பூமிச்சூடு…

ஓகஸ்ட் 27, 2010

 

கத்திரி வெயிலுக்கு முன்னரே
நம்மை இஸ்த்திரி போடுகிறது அனல்..

நவம்பருக்கு முன்னமே
விடாமல் கொட்டித் தீர்க்கிறது மழை..

பகலில் பெரும் வெப்பம்..
இரவில் கடும் குளிர்..
பாலைவனத்திற்கு இணையாக
மாறிக் கொண்டிருக்கிறது நமது வாழுமிடம்..

காரணம்..
கண்முன் மாறிய காலநிலை மாற்றம்..
பாதை தவறிய பருவநிலை மாற்றம்..

உடலிலும் மனதிலும் உள்ளது போதாதென்று
ஓசோனிலும் போட்டுவிட்டோம் ஓட்டைகளை..

சூடாகிக்கொண்டே போகிறது பூமி..
எந்நேரமும் எதையும் 
நிகழ்த்திடும் வன்மத்தோடு..

நம் இஷ்டத்திற்கு இயற்கையை 
ஒருபோதும் வளைக்க முடியாது..
ஒருநாள் இதை இயற்கை நிச்சயம்
நிரூபிக்கும்..

உணரவும் திருந்தவும்
நாமிருப்போமா என்பது சந்தேகமே..

.


யதார்த்தம்…

ஓகஸ்ட் 21, 2010

 

சின்னப் பிள்ளைகளிடம் 
எமனின் வாகனமென 
கதை கட்டிக் கொண்டிருந்த ஆளை
நகைப்போடு பார்த்து நகர்ந்து கொண்டிருந்தது
எருமைமேல் அமர்ந்திருந்த சிட்டுக்குருவி..

.


நிஜ வாழ்வு..

ஓகஸ்ட் 15, 2010

 

தங்கக் கம்பிகளை சுவர்களாய் சுற்றிலும் வளைத்து..
கதவுகளை வைரங்களாலும் மாணிக்கங்களாலும்  
முத்துக்களாலும் அலங்காரம் செய்து..
வெள்ளிக் கம்பியில் ஊஞ்சல் செய்து..
உள்ளே விட்டான்
அந்த அபூர்வ பஞ்சவர்ண பேசும் கிளியை..

அமைதியாய் அமர்ந்திருந்த அதனிடம்
பெருமிதமும் கர்வமும் பொங்க கேட்டான்.. 
“இதை விட சிறப்பான இருப்பிடம்
இருக்க முடியுமா என் செல்லக் கிளியே..”

அவன் என்ன செய்தும் அதுவரை 
வாய் திறக்காத கிளி
வெறுமையோடு பதில் சொன்னது..

“ஏனில்லை முட்டாளே..
இருக்கிறதே..
துணையோடும் சுற்றத்தோடும்
குறிப்பாக சுதந்திரத்தோடும் 
நான் வாழ்ந்த அந்த
பட்டுப் போன பழைய மரத்தின் கிளை..”

.

நிஜ சுதந்திர தின வாழ்த்துக்களோடு..

பிரியமுடன்…
பிரியன்…

.


படைப்புக் குற்றம்…

ஓகஸ்ட் 10, 2010

 

விஷம் கலந்துவிட்டது விந்தணுக்களில்..
அதனால்தான் இப்போது
எங்கு பார்த்தாலும் பிறப்பு பிரச்சனைகள்..

கருத்தரிப்பதை கடினமாக்கி
வைத்திருக்கிறது தற்காலம்..

இயந்திரமாய் இயங்கி
கலவியை சம்பிரதாயமாய் செய்து
நாளைகளுக்காக நில்லாமல் ஓடிக்கொண்டு
நிகழ்காலத்தை தொலைத்துக் கொண்டிருக்கும் நாம்..

நமது பழக்க வழக்கங்களை பாதை மாற்றிவிட்டு
படைத்தவனை குற்றம் சொன்னால் என்ன நியாயம்..

 .


படித்துக்கொண்டே இருங்கள்…

ஓகஸ்ட் 5, 2010

 

எதையாவது படித்துக்கொண்டே இருங்கள்..
எதைப் பற்றியது..
எதற்காக இதைப் படிக்க வேண்டும்
என்கிற கேள்விகளை எல்லாம்
ஓரமாய் ஒதுக்கி வைத்துவிட்டு
எடுத்துப் படித்துக்கொண்டே இருங்கள்
எதையாவது ரசனையோடு..

ஆன்மீக நூல்களில் உங்களின்
காமத்திற்கான விடைகள் கிடைக்கலாம்..
காதல் பக்கங்களில்
ஆன்மிகத்திற்கான அர்த்தங்கள் புலப்படலாம்..
கவிதைப் புத்தகங்களில்
அறிவியல் விடைகள் இருக்கலாம்..
அறிவியல் நூல்களில்
அழகியல் குறிப்புகள் தென்படலாம்..

ஏதாவதொன்றில்
எதிர்பாரா விடைகள்
எதிர்ப்பார்த்தபடி கிடைக்கக்கூடும்..

நேரமில்லை என்கிற 
சாக்கு மூட்டைகளை எல்லாம்
ஒன்றாய்க் கட்டி கடலில் போட்டுவிட்டு..
ஒருநாளைக்கு குறைந்தது
ஐந்து பக்கங்களாவது
எதையாவது படித்துக்கொண்டே இருங்கள்..

அது உங்கள் மனதிற்கு
மிகவும் பிடித்தமானதாய் இருக்கவேண்டும் 
என்பது மட்டும்தான் மிகவும் முக்கியம்..

பிடித்ததைப் படித்துக்கொண்டே இருங்கள்..
அப்போது பக்கங்கள் வாய் பேசும்..
அர்த்தங்கள் புலனாகும்..

பாதைகள் தெளிவாகும்..
பயணங்கள் புதிதாகும்…

.


அர்த்தப் பார்வை…

ஓகஸ்ட் 1, 2010

 

உடைக்குள் அடங்காமல் திமிறும்
உன் அழகைக் கண்டு திணறும் என் மனதை
தித்திக்கும் தீண்டலால்
தீப்பிடிக்க வைத்துவிட்டாய்..

உன் துப்பட்டா முனை உரசலில் 
தூளாகிப்போன என் எல்லைகளைத் தாண்டிவந்து
ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறாய்
எதுவுமே தெரியாதவள் போல..

இது போதாதென்று
இந்த பாழாய்ப்போன காற்று வந்து
உன் கூந்தல் கலைத்து மூடிவிட்டுப் போகிறது
என் முகத்தை..

அந்த வாசம் பட்டு 
எந்தன் சுவாசம் சுட்டு
நிற்கிறேன் செய்வதறியாமல்..

இப்பொழுதும்கூட என்னிடம்
எதையோ சொல்லி
சிரித்துக்கொண்டிருக்கிறாய் நீ..

மௌனமாய் என்னை  
தொலைத்துக் கொண்டிருக்கிறேன் நான்..

ஒரு கட்டத்தில்..
கட்டுப்படுத்தி வைத்த காதலை எல்லாம்
ஒற்றை முத்தத்தில் கொட்டிவிடுவதென்னும் முடிவோடு
உன்னை அணைக்க முயற்சிக்கையில்..

“சரி நாளைக்குப் பார்க்கலாம்” என 
மெதுவாய் நகர்ந்தாய்
என்னை அர்த்தத்தோடு பார்த்தபடி..

அடடா.. எல்லாமே தெரிந்திருந்தும்
எதுவுமே தெரியாதது போல இருக்க
எப்படித்தான் முடிகிறதோ
இந்தப் பெண்களால் மட்டும்…

.