உடையாத நம்பிக்கை…

மே 25, 2010

 

ஒரு கண்ணாடிக் குடுவையைப் போல
நம் காதலை பத்திரமாய் உன்னை
பார்த்துக் கொள்ள சொல்கிறேன்.. 

நீயோ உனது செல்ல இம்சைகளால்
அதை எப்போதுமே பந்தாடுகிறாய்.. 

எக்கணத்திலும் அது உடையாது எனும்
பெருத்த நம்பிக்கையுடன்…

.


இன்று – 23 / 05 / 2010

மே 23, 2010

 

 

எனது பாடல்களோடு “ஜெயமுண்டு பயமில்லை…” திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா..

.


மொட்டைமாடிப் பூ…

மே 18, 2010

 

ஒரு மஞ்சள் மாலைப் பொழுதில்
மொட்டைமாடிக் கட்டைச் சுவற்றில் அமர்ந்து
சூரியனைக் காணாது முனை கவிழ்ந்த
சூரியகாந்திப் பூவைப்போல
தலை குனிந்து படித்துக் கொண்டிருக்கிறாய் நீ..

எதிர்மாடியில் படிப்பதாய்
நடித்துக்கொண்டிருக்கிறேன் நான்
உன் முகமலர்தலுக்கான சூரிய வெளிச்சமாய்…

.


நிலாச்சோறு…

மே 12, 2010

 

தாயின் இடுப்பில் இருந்தபடி
வாய் நிறைய உணவோடு
பிஞ்சுக் கைகளை அசைத்து அசைத்து
அந்தக் குழந்தை
அம்மா சொன்னதைக் கேட்டுக் கேட்டு
அப்படியே திருப்பிச் சொல்லி
ஆசை ஆசையாய் அத்தனை முறை அழைத்தும்
வரவே இல்லை அந்த நிலவு..

அதனால் என்ன..
இன்று நிலைவை அழைத்து அசையும் கை..
நாளை நிலவில் நின்று கையசைக்கும் !

.


அடுப்படிப்பணம்…

மே 6, 2010

 

அஞ்சறைப்பெட்டிக்குள்ளும்.. அரிசிப்பானைக்குள்ளும்..
அடுக்கி வைத்த டப்பாக்களுக்குள்ளுமென
அடுப்படியில் அங்கங்கே யாருக்கும் தெரியாமல்
ஒளித்து வைத்து ஒளித்து வைத்து
பல ஆண்டுகளாய் சேமித்து வைத்த
மொத்தப் பணத்தையும்
ஆசையாய் கொண்டுவந்து கொடுத்தாள் அம்மா..

காதலிக்கு பரிசளிப்பதற்க்காக
வேலைக்கு பணம் கட்ட வேண்டுமென சொன்ன
மகனின் ஒற்றைப் பொய்க்காக…

.