வேண்டாம் விழிப்பு…

ஜூலை 25, 2010

 

பசுமையாய் பச்சை மரங்கள் அடர்ந்த
பனி சூழ்ந்த யாருமற்ற அந்த சாலையில்..

தனியே நீ என்னை நோக்கி சிரித்தபடியே
நடந்து வருவதைப் போல
காண்கிறேன் ஒரு கனவு..

ஐயோ நான் விழித்துக்கொள்ளாமல்
இருக்க வேண்டுமே..

.


பரவசப் பதற்றங்கள்…

ஜூலை 20, 2010

 

பற்ற வைத்த வெடி வெடிப்பதற்கு முன்பான
சில நொடிப் பதற்றங்கள்தான்
உன்னை முத்தமிட முனைகிற பொழுதிலும்..

.


நீ வருவாய் என..

ஜூலை 15, 2010

 

முற்றத்தில் காய வைத்திருக்கும் அரிசியாய்
காத்துக் கிடக்கிறது என் இதயம்..

கொஞ்சம் கொஞ்சமாய் கொத்தித் தின்ன
ஒரு சிட்டுக்குருவியாய் நீ வருவாயென..

.


கண் சிமிட்டும் சிரிப்பு…

ஜூலை 10, 2010

 

கண்களை சிமிட்டிச் சிரிக்கிற பழக்கத்தை
யாரிடமிருந்து கற்றுக் கொண்டாய் என்பது
தெரியாது எனக்கு..

ஆனால்.. ஒவ்வொருமுறை நீ 
அப்படிச் சிரிக்கும் பொழுதும்..

மஞ்சள் மலரில் அமர்ந்து
சிறிகு விரித்து மூடும்
வண்ணத்துப்பூச்சியின் உருவம்..

சட்டெனத் தோன்றி மறைவதை
தடுக்க முடிவதில்லை என்னால்…

.


கண் வந்த கலை…

ஜூலை 1, 2010

 

ஒரு நீர்மூழ்கிக் கப்பலைப்போல
உள்ளுக்குள் இருந்து வேவு பார்க்கும் திறமை..
என்னைப் பார்க்காமலே பார்க்கும்
உன் கண்களுக்கு இருக்கிறது..

நான் பாராத சமயங்களில் 
என்னைப் பார்க்கவும்..
நான் பார்க்கும் பொழுதில்
பாராததுபோல நடிப்பதும்..
கை வந்த கலை.. இல்லை.. இல்லை..
கண் வந்த கலையாக 
இருக்கிறது உனக்கு..

ஏதாவதொரு தருணத்தில்
உன் கணக்கு தவறிப்போய்
எதிர்பாராமல்
என் கண்களோடு உன் கண் நோக்கும் நொடியில்
சட்டென சலனமடைந்து
பார்வை விலக்கி  
இயல்பாய் இருக்க நீ முயற்சித்தாலும்
அக்கணத்தில் உன் முகமெங்கிலும்
நிரம்பி வழியும் வெட்கம்
காட்டிக் கொடுத்துவிடுகிறது
உன் காதலை…

.