தொலைந்த முத்தங்கள்…

ஜூலை 31, 2008

 

மார்போடு சேர்த்தணைத்து
இறுக்கும் உன் விரல்களால்
நீ கலைத்துப்போட்ட
என் கூந்தலுக்குள்
சில ரகசிய முத்தங்கள்
தொலைந்து போயிருக்கலாம்…

 

உன் பிடியில் இருந்து
என்னை விடுவிக்கும்பொழுது
அவற்றை மறக்காமல் எடுத்துக்கொள் !
முடிந்தால்…
என் உதடுகளுக்கு
கொடுத்துச் செல் !


பொய்யும் மெய்யும்…

ஜூலை 31, 2008

 

மாலைநேரக்  கடற்கரையில்
மணலோடு சேர்த்து 
காதல் என்னும் பெயர் பூசிக்கொண்டு…

படகோரங்களிலும்
குடைகளுக்குள்ளும்
புதைந்துகொண்டு 
உடல்கள் இறுகிக்கிடக்கும்
ஜோடிகளுக்கு மத்தியில்…

 

வீட்டிற்கு எடுத்துச்செல்ல
முடியாதென தெரிந்தும்
சின்னப்பிள்ளை போல ஓடியோடி
கிளிஞ்சல்கள் பொறுக்கி
விளையாடிக்கொண்டிருக்கும் என்னை…

 
தூரத்தில் தனியே அமர்ந்தபடி
ரசித்துக்கொண்டிருக்கும் உன்னை…

 

உன் காதலின் ஆழத்தை…
என் காதலின் நீளத்தோடு அன்றி  
வேறு எதனோடு நான் ஒப்பிட முடியும் !


நிறைந்த நிமிடங்கள்…

ஜூலை 29, 2008

 

ஒரு அழகிய தேவதையைப்போல
குட்டிக் குழந்தையைப்போல
நீ என்னருகில் தூங்கும் நிமிடங்களில் எல்லாம்…

 

கண்கள் இருப்பதற்காகவும்
காதலிக்க தெரிந்ததற்க்காகவும் 
நன்றி சொல்லிக்கொள்கிறேன் கடவுளுக்கு !


ஊடல்…

ஜூலை 29, 2008

 

உன் கண்களில் இருந்து 
உடைந்துவிழும் 
ஒவ்வொருத்துளி  கண்ணீருக்குள்ளும்
நெருப்பாய் எரிந்துகொண்டிருக்கிறது
நமது நேற்றைய ஞாபகங்கள் !

 

முற்றிப்போய் முட்டிக்கொண்ட 
நமது சண்டைகளுக்குள்
ஒன்றும் பேசாமல்
ஒளிந்துகொண்டிருக்கிறது 
நமக்கான காதல் !


அழகிய பிராத்தனைகள்…

ஜூலை 26, 2008

 

இமைகள் இரண்டையும்
இறுக்க மூடிக்கொண்டு
மெல்லிய இதழ்களை
மெதுவாய் அசைத்தபடி…

 

நீ முனுமுனுக்கும்  
பிராத்தனைகளை கேட்பதற்காகவே 
கோவில் கருவறையில் காத்திருக்கிறது கடவுள் !


கரைந்த நிமிடங்கள்…

ஜூலை 26, 2008

 

நாள் முழுக்க பேசிக்கொண்டு 
பக்கத்திலேயே இருந்த பிறகும்
விடைபெறும் சமயத்தில் 
என் கைகைளை இறுகப் பற்றிக்கொள்வாயே…

 

அந்த ஒருநொடியில் 
ஒட்டுமொத்தமாய் கரைந்துபோனது
இதுவரை கடந்த 
அத்தனை நிமிடங்களும் !

 

இன்னும் கொஞ்சநேரம் 
இப்படியே கையை பற்றிக்கொண்டு இருப்பாயா
என மனம் ஏங்கினாலும்…

 

“சரி நேரமாயிடுச்சு கிளம்பட்டுமா… “
என கேட்கும்
என் பொய்யான உதடுகளை என்ன செய்ய !


முத்த சாட்சி …

ஜூலை 24, 2008

 

நெற்றிப்பொட்டில் ஒற்றை முத்தம்
நேற்று நீயும் வைத்ததற்கு
சாலையோர விளக்கு மட்டும் சாட்சி…

 

இமைகள் மூடிக்கொண்டபின்னும்
விழியை விட்டு அகலவில்லை
இன்னும் அந்த வெட்கம் தின்னும் காட்சி !


உனக்கான தூக்கம்…

ஜூலை 20, 2008

 

எனது இரவுகளுக்கு சிறகுகள் முளைத்து
பல நாட்கள் ஆகிவிட்டன !

 

ஆனாலும் அவை இதுநாள்வரை
பறக்க முயற்சித்ததில்லை !

 

உந்தன் அறிமுகத்திற்கு பிறகோ
அவை பறப்பதை நிறுத்தவே இல்லை !

 

இப்பொழுதும்கூட அவை
என் உறக்கத்தை திருடிக்கொண்டு வந்து
உன்னிடம் கொடுத்துக்கொண்டிருக்கிறது பார் !

 

எனக்கும் சேர்த்து நீயாவது தூங்கு…

உனக்கும் சேர்த்து விழித்துக்கொண்டிருக்கிறேன் நான் !


அழகின் வெளிச்சம்…

ஜூலை 18, 2008

 

நீ சூரியன் என்று மாறிவிட்டாய்…
பூமியாய் எப்பொழுதும்
உன்னையே சுற்றிச் சுற்றி வருவதே
எனக்கு போதுமானதாக இருக்கிறது !

 

உன்னை நெருங்கவும் முடியாமல்
விலகவும் இயலாமல்
ஒரு எண்ணக்கோட்டுக்குள்   
அந்த எல்லைக்கோட்டுக்குள் 
உனையே சுற்றி வருகிறேன் !

 

சில பாதி பகல் சில பாதி இரவு
மாறி மாறி நடக்கிறது என்னுள் !

 

உனக்கான நினைவுகளை எல்லாம்
சந்திரக் கூட்டினுள் சேமித்து வைக்கிறேன் பத்திரமாய் !

 

உன் அழகின் வெளிச்சம் பட்டுப் பட்டு
இப்பொழுதெல்லாம் இப்படித்தான்
ஒளிவெள்ளம் வழிய
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்   
நான் உன்னால் !


அழகான ரசிகை…

ஜூலை 16, 2008

 

காதல் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளோடு
என்னருகில் நீ இருக்கின்ற காலங்களில்…      

என்னுயிரில் நீ இனிக்கின்ற நேரங்களில்…
உன் வெட்கங்களை மட்டுமல்லாது கோபங்களையும்
புன்னகைகளை மட்டுமல்லாது கண்ணீரையும்
அழகை மட்டுமல்லாது அன்பையும்
அணுவணுவாய் ரசிக்கிறேன் நான் !

 

ஆனால் நீயோ
என்னைப் பார்க்கும்பொழுதெல்லாம் 
நானுன் ரசிகை என்கிறாய் !

 

தீராத பசிகொண்ட 
என் ரசனைகளுக்கு
திகட்டாத உணவளித்துக் கொண்டிருப்பவள்
நீதான் என்னும் உண்மை
உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை…