மனதின் அணைகள்…

ஜனவரி 27, 2010

 

பெரும் காட்டாறைப் போல 
சட்டெனப் பெருகி பாய்ந்து வரும்
உன் நினைவுகளின் வேகத்தை தாங்க முடியாமல்
தூள் தூளாய் நொறுங்கி விழுகின்றன
காதல் வெள்ளம் கரை தாண்டாமல் இருக்க
மனதுக்குள் நானிட்ட அணைகள் அத்தனையும்…

.


போதும் போதும் பூமிச்சாமியே..

ஜனவரி 20, 2010

 

சட்டென வீசும் வேகக்காற்றில் 
சரிந்துவிழும் பூக்கள் போல.. 
சதைத்தின்னக் குலுங்கிய பூமியின் ஆட்டத்தில் 
சரிந்தன பல லட்சம் மனித உயிர்கள்.. 

நஞ்சு குணமறியா பிஞ்சுக் குழந்தைகள் முதல் 
பஞ்சு நரை பிடித்த பழுத்த முதியவர்கள் வரை 
பாரபட்சம் பாராது பசி கொண்டு பிடித்துத்
தின்றுவிட்டது இந்த பிசாசு பூகம்பம்.. 

பிள்ளை சாவதை கண்முன் பார்த்து 
பிழைத்த தாயின் இனிவரும் நாட்கள் 
சாவை விடவும் கொடுமையானது.. 

தாயும் தந்தையும் தன்முன் இறக்க 
தான் கொண்ட நிலைதன்னை
அறியாது தரை தவழும்
மழலையின் வருங்காலம் நரகத்திற்கும் மேலானது.. 

கிராமத்துத்தாய் முறத்தில் அரிசி புடைப்பதைப்போல 
ஊரையே புடைத்தெடுத்த பூகம்ப பூதமே.. 

உன்னால் இறந்தவர்களைக்காட்டிலும் 
இத்தனையும் கண்டு இன்னும் அங்கே
இருப்பவர்கள்தான் துர்பாக்கியசாலிகள்.. 

இனியும் வேண்டாம் இணையில்லா இயற்கையே..
போதும் போதும் பூமிச்சாமியே..

உன்னை வெல்ல ஒருவரும் இல்லை..
இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை..
இதை நீ இப்படி ஒன்றும் நிரூபிக்கத் தேவையில்லை..

வாடகை பூமியில் வந்து தங்கிவிட்டுப் போகிற 
இந்த பாதசாரிப் பயணிகளை
இனியாவது படுத்தாமல் விட்டுவிடு..

போய்ச் சேரும் நேரம் வந்ததும்
போய்விடுவோம் நாங்களாகவே…

.

பூமிப்பந்தின் ஹைடி எனும் பகுதியில் நிலநடுக்கத்தால் நிலை குலைந்து அத்தனையும் இழந்து நிற்கும் எம் சகமனிதத்திற்கு இந்த வரிகள் சமர்ப்பணம்….
 

.


தாங்குமோ உன் வீடு…

ஜனவரி 17, 2010

 

உன் அழகின் பாரம் தாங்காமல்
இந்த பூமியே திணறிக் கொண்டிருக்கிறது..
எப்படித்தான் தாங்குகிறதோ உன் வீடு !

.


அர்த்தமுள்ள பொங்கல்…

ஜனவரி 13, 2010

 

வெளிச்சத்தோடு சமைக்க ஆகாயம்..
மண்பானையில் நிலம்..
அரிசியோடு நீர்..
வேக நெருப்பு..
வெந்து நுரையாய் பொங்கும் காற்று..

இப்படி பஞ்ச பூதங்களும் அடக்கம்
நம் படிப்பறியா பட்டிக்காட்டு உழவன்
பரம்பரையாய் கொண்டாடும் பொங்கலில்..

இன்னும் இருக்கிறது…
பழையன கழிய புதியன நுழைய போகி..
நடப்பவை எல்லாம் மங்களமாக மஞ்சள்..
இனி வரும் காலம் இனிப்பாக கரும்பு..

அக்றிணைகள்மேல் அன்புணர்த்த
மாடுகளுக்கும் மரியாதை..

வீரத்தின் இன்றியமையாமை  
தெளிவாய் கற்க ஜல்லிக்கட்டு..

அடடா..
ஒரு பண்டிகைக்குள் எத்தனை அழகான
வாழ்வியல் நெறிகள்..

நம் தமிழ் மூதாதையர்கள்
நல்லறிவும் நன்றியுணர்வும் மிக்கவர்கள்..

நம்மைப்போல் நாகரீகமெனும் போர்வைக்குள்
நிர்வாணமாய் நிற்பவர்கள் அல்ல..

ஆழமான அர்த்தம் கொண்ட
நம் தமிழர் திருநாளின்
தனித்துவ மகத்துவம் புரியாமல்
நாமோ பேருக்கு பொங்கல் வைத்துவிட்டு
ஹாப்பி பொங்கல் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு
அப்படியே மூழ்கிவிடுகிறோம் 
தொலைகாட்சி பெட்டியில்
நடிகைகளின் நேர்க்காணல் பார்க்க..

எம்மக்களே..
வாழ்வியல் பொருள் விளக்கும் பொங்கல் பண்டிகையின்
உண்மை அர்த்தம் உணர்ந்து
நம் தரணிக்கும் தமிழுக்கும் தமிழர்க்கும்
பெருமை சேர்க்கும் வழியைக் கருதி இனி
எடுத்துக்கொள்வோம் புது உறுதிமொழி..

பண்பாட்டுக் களஞ்சிய பொங்கல் பண்டிகை வாழ்த்துக்களோடு…

பிரியமுடன்…
பிரியன்…

.


இன்று – 11 / 01 / 2010

ஜனவரி 11, 2010

 

 

முன்தினம் பார்த்தேனே இசை வெளியீடு…

இயக்குனர் கௌதம் மேனன் அவர்களின் பள்ளியில் இருந்து வந்த மகிழ்த்திருமேனி அவர்களின் இயக்கத்தில்..  சாய் தமன் இசையில்..  செவன்த் சேனல் நிறுவனத்தின் தயாரிப்பில்.. எனது மூன்று பாடல்களோடு இன்று முன்தினம் பார்த்தேனே திரைப்படத்தின் இசை வெளியீடு !

.


கண் சிமிட்டும் தெருவிளக்கு…

ஜனவரி 6, 2010

 

அரசாங்கம் சம்மதித்தால் 
உன் வீட்டோர நடை பாதை தெருவிளக்காய் 
நிலைத்து நின்றுவிட பெரும் ஆசை எனக்கு..

நான் உன்னைப் பார்த்து கண் சிமிட்டுவதை
யாரும் தடுக்க முடியாதே…

.


நெற்றிப்பொட்டு வட்டம்…

ஜனவரி 1, 2010

 

உன் நெற்றிப் பொட்டு வட்டத்துக்குள்
என்னை சுருட்டி எடுத்துச் சென்றுவிட்டாய்..

பரவாயில்லை..
அப்படியே உன் பொட்டோடு சேர்த்து
என்னையும் உன் தனியறை நிலைக்கண்ணாடியில் 
ஒட்டிவிடு..

உன் ஒவ்வொரு அசைவையும் 
அங்குலம் அங்குலமாய் ரசிக்க
அதுதான் சரியான வழி..

.