அது ஒரு அழகிய பூக்காடு…
கடவுளின் ரகசியமும் அதிசயமும்
நிறைந்திருக்கும் வாசனையுள்ள பூக்களின் வனம்…
ரோஜா… மல்லிகை… முல்லை… என
எல்லா பூக்களும்
ஒரே இடத்தில பூத்திருப்பது
நம்பமுடியாத ஆச்சர்யம்தான்…
பலவித வண்ணங்களால் வாசங்களால்
வனப்புகள் சிந்தியிருக்கும்
அந்த அழகிய தோட்டத்திற்கு
எப்போதும் வருவார்கள் எல்லோரும்….
தங்கள் காதலிகளுக்கான
பல வண்ண ரோஜாக்களை
விரும்பி பார்த்தும்
பறித்துக்கொண்டும் இருந்தவண்ணம்
அந்த ரோஜாக்களையே
சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருக்கிறார்கள்
இளைஞர்கள் எல்லாம்…
தங்கள் கனவுகளுக்கான
புத்தம்புதிய விடைகளுக்காக
அன்பு மனைவிகளுக்கான மல்லிகைகளை
அர்த்தத்தோடு பறித்துக் கொண்டிருக்கிறார்கள்
பாசமான கணவர்கள் எல்லாம்…
தங்கள் வேண்டுதல்களுக்காக
காத்திருக்கும் கடவுள்களுக்காக
முகை விரித்த முல்லைகளை
பக்தியோடு பறித்துக் கொண்டிருக்கிறார்கள்
வயதான பெரியவர்கள் எல்லாம்…
அத்தனை பூக்களையும்
எந்தவித பேதமுமின்றி
ஓடியோடி மடியில்
அள்ளிக்கொண்டிருக்கிறார்கள்
குட்டிக் குழந்தைகள் எல்லாம்…
அத்தனை பேரின் அரவணைப்பினால்
மகிழ்ச்சியும் மலர்ச்சியும் கொண்டு
திறந்திருக்கும் பூக்களுக்கு இடையில்..
யாரும் தீண்டாத
அந்தப் பக்கம் எட்டிக்கூட பார்க்காத
ஒரு இடமும் களை மண்டிக் கிடந்தது…
அது வாசமில்லா காகிதப்பூக்களின் இடம்…
குட்டிக்குட்டியாய் தினமும்
தனது பூக்களை திறந்து வைத்தபடி..
இன்றாவது தங்களைப் பார்க்க.. தொட.. சூட..
யாராவது வருவார்களா என
ஏக்கத்தோடு காத்திருக்கின்றன
அந்த காகிதப்பூக்கள்
எப்போதும் எதிர்பார்த்தபடி…
மணப்பதில்லை என்றாலும் இன்னும்
அழகாய்த்தான் இருக்கின்றன அவை…
நம் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளைப்போல !
ஆம்…
பூமியென்னும் பூக்காட்டில்
ரோஜா… மல்லிகை… முல்லைப் பூக்களைப்போல
வண்ண வண்ணமாய்
வித வித வாசங்களோடு
சுட்டித்தனம் செய்து சுற்றித் திரியும்
குழந்தைகளுக்காக
அவர்களை கொஞ்சல்களால் சூடிக் கொள்வதற்காக
நிறையப்பேர் இருக்கிறார்கள்…
அறிவு வளர்ச்சி என்னும்
வாசனை இல்லாத ஒரே காரணத்தால்
மனவளர்ச்சி குன்றிய காகிதப்பூக்களை
அன்பால் சூடிக்கொள்ள வருவதில்லை யாரும்…
என் இறைவா…
இனியாவது இந்த காகிதப்பூக்களுக்கு
நல்ல மணம் கொடு !
என் மனிதர்களுக்கு
நல்ல மனம் கொடு !
பிரியமான இதயங்கள் அனைத்திற்கும் பிரியனின் பிள்ளைகள் தின நல்வாழ்த்துக்கள்….
குழந்தைகளுக்கான நாளில் குணத்தோடு கொஞ்சம் சிந்திப்போம்………….
குழந்தை மனம் வேண்டி…
பிரியமுடன்…
பிரியன்…