காற்றுப் பூசாரி…

மே 25, 2009

யாருக்கும் அடங்காத 
பேய் பிடித்த பெண் போல 
தலை விரித்தாடும் தென்னை மரம்..

காற்றுப் பூசாரியிடம் மட்டும்
கைக்கட்டி நிற்கும் பவ்வியமாய்…

 

 .


கடல் சார்ந்த கவிதைகள்..

மே 20, 2009

 

1.

கடற்கரையின் மணல்வெளியில்
நண்டு பிடித்து விளையாடிக்கொண்டிருந்தாள்
கலைந்த முடி சிறுமி ஒருத்தி..

சட்டென தனது பணி நியாபகம் வந்தவளாய்
நண்டுகளை விட்டு
சோகத்தோடு எழுந்து சென்றாள்
வழக்கம்போல் பிச்சை எடுக்க….

  

 

2.

உனக்கென நான் கடற்கரையில்
காத்திருக்கும் வேளையில்..

ஒவ்வொரு அலையும் ஓடி வந்து
அப்படியே காட்டிச் செல்கிறது
அடிக்கடி உன் முகத்தை..

கரையில் இருக்கும் எனக்கு
நுரையில் முத்தங்கள்
அனுப்பி வைத்தாயோ நீ…

ஈரம் காய்வதற்குள்
இன்னும் வேண்டும் ஒன்று…

 

 

 3.

எத்தனை நாளாயிற்று
உன்னைப் பார்த்தென
ஆசையோடு நான் சென்று நின்ற வேளை..

சுடச்சுட சூரியனை
தின்றுகொண்டிருந்தது கடல்..

ஆனாலும் மறக்கவில்லை 
என் கால்களை வருடிக் கொஞ்ச….

 

 

 4.

உடைந்த மரத்துண்டு ஒன்றை
உருட்டி விளையாடியபடி வந்த அலைகள்..

சட்டென பாய்ந்து என் கால்களுக்கடியில்
மண்ணைக் கரைத்து விழ வைக்க முயன்று
ஆட்டம் போட்டு விலகிச் செல்கின்றன
கூட்டமாய் நிற்கும் பெண்களைப் பார்த்து
சத்தமாய் சிரித்துக்கொண்டே..

 

.


வலி மிக்க 7 கவிதைகள்…

மே 15, 2009

 
இதற்குமேல் என்னால் அடைத்து வைக்க முடியாது…..
நானே தடுத்தாலும் என் கவிதைகள் இனியும் நிற்காது…..

 

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே
முன் தோன்றிய மூத்த குடிகளின் புதல்வர்கள்..

கஞ்சிக்கு வழியின்றி.. அடிப்படை மனித உரிமைகள் கூட கிடைக்காமல்..
அகதிகளாய் அல்லல்பட்டுக்கொண்டிருக்கும் அவலங்களை…

இன்னும் உரக்க.. இன்னும் இன்னும் உரக்க..
உலகை உலுக்க.. சொல்லித்தான் தீரவேண்டும்…

 

எந்த பாவமும் செய்யாமல்.. தமிழர்களாய் பிறந்ததற்காய்..
அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்டு.. அநாதைகளாகி அழிந்துவரும்..
எம் இலங்கைத் தமிழருக்கு…….

“என்ன செய்வதாய் உத்தேசம்…”  

 “சாவு பெரிதில்லை…”  

“கடவுளைய்யா வாருமைய்யா…” 

 “வலிகளின் முனகல்கள்…” 

“ஈழத் தமிழச்சியின் கேள்வி…” 

 “வலியின் வலி…” 

” மானப் பசி…”

என்னும் தலைப்புகளில் பின்வரும் இந்த   7  கவிதைகளை
மனது நிறைய வலியோடு சமர்ப்பிக்கிறேன்……

 

விரைவில் அவர்களுக்கு விடியல் வரும் எனும் நம்பிக்கையோடு…

பிரியமுடன்…
பிரியன்…

 

 

.


என்ன செய்வதாய் உத்தேசம்….

மே 15, 2009

 

அமைதியாய் வாழ்ந்த எம் மக்களை..
நடுக்கடலில் பசிப்பட்டினியோடு 
கள்ளத் தோணியேறி திக்குத் தெரியாது
திணறித் தத்தளிக்க வைத்தாயிற்று…

 

பரம்பரைகள் பல கண்ட வீடுகளை
சல்லிச் சல்லியாய் நொறுக்கி எறிந்தாயிற்று..

 

பயந்துபோய் பதுங்கு குழிகளுக்குள்
ஒளிந்துகொண்டிருக்கும் ஜீவன்களையும்
தேடிக் கொன்று அதற்குள்ளேயே புதைத்தாயிற்று..

 

அடுத்த தலைமுறைகள்
தளைத்தால்தானே இனமென கருதி
பதின்ம வயதுகளை குறி வைத்து குலைத்தாயிற்று..

 

கட்டெறும்பு கூட்டங்களை நசுக்குவதைப்போல
கதறக் கதற கூட்டம் கூட்டமாய் சிதைத்து வீசியாயிற்று..

 

உம் வீட்டுச் செடிகள் செழித்துப் பூக்க
எம் பிஞ்சுப் பிள்ளைகளின் பிணங்களை
உரமாய் போட்டாயிற்று..

 

மீசை முளைத்தும் முளைக்காத 
வாலிப சடலங்களின் கரங்களில்
துப்பாக்கிகளைத் திணித்து தீவிரவாதிகளாக்கியாயிற்று..

 

வயதுக்கு வராத சின்னஞ்சிறு பெண்களையும்
சிதைத்து சீரழித்து மகிழ்ந்தாயிற்று..

 

பொழுதுபோய் பொழுது வந்தால்
உயிர் வாழ்தல் நிச்சயமற்று
கலங்கித் தவிக்கும் நிலைக்கு
எம்மைக் கொண்டு வந்து விட்டாயிற்று..

 

அகிலத்துக்கே முன்னோடியாய் வாழ்ந்த
அரும் பெரும் இனத்தை
அகதிகளாக்கி அங்கும் இங்கும் அலையவிட்டாயிற்று ..

 

எல்லாமும் செய்தாயிற்று..

நாதியற்று நடை பிணங்களாய்
வாழ வழி தெரியாது 
வீடிழந்து நாடிழந்து 
சொந்த பந்தங்கள் இழந்து
மானமிழந்து இனமழிந்து
அனாதைகளாய் நிற்க வைத்தாயிற்று..

 

சரி…
இன்னும் என்ன செய்வதாய் உத்தேசம்..

மிச்சம் மீதி ஒட்டிக்கொண்டிருக்கும்
உயிர்களையும் உடல்களையும்
சுக்கு நூறாய் கிழித்தெறிய வேண்டுமா..

 

செய்யுங்கள்.. அதையும் செய்யுங்கள்..
அப்படியே செய்யுங்கள்…

ஒன்று மட்டும் நிச்சயம்…
இன்று எம்மினம் சிந்துகின்ற 
ஒவ்வொருத்துளி கண்ணீருக்கும் குருதிக்கும்..

நாளை வட்டியும் முதலுமாய் சேர்த்து 
உமக்குத் திருப்பித் தருமடா காலம்……

 
.


சாவு பெரிதில்லை..

மே 14, 2009

 

ஊரெங்கும் சிதறிக் கிடக்கும் உடல்கள்..
பரிதாபமாய் பறிபோகும் உயிர்கள்..

இறந்த தாய் மார்பிழுக்கும் 
பசித்த பிள்ளைகள்..

அச்சத்தில் கற்பிழக்கும்
இளவயது பெண்கள்..

மலையென குவிந்து கிடக்கும்
மனிதப் பிணங்கள்..

சுடச்சுட நிரம்பிக் கிடக்கும்
குருதிக் குளங்கள்..

அழத் திராணியற்று வற்றிப்போன
கண்ணீர்த் துளிகள்..

அவமானம் அடித்த வலி தாங்கா
ஊமை மனங்கள்..

கூடிக்களித்த உறவுகள் இல்லை..
தாங்கிப் பிடித்த வீடுகள் இல்லை..
ஆடித் திரிந்த நாடின்று இல்லை..
ஆறுதல் சொல்ல யாருமே இல்லை..

அடப்போங்கடா..
இனி சாவதற்கு
எங்களிடம் ஒன்றுமே இல்லை…

 

 

.


கடவுளைய்யா வாருமைய்யா…

மே 12, 2009

 

சரம் சரமா மனித இனம்
செத்து செத்து விழுது இங்க..

காப்பாத்துவாயாமே
சாமியே நீ எங்க..

 

வாழ வந்த எல்லாருக்கும் 
சாவு வரும் மாற்றமில்ல..

அந்த சாவக்கூட நிம்மதியா 
எங்க இனம் காணவில்ல..

 

கருவறையிலேயே கல்லறையா புதைஞ்சு போன 
பச்சப்பிள்ள பண்ண தப்பு என்னன்னே தெரியலையே..

 

கண்ணுக்கு முன்னாடி சுக்கு நூறா உடல் சிதறி
சாகும் ஜனம் பாக்க என்ன பாவம் செஞ்சேன் புரியலையே..

 

கடவுளைய்யா.. கடவுளைய்யா..
அத்தனையும் பாத்துகிட்டு
அமைதியா இருக்குற நீ..

இப்ப என் முன்னால
காட்சி தர வாருமைய்யா….

சத்தியமா உன் மூஞ்சியில
காறித் துப்ப வேணும் நானு…

 

 

.


வலிகளின் முனகல்கள்…

மே 9, 2009

 

எம்மினம் கூட்டம் கூட்டமாய் அழியக் கண்டு
கதறிக் கூக்குரலிட்டு 
கோபத்தோடு எதிர்ப்பை தெரிவிக்கிறது 
ஒட்டுமொத்த மனித இனமும்…

 

நீங்களோ அவை எதுவும்
உங்கள் செவிகளில் விழாததைப் போல
விரட்டி விரட்டிக் கொல்வதிலேயே
குறியாய் இருக்கிறீர்களே எப்படி ?

 

உண்மையிலேயே எங்கள் அழுகுரல்களும் அவஸ்தைகளும்
உங்கள் காதுகளில் விழவில்லையோ..

ஆம்.. அப்படித்தான் இருக்கும்…

எப்போதும் உங்கள் காதுகளைத்தான் 
துப்பாக்கிகளின்.. பீரங்கிகளின் ராட்சச சத்தங்கள்
நிரப்பிக் கொண்டு இருக்கின்றதே..

பின் எப்படி உங்களுக்குக் கேட்குமெங்கள் 
வலிகளின் முனகல்கள்…

 

.


ஈழத் தமிழச்சியின் கேள்வி…

மே 4, 2009

 

தாய் மாரில் மொகம் பொதைச்சு
முட்டிக் குடிச்ச பாலு எல்லாம்
தாய் நாட்டில் ரத்தமாத்தான்  
நிக்காம ஓடுதே..

 

பொத்திப் பொத்தி காத்து வந்த
ஒட்டுமொத்த மானமும்
துப்பாக்கி முன முன்னால
நிர்வாணமாகுதே..

 

அவமானத்துல அலைக்கழியும் எங்களுக்கு
நிவாரணம் தர்ற உலகமே..

வயித்த ஆத்த உணவு..
உடம்ப போத்த உடுப்பு..
மானம் காக்க ?

 

.


வலியின் வலி..

மே 1, 2009

 

ஊரக்கூட்டி சோறு போட்ட
வம்சம் இப்ப வாய மூடி 
சோத்துக்காக நிக்கிதிங்க பசியோட வரிசையில..

 

பதிமூணு பிள்ள பெத்து 
அத்தனையும் கண்ணு முன்னால்
பீரங்கிக்குண்டு பட்டு துண்டு துண்டா செதறிப்போக
அனாதையான தாய் கெழவி கிடக்குதிங்க மூலையில…

 

மனசு நிறைய பாசம் வைச்சு 
வாழ்வாங்கு வாழ்ந்த கூட்டம்
திக்குத் தெச தெரியாம திரியுதுங்க அகதிகளா…

 

அடுத்த மூச்சுக் காத்திழுக்க 
இருப்போமா தெரியாது..

அடுப்பெறகா எரிச்சாலும்
கேட்க நாதி கிடையாது..

 

எவ்வளவுதான் சொன்னாலும் 
எங்க வலி புரியாது..

ஒரு நிமிஷம்கூட எங்க வாழ்வ
நீங்க யாரும் வாழ முடியாது….