சாகாது உன் நினைவு…

ஜூன் 25, 2009

 

நெஞ்சுக் குழிக்குள்ளார
நெருப்பக் கொட்டி ரசிச்சவளே..

மனசுக் குளமதிர
கல்லெறிஞ்சு சிரிச்சவளே..

 

நாடி நரம்புக்குள்
ஓடியாடி திரிஞ்சவளே..

இதயத்து மத்தியில
இடம் வாங்கி அமர்ந்தவளே..

 

கண்ணு முழிக்குள்ளார
கண்டபடி நெளிபவளே..

கன்னத்தோட பாதையில
கண்ணீரா வழிபவளே..

 

கசக்கி எரிஞ்சாலும்
கலங்காது என் மனசு..

நீ வெறுத்து மறுத்தாலும்
மறக்காது என் உசுரு..

 

மூச்சு எதுக்கையிலும்
மூழ்காது என் கனவு..

என் சாவுப் படுக்கையிலும்
சாகாது உன் நினைவு…
 

.

Advertisements

புது வரவு..

ஜூன் 20, 2009

 10

 

என்ன செய்வது..
எடை குறைவுதான்..
இருந்தாலும் அதை சரி கட்டத்தான் 
நிறைவாய் நிரம்பி இருக்கிறதே அழகு..

 

நிறம் கொஞ்சம் கம்மிதான் என  
யாரோ சொன்னது காதில் விழுந்துவிட்டதைப் போல்..
உடனே பிஞ்சுக் கை கால்களை ஆட்டி ஆட்டி 
நீ சத்தமாய் அழ ஆரம்பித்த பொழுதில்.. 

சிவந்து போன முகம் 
கோபத்தோடு சொல்வதாய் தோன்றியது
“பாத்தியா என் நிறத்தை என்று..”

 

நிர்வாணத்தின் கூச்சம் தெரியாத தெளிவே..
உறக்கத்தில் உருகிச் சிரிக்கும் நிலவே..

 

நகர்ந்து செல்லும் நாள் வராத சூரியனே..
அதனாலென்ன..
எப்போதும் உன்னை சுற்றித்தான் திரிகின்றன 
என் குடும்பத்து மனிதக் கோள்கள் அத்தனையும்..

 

ஒன்றரை அடி கவிதையே..
ஒப்பில்லா உவமையே..
மென் தாமரை தேகம்..
கரு வண்டுக் கண்கள்..
சிவப்பு ரோஜாத்துண்டு உதடுகள்..
பனித்துளி கால் விரல்கள்..
மழைத்துளி கை நகங்கள்..
செம்பருத்தி பாத மத்தி..
நீ இரண்டரை கிலோ புனித சக்தி..

அமைதி.. அழுகை..
ஆட்டம்.. தூக்கம்.. மட்டும் தெரிந்த மகத்துவமே..
 
உன்னால் தினம் தினம் 
திருவிழாக் காலம் போலானது வீடு..

 

பிறந்து சில நாட்களே ஆன 
செல்ல மழலையே..
குட்டிக் கடவுளே..

சொல்வதற்கு வேறென்ன இருக்கிறது..
புது வரவே உனக்கு நல்வரவு 
என்ற ஒன்றைத் தவிர…

 

 

.


ஞானம்…

ஜூன் 12, 2009

 

வழக்கமாய் சென்றமரும்
பழக்கமான குளத்துக் கரையில்
நெடுநேரம் மௌனமாய்
அமர்ந்திருந்த அந்தக் கணத்தில்..

 

நீருக்கும் எனக்கும் இடையில்
யாருமில்லை என்று
மனதுக்குள் எண்ணிக் கொண்டிருந்த பொழுது..

 

சட்டென வளைந்து நெளிந்து வந்த
அந்த அழகிய அலைகள் 
புத்திக்கு உணர்த்திச் சென்றது..

 

நீருக்கும் எனக்கும் இடையில்
காற்று இருக்கும் உண்மையை…

 

.


அம்மா சுட்ட சூயம்…

ஜூன் 5, 2009

 

எத்தனையோ நாளாச்சு
அம்மா நீ சூயம் சுட்டுத் தந்து..

ஆயிரந்தான் தின்பண்டம்
கடைக்கடையா நிறைச்சிருந்தாலும்..

 

அரிசிமாவும் மைதாமாவும்
கடலைப்பருப்பும் வெல்லப்பாகும்
பக்குவமா கலந்துருட்டி..

கொதிக்க வைச்ச எண்ணையில
முக்கி முக்கி மூழ்கடிச்சு..

இனிக்க இனிக்க சூயத்த
சுடச்சுட எடுத்து வைக்கும்
அம்மா கைய பாத்ததுமே..

 

பசி வந்து பச போல
உக்காந்துக்கும் வயித்துக்குள்ள…

உண்மையில அது வந்தது
பசிக்கு இல்ல ருசிக்கு…

 

மழ வந்து தல மேல
நட போடும் நாளுலயும்..

சில்லுன்னுதான் குளிர்காத்து
காதுரசும் நாளுலயும்..

மனசு வாய் திறந்து
வேணுமின்னு கேட்கும் முன்ன..

பாசத்தோட என் தாயி
பத்துப் பத்தா சுட்டு வைப்பா…

 

கொட்டும் மழ சொட்டுரத
எட்டி நின்னு பாத்தபடி..

சூடா ஒரு சூயத்த
எடுத்து கடி கடிக்கயில..

உடம்பெல்லாம் இனிக்கும்..
உசுரெல்லாம் இனிக்கும்..

 

அத்தனையும் அலுங்காம
நாங்க எடுத்து திங்க திங்க..

வைச்ச கண்ணு வாங்காம
ஆசையோட பாத்திருப்பா எங்கம்மா..

 

பத்தாம போகுமுன்னு
நெனச்சாளோ  என்னவோ..

ஒருபோதும் அவ ஒன்ன
எடுத்துத் தின்னு பாத்ததில்ல..

 

காத்தெல்லாம் அழுக்கான
நகரத்து வாழ்கையில..

ஓயாம நாங்க தினம்
நசுங்கி திரியும் வேளையில..

 

வயக்காத்தும் புல்நாத்தும்
சுவையான சுன ஊத்தும்..

சுத்தி சுத்தி சொகம் கொடுக்கும்
எதமான கிராமத்த..

 

அப்பப்போ சூயம் தந்து
புத்திக்கு நெனப்பூட்டும்
என்ன பெத்த சத்தியமே..
தாயான தத்துவமே..

வயசாகிப் போனாலும்
வாடாத மல்லிகையே..

 

மாசம் ஏழு கடந்திருச்சு..
மழைக்காலம் நெருங்கிருச்சு..

மனசோட மத்தியில
ஒரு ஏக்கம் உறுத்திருச்சு.. 

 

எத்தனையோ நாளாச்சே
நம்மூரு நெனப்பு வந்து..

என் தாயே..
எத்தனையோ நாளாச்சே
நீ சூயம் சுட்டுத் தந்து…

 

 

எத்தனையோ கவிதைகளில்.. இது போன்ற ஒன்று.. அத்திப்பூ போல்.. குறிஞ்சிப்பூ போல்.. பூப்பதுண்டு எண்ணத்தில்…

 

என் அன்னையோடு சேர்த்து.. தன் பிள்ளைகளுக்காய் வாழும் எல்லா அன்னைகளுக்கும்.. தன் பசி மறந்து குடும்ப பசி தீர்க்கும் எல்லா வீட்டுச்சாமிகளுக்கும்.. இந்த கவிதையை சமர்ப்பிக்கிறேன்……..

 

பிரியமுடன்..
பிரியன்…

 

.


நிலவின் மனம்…

ஜூன் 1, 2009

எட்டடுக்கு மாளிகை
கட்டி வைத்த மாடி தாண்டி 
வட்டமிட வராத
வானத்து வெண்ணிலவு.. 

கூறு போட்ட குடிசை வீட்டு
குட்டிக் குட்டி கிழிசல் வழியே
இஷ்டத்தோடு நுழைந்து வந்து 
கட்டாந்தரையில் படுத்துறங்கும்…

 

கொஞ்சம் குறுந்தொகையை ஞாபகப்படுத்தும் என் பிரியத்திற்குரிய எனது கவிதை இது !!!

.