தில்.. அடியேன் இருப்பேன் உங்களுக்கான வழித்துணையாய் என்றும்…

 

பிரியமுடன்…
பிரியன்…

 

.


சுவாசமிழந்த காதல்…

செப்ரெம்பர் 20, 2009

 

உயிர் மூச்சாய் நின்றவளே..
உடைத்து எனைத் தின்றவளே..

விழி நழுவிச் சென்றவளே..
விதவிதமாய் கொன்றவளே..

 

ஆக்சிஜெனாய் உனை எண்ணி
உள்ளிழுத்து உறைந்து விட்டேன்..

மாயமதை அறியாது
மயங்கி மதி கலங்கி விட்டேன்..

 

வற்றாது வழியுதெந்தன்  
கண்ணிரெண்டில் நீரோடை..

நீ காதலுக்கு தந்துவிட்டாய்
கார்பன்டை ஆக்சைடை…

 

 

காதல் தோல்விக் கவிதைகள் அதிகம் இல்லையென சொல்லி எழுத வேண்டுகோள் விடுத்த ஒவ்வொரு இதயதிற்க்காகவும்…

.


வாழ்வின் சூட்சுமம்…

செப்ரெம்பர் 15, 2009

 

எழுவதும் விழுவதும் கரைவதும் 
கடலலையின் இயல்பு !

 

கரைவதற்க்காய் நிலை கலைவதற்க்காய்  
கவலைப்பட்டு ஒரு போதும் 
மீண்டும் எழ மறுப்பதில்லை அவை !

 

மீண்டு எழத் தெரிந்தவை மட்டும்தான் 
மீட்டெடுக்கும் தன் வாழ்வின் சூட்சுமத்தை !

 

.


பயணப்படுங்கள்…

செப்ரெம்பர் 10, 2009

 

ஒரு திசையில் இருந்து இன்னொரு திசைக்கு 
ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு 
பயணித்துக்கொண்டே இருங்கள் !

 

நகர்தலில்தான் இருக்கிறது காலம்.. 
சுற்றுதலில்தான் இயங்குகிறது பூமி.. 

 

நகர்தலற்ற மரம் கூட 
வேர்களாய் மண்ணுக்கடியில் 
பயணப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது..

 

பயணமற்ற வாழ்க்கை 
பயனற்றுப் போகும் !

 

தேடல்களின் முதல் படி 
பயணமாய் அமைகிறது..

 

தெரிந்ததற்கும் தெரியாததற்கும் உள்ள இடைவெளியை 
பயணம்தான் நிரப்புகிறது..

 

பயணப்படுகிறவர்களுக்கு 
அறிதல் விரிகிறது.. 
புரிதல் தெரிகிறது..
வாழ்வின் அர்த்தம் புரிகிறது !

  

அதனால் வீட்டுக் கூண்டுக்குள் வட்டமடிக்காமல் 
இடம் கடந்து எல்லைகள் தாண்டி 
எல்லாப் பக்கமும் உள்ள அனுபவங்கள் சேகரித்து 
அழகியல்கள் பருகி.. 

அன்றாட நாட்களுக்கு புதுமைகள் உணர்த்த 
சலிக்காமல் ஒவ்வொரு நொடியிலும் வாழ 
பயணப்படுங்கள்.. 

 

எப்போதும் எங்காவது 
பறவைகளைப் போல 
தூரம் பார்க்காமல் 
பல்வேறு திசைகள் நோக்கி 
பயணப்படுங்கள்..

 

அப்போது பல கேள்விகளுக்கு  
தானாய் பதில்கள் கிடைக்கும்..
அனைத்தும் தெளிவாகும், அழகாகும்..

 

.


இன்று – 04 / 09 / 2009

செப்ரெம்பர் 4, 2009

7

 

விஜய் ஆண்டனி இசையில், சன் பிக்சர்ஸ் வெளியீட்டில், எனது “செக்சி லேடி…” பாடலோடு “நினைத்தாலே இனிக்கும்” படம் வெளியீடு…

 

.