வார்த்தைகளின் வலிமை…

திசெம்பர் 25, 2008

 

அறைந்துவிட்ட கன்னம் தடவி
மறுகன்னம் காட்டச் சொன்னது
சாதாரண வார்த்தைகள் இல்லை…

 

சொன்னதை நிரூபிக்க
சிரிப்போடு சிலுவையில் மரித்ததும்
சாமானியம் இல்லை…

 

அற்புதங்களுக்கு இடையில்
அன்பே பிரதானமாய் வாழ்ந்ததால்தான்
அந்த புண்ணியனின் வாழ்க்கை வரலாறானது…

 

கல்வாரி மலையில் வழிந்த
ரத்தக் கறைகள்
புனிதமாகிப் போட்டன
பிழைகள் நிறைந்த அன்றைய பூமியை…

 

இதோ…
திக்கெட்டும் முற்றிப்போய் கிடக்கும்
பாவங்களையும் மனித உரிமை மீறல்களையும்
வன்முறைகளையும் வன்கொடுமைகளையும்
சுத்தமாக்க…

 

தான் சொன்ன சத்திய வார்த்தைகளுக்குள்
இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கும்
அந்த தேவன்… தேவதேவன்…

இங்கு மீண்டும் தேவை…
இன்று அவசியம் தேவை…

 

இந்த தினத்தில் பிறந்து
அன்று மூன்றாம் நாளில் விழித்தெழுந்த
அந்த இறைவனின் வருகைக்காக
ஆவலோடு காத்திருக்கிறேன்
உங்களைப்போல நானும்…

 

பிரியமானவர்களுக்கான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களோடு…

பிரியமுடன்…
பிரியன்..

Advertisements