2012 – நாளைய இந்தியா..

திசெம்பர் 31, 2011

நம் மூவர்ணக் கொடியில்

முக்கால்வாசி கறைகள்..

திணறத் திணற ஊழல்கள்..

விலைவாசி உயர்வு சாபங்கள்..

என்னவொரு கேவலம்..

எண்ணுகிறோம் நாமளும்..

படிந்த கறை அத்தனைக்கும்

காரணங்கள் யாரைக் காட்ட..

ஒரு சிலரின் வஞ்சகமா..

சமூகத்தின் அலட்சியமா..

சக மனிதா உண்மை சொல்..

வளர்ச்சி இனி சாத்தியமா..

ஒற்றுக் கொள்வோம் நண்பர்களே..

தவறில் பங்கு நமக்கும் உண்டு..

இல்லை இல்லை என்றாலும்..

உள் மனது உரக்கச் சொல்லும்..

நாம் செய்த பிழை என்ன..

அதை இதயம் உணர்ந்து துள்ளும்..

தனி மனிதன் செய்கின்ற

சின்னச் சின்னப் பிழைகள் சேர்ந்து

போட்டு விட்ட ஓட்டை..

உலுக்குதிந்த நாட்டை..

இதற்குண்டா தீர்வொன்று..

இருளென்றால் ஒளி உண்டு..

விடிவுக்கு வழி உண்டு..

இனி ஒரு விதி செய்தால்..

புதிதாகும் நாடின்று..

காசு பணம் தேடித் தேடி..

காலமெல்லாம் ஓடி ஓடி..

ஐம்புலன்கள் மூடி மூடி..

அடிமை போல வாடி வாடி..

வாழும் வாழ்வை நாளும் சாடி..

அன்பு வழியை நாடுவோம்..

சுய கொள்கை தன்னை சூடுவோம்..

தன்னை மதித்து வாழுவோம்..

மனசாட்சி ஜெயிக்க மீளுவோம்..

தனி மனித ஒழுக்கம்..

சுய உணர்வு சுத்தம்..

இந்த மாற்றம் போதும்..

மனித மனம் மாறும்..

மனித மன மாற்றம்..

இனத்தின் குண மாற்றம்..

இனத்தின் குண மாற்றம்..

மாநிலத்தின் மாற்றம்..

மாநிலத்தின் மாற்றம்..

மொத்த தேசம் காணும் மாற்றம்..

எளிதாகும் முன்னேற்றம்..

ஒவ்வொரு மனிதனும் மாறுவோம்..

ஒட்டு மொத்த தேசத்தையும் மாற்றுவோம்..

விந்தையா இது என வியக்கும் வண்ணம்

இந்தியா உயர்வேறும் திண்ணம்..

வாழ்க தமிழ் மொழி..

வளர்க பாரதம்..

நாளைய இந்தியா குறித்து “இனி ஒரு விதி செய்வோம்” எனும் தலைப்பில் இமயம் தொலைக்காட்சியில் வாசித்த கவிதை இது…

பிரியம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்களோடு…


அலை பிழை..

திசெம்பர் 26, 2011
கால் நனைத்துக் கொஞ்சும் அலை..
ஆள் இழுத்துச் சென்ற நிலை..
பாழ் இதென்று நெஞ்சு உலை..
பதறுகின்ற நேரக்கிளை..
முறிந்த அந்த நிமிடங்களை..
எண்ண எண்ண கண்ணில் மழை..
மீண்டும் அந்த தருணங்களை..
பிழை அலை உன் அலை பிழை
நீ விட்டுத் தொலை..
.
பிஞ்சுப் பிள்ளைகள் முதல்.. நெஞ்சுக் கனவுகள் வரை.. வாரி எடுத்துச் சென்ற கடல் பசியில்.. கணக்கின்றிக் கரைந்த அத்தனை  இதயங்களுக்கும் சமர்ப்பணம்…….
.

புனித இனம்…

திசெம்பர் 24, 2011
மனித இனத்தை நெறிப்படுத்த
மகத்தான உயிர்  கொடுத்த
உன்னத புனிதர்களால்தான்
இன்னமும் புரண்டு விடாமல் இருக்கிறது
இந்த பூமி..

 

பகவத்கீதை.. பைபிள்..  குரான்.. என..
வார்த்தைகளாய் வாழ்ந்து வரும்
புனித தத்துவங்கள்..
என்றும் நம் புத்திக்கு
சக்தி ஏற்றட்டும்..

 

பிரியம் நிறைந்த அத்தனை இதயங்களுக்கும்  இனிய  கிறிஸ்துமஸ்  நல்வாழ்த்துக்கள்..