மழைக்காலை வேளை..

ஒக்ரோபர் 28, 2009

 

இன்னும் வெயில் வராத இளம் அதிகாலை..
மெல்ல மெல்ல மொட்டவிழ்த்துக் கொண்டிருக்கும்
சின்னச் சின்ன வண்ணப் பூக்கள்..

 

முற்றிலும் அமைதியான சுற்றுச் சூழல்..
ஏதுவாய் இதயத்தில் ஏகாந்தமான ஒரு நிலை..

 

கண்களைச் சுற்றிப் படர்ந்திருக்கும் ஈரப் பச்சை..
காதுக்கருகில் பாடும் பெயர் தெரியாத பறவை..

 

மெல்லக் குளிர் தந்து உரசும் கந்தர்வக் காற்று..
சுவாசத்தில் சுகமாய் நுழையும் மண் வாசனை..

 

எதிரில் மெதுவாய் தூறிக்கொண்டிருக்கும் வெள்ளை மழை..
அருகில் அடிக்கடி வந்து வருடிப் போகும் பிள்ளைச் சாரல்..

 

தொலைவில் எங்கோ மெலிதாய் கேட்கும் 
மனதிற்குப் பிடித்தப் பாடல்..

 

இவற்றோடு சேர்த்து சூடாய் 
காதலியவளின் சுந்தர நினைவு..

 

அடடா.. இதை விட.. இந்த பொழுதை விட..
இந்த இயற்கையை விட..
அழகாய் யாரால் எழுதிவிட முடியும் 
ஒரு நல்லக் கவிதையை..

 

.

Advertisements

செக்சி லேடி பாடலின் வெற்றிக்கு நன்றிகள்…

ஒக்ரோபர் 23, 2009

 

rr

 

 

“நினைத்தாலே இனிக்கும்” படத்தில் அடியேன் எழுதிய “செக்சி லேடி” பாடல்.. அனைவரின் அங்கீகாரம் மூலம் என்னை இன்னும் கொஞ்சம் உயரம் ஏற்றி இருக்கிறது…

 

இந்த வெற்றிக்கு பொறுப்பாய்…

 

நல்ல மெட்டமைத்துக் கொடுத்த என் மனதுக்கு பிடித்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அவர்களுக்கும்..

 

சிறப்பாய் இயக்கிய இயக்குனர் குமாரவேல் அவர்களுக்கும்..

 

தரமாய் தயாரித்த ஜெமினி சர்கியூட் நிறுவனத்திற்கும்..

 

சகம் முழுக்க கொண்டு சேர்த்த சன் பிக்சர்ஸுக்கும்,   

 

நண்பர்களுக்கும்.. ரசிகர்களுக்கும்.. ரசிகைகளுக்கும்..

 

பிரியமான அனைவருக்கும் என் வார்த்தைகள் தாண்டிய நன்றிகளோடு…

 

 

பிரியமுடன்…
பிரியன்…

 

.


புத்தம்புது தீபாவளி…

ஒக்ரோபர் 17, 2009

 

பிள்ளைப் பிராயத்து தீபாவளிகள்..
பள்ளிப் பருவத்து தீபாவளிகள்..
கல்லூரிக்கால தீபாவளிகள்..
இளமைக்குகந்த தீபாவளிகள்.. போல இல்லை
இந்த வருட தீபாவளி !

இது கொஞ்சம் வித்தியாசமானது..
நிறைய புதுமையானது !

 

விடியற்காலையிலேயே எழுந்து குளித்து..
ஈரத்தை துவட்டி..  நடு வகிடெடுத்து..
பொட்டுக் குங்குமம் வைத்து..
தழையத் தழைய பட்டுப் புடவை உடுத்தி..
கூந்தல் நிறைய பூக்கள் சொருகி..

தூங்கிக் கொண்டிருந்த என்னை எழுப்பி..
என்னங்க நான் இப்ப பாக்க எப்படி இருக்கேன் ?
என வெட்கச் சிரிப்போடு கேட்கிறாள்  
மனைவியானாலும் மாறாத என் காதலி !

 

என்னை வேட்டிச் சட்டையில் பார்ப்பதில்தான்
எவ்வளவு ஆசை அவளுக்கு !

எப்போதும் என் பக்கத்திலேயே
என்னையேச் சுற்றி சுற்றி
வந்து கொண்டிருந்தவள்..

நான் முதல்வெடி வெடிக்க வா.. என்றழைத்த 
அந்தப் பொழுதில் மட்டும்
நிற்கிறாள் பயத்தோடு விலகி..

வீட்டு பூஜை முடித்து..
பலகாரம் பகிர்ந்துண்டு..
பக்கத்துக் கோவிலுக்கு ஜோடியாய் சென்று வந்து..

வீட்டு வாசல் கதவைப் பிடித்துக்கொண்டு 
வர மறுக்கும் அவள் கையைப் பிடித்திழுத்து
அணைத்தபடி வெடி வெடிக்க வைத்து..

அவளுக்கு வெடிமீதான பயம் போயிருந்தாலும்
நான் அணைத்து வெடிக்க வைப்பதற்காக
இன்னும் பயப்படுவதாய் நடித்து..

மாலையில் குடும்பத்தோடு ஊர் சுற்றி..
இருட்டியதும் வானவேடிக்கைகள் ரசித்து..

கம்பி மத்தாப்புகளின்.. புஷ்வானங்களின்..  
சங்குச் சக்கரங்களின்.. வெளிச்சத்தில்
அவள் குழந்தையாய் மாறிவிட்டதை ருசித்து..

இதோ இன்னும் இன்னும் எவ்வளவோ அழகான
பரவசம் மிக்க பண்டிகை நிமிடங்கள்..

 

கடல் பார்த்து தனிமையோடு 
அமர்ந்திருக்கும் பொழுதில்
அலை கரை சேர்த்த அதிசயச் சிலை போல..
எப்போதாவது கிடைக்கும்
அரிய பொக்கிஷ தினம் இது..

 

நான் இதுவரை கடந்த தீபாவளி எல்லாம்
என்னை மட்டும் சார்ந்தது..

இது என்னோடு இணைந்த
ஒரு பெண்ணையும் சேர்ந்தது..

 

இது இதுவரை இல்லா தீபாவளி..
நான் இதுவரைக் காணா தீபாவளி..

இதயத்தில் மழை தூறும் தீபாவளி..
மனம் வானவில்லாய் மாறிப்போகும் தீபாவளி..

ஐந்தடி இனிப்பு கிடைத்த தீபாவளி..
துள்ளிச் சிரிக்கின்ற மத்தாப்பு கிடைத்த தீபாவளி..

ஒவ்வொரு நாளுமே என் வாழ்வில் தீபாவளி..
இருந்தும் இதுதான் எனக்கும் அவளுக்கும் தலை தீபாவளி..

 

 

தலை தீபாவளி கொண்டாடும் அத்தனை புதுமணத் தம்பதியருக்கும்.. அத்தனை பிரியமானவர்களுகும் தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்களோடு…
 

பிரியமுடன்…
பிரியன்…

.


தீபாவளி நினைவுகள்…

ஒக்ரோபர் 15, 2009

 

அடடா.. இந்த தீபாவளி வந்துவிட்டாலே
எவ்வளவு பரவசம் ஊரிலும் நம்மிலும் !

 

துணிக்கடைகள்.. பட்டாசுக்கடைகள்..
பலகாரக் கடைகள் என்று
விதவிதமாய் வீதியெங்கும்
நிறைந்திருக்கும் கடைகளும் மக்களும் !

காத்திருப்பது சுகமானது
காதலுக்கு மட்டுமல்ல பண்டிகைக்கும்தான் !

 

எதிர்பார்த்து எதிர்பார்த்து
அந்த நாளின் முந்தைய இரவில்
கூட்டாளிகளோடு சேர்ந்து
விடிய விடிய கடைத்தெருக்களை
ஒரு கலக்கு கலக்கிவிட்டு..

தீபாவளி விடியற்காலையில்
வீட்டுக்கு வந்து..
முதல் வெடி போட்டு
ஊரை எழுப்பிவிட்டு..

எண்ணெய் வைத்துக் குளித்து..
புத்தாடை உடுத்தி..
அம்மா செய்த அத்தனை பலகாரங்களையும்
ஒரு பிடி பிடித்து..

இடைவிடாது ஒரு மணிநேரத்திற்கு
வெடி வெடித்து..
மெல்ல நண்பர் கூட்டம் நோக்கி
நடை போடும் கால்கள் !

 

அனைவரும் ஒன்றாய் சேர்ந்து..
அவனவன் புது உடை பற்றி கிண்டலடித்து..
பலகாரங்கள் பண்டமாற்றம் செய்து ருசித்து..

எந்தெந்த வீட்டுப் பெண்கள்
என்னென்ன புத்தாடை அணிந்திருக்கக்கூடும்
என்பதை தெரிந்துகொள்ளவும்
கிண்டல் செய்யவும்
மெதுவாய் தொடங்கும் நகர்வலம் !

 

பலபேர் அவனவன் ஆள் வீடு முன் கூடி
ஜாடை பேசி ரகளை கட்டி..

சேலை கட்டத் தெரியாமல் கட்டி நிற்கும்
சுடிதார் சுந்தரிகளை வம்பிழுத்து..
தொடரும் ஊர்வலம் !

 

அது என்ன மாயமோ தெரியவில்லை
பண்டிகை தினங்களில் எல்லாம்
இன்னும் அழகாகிவிடுகிறார்கள்
நம் பெண்கள் !

பின்.. இருக்கும் வெடிகள் வெடித்தது போதாதென
சின்னப் பையன்களின் வெடிகள் பிடுங்கி
வெடித்துக் கிளப்பி வீடுபோய் சேருவோம்..

 

மாலை வந்ததும் மறுபடி கூடும்
நண்பர்கள்.. நகர்வலம்..

வீதியையே ரெண்டாக்கிவிட்டு
வீடுபோய் சேருவோம்
ஆடித் திரிந்த அலுப்புடனும்..
பண்டிகை முடிந்த களைப்புடனும் !

 

அன்று முழுக்க பட்டாசு சத்தங்களையும்
மத்தாப்பு வெளிச்சங்களையும் போல..
சிரிப்பும் சந்தோஷமும் மட்டுமே
நிறைந்திருக்கும் எங்கள் மனதில் ! 
 

இதையெல்லாம் மெதுவாய் அசைபோட்டபடி
வாசலில் நின்றிருந்த என்னையும்
என் வீட்டையும் ஏதோ ஒரு எதிர்ப்பார்போடு
கண்டும் காணாதது மாதிரி
கடந்து சென்றுகொண்டிருக்கிறார்கள்
சில இள வயதுகள்..

 

அவர்கள் மீண்டும் இந்தப் பக்கம்
ஆவலோடு வரக்கூடும்..

எனக்கும் பருவ வயதில்
ஒரு மகள் இருக்கிறாளே…

 

.


?…

ஒக்ரோபர் 12, 2009

 

மேலிருந்து கீழ் விழும் அருவி..
கீழிருந்து மேல் எழும் குருவி..

விழுவதால் சிறிதா அருவி..
எழுவதால் பெரிதா குருவி..

 

.


ஆனந்த விகடனுக்கு என் நன்றிகள்…

ஒக்ரோபர் 7, 2009

 

edit 1

 

அத்தனை பேரையும் தன் தனித்துவ எழுத்தால் கட்டிப் போட்டிருக்கும் ஆனந்த விகடன் தனது சிறப்பு இதழான தீபாவளி மலரில்  எனது     “நீ என் தீபாவளி…”     கவிதையை  வெளியிட்டமைக்கான மனமார்ந்த  நன்றிகளோடு…   

 

பிரியமுடன்…
பிரியன்…

 

.


செல்லத் தொல்லை…

ஒக்ரோபர் 3, 2009

 

ரத்த ஓட்டப் பாதை எல்லாம்
சத்தம் போட வைச்சவளே..

கண்ணு முழிக்குள்ளார
கனவ வைச்சு தைச்சவளே..

 

ஒத்த இதயத்த தகர்க்கிறியே
வெடிகுண்டுக் கண்ணால..

மூச்சுக் காத்து போகும் இடமெல்லாம்
சாத்திக்கிச்சே உன்னால..

 

ஒடம்பு துடிக்க ஒரசி நின்னு
உச்சி முடி சிலுக்க வைப்ப..

சட்டுன்னுதான் தள்ளிப்போயி
சத்தியமா துடிக்க வைப்ப..

 

கொஞ்சிக் கொஞ்சிப் பேசி என்ன
சொட்டுச் சொட்டா நனைய வைப்ப..

கோபத்தோட ஏசி என்ன
கொத்துத் தீயா எரிய வைப்ப..
 

நீ நல்லப் பிள்ளையா.. – இல்ல
செல்லத் தொல்லையா…

 

.