மானப் பசி..

ஏப்ரல் 29, 2009

 

நாங்கள் மானம் கெட்டு
வீடுகள் விட்டு
உறவுகள் கண்முன் சாவது கண்டு துடிதுடித்து
உங்கள் துணை வேண்டி கரங்கள் நீட்டுகிறோம்…

 

நீங்களோ ஐயோ பாவம் என உச்சுக் கொட்டி
எங்கள் கைகளில் திணிக்கிறீர்கள் சோத்து மூட்டைகளை..

 

எங்களுக்கு வயிற்றுப் பசி பெரிதில்லை சகோதரா..
மானப்பசி..  இனப்பசி..  இதயப்பசி பெரிது..

 

ஊடகங்களில் எங்கள் நிலை பார்த்து
நிவாரண நிதியும் சோத்து மூட்டையும் 
தருவது போதும்..

 

எம் கண்களில் கசிகிற
உரிமைகளுக்கான பசியைப் பார்..

 

இனம் அழியும் கோபமும் வெறுமையும் பொங்கும்
கொடும் பசியைப் பார்..

 

நம்மினம் காக்க வலிமை தா தமிழா..
தமிழினம் தரணியாளும் நாள் வரும் தமிழா…

Advertisements

தேர் தள்…

ஏப்ரல் 25, 2009

 

விதவிதமாய் பொய் மூட்டைகள் கட்டிக் கொண்டு
வண்டி ஏறி வீட்டு வாசலுக்கே வந்து
பிச்சை எடுக்காத குறையாய்
கெஞ்சிக் கூத்தாடி இளித்து வழிந்து 
கூனிக் குறுகி காலில் விழுந்து
வாக்குப்பெட்டிக்குள் நமது முத்திரை விழுவதற்க்காய்
புதிது புதிதாய் புளுகி
நகரை வலம் வரும்
நமது நாகரீக அரசியல்வாதிகளின் தேர்தல்

 

ஆளும் எதிர் கட்சிகள் மாறி மாறி
தத்தம் ஊழல்களை உலகுக்கு எடுத்துக்காட்டி
பதுக்கிய சாக்கடைத்தனங்களை எல்லாம்
மொத்தமாய் சேர்ந்து தூர்தல்

 

பின் ஏதோவொரு கட்சி
அழகிய பொய்கள் அதிகம் சொல்லி
அறிக்கைகள் தந்து ஆட்சிக்கு வந்துவிட்டபின்
அத்தனை மக்களையும் அப்படியே வார்தல்

 

இந்த முறையாவது நல்லது நடக்குமாவென  
ஒவ்வொரு முறையும் ஏங்கி 
எதுவும் நடக்காது 
பின் வழக்கமான வாழ்வை தொடங்கும்
என் சக மனிதா…

நீ இனியாவது நினைத்தது நடக்குமாவென 
குலதெய்வத்தை வேண்டி ஊரோடு சேர்ந்து தேர் தள்


தனித்திருங்கள்…

ஏப்ரல் 18, 2009

  

அன்றாட வாழ்வில்
அவ்வப்போது கொஞ்சம்
தனித்திருக்க பழகிக் கொள்ளுங்கள்…

 

தனிமை அமைதியைத் தரும்..
அமைதி அறிவைக் கிளரும்..
அறிவு உண்மைகளை உணர்த்தும்..
உண்மைகள் உங்களை திருத்தும்…
அதனால் வாழ்க்கை தெளிவாகும்..

 

ஆதலால் எங்கும் நில்லாத
அன்றாட வாழ்வில்
அவ்வப்போது கொஞ்சம்
தனித்திருக்க பழகிக் கொள்ளுங்கள்…


களங்கமற்ற புனிதம்..

ஏப்ரல் 14, 2009

 

உடலை பிசைந்து தின்னும் காமம்
நாகரீகம் கருதி
காதலென்னும் பெயர் சூட்டிக் கொள்கிறது…

 

உயிரை உன்னதமாக்கும் காதலோ
தன் பெயர் களங்கமாவது கண்டு
செய்வதறியாமல் திகைக்கிறது…

 

எந்த திசையாய் இருந்தால் என்ன
விடியல் என்பது கிழக்கில்தான்..

எத்தனை களங்கம் செய்தாலும்
காதல் என்றும் புனிதம்தான்…


முடிவிலி…

ஏப்ரல் 10, 2009

 

நான் நானாக இருப்பதை
எப்போதும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது
இந்த உலகம்..

 

என் இஷ்டத்திற்கு
நான் வாழ நினைக்கும் வாழ்கையை
அதன் இஷ்டத்திற்கு
வளைக்க முயற்சிக்கிறது அது..

 

சில நேரங்களில் கெஞ்சிப் பார்க்கிறது..
சில நேரங்களில் கொஞ்சிப் பார்க்கிறது..
அழுகிறது.. சிரிக்கிறது..
சந்தர்ப்ப சூழ்நிலைகளில்
மிரட்டிக் கூட பார்க்கிறது..

 

எப்படியாவது அதன் வலைக்குள் என்னை
சிக்க வைக்க முயற்சிக்கிறது..

 

நானும் சிக்குவதாயில்லை..
அதுவும் விடுவதாயில்லை..
இது என்றும் முடிவதாயில்லை….


மெய்…

ஏப்ரல் 6, 2009

  

காற்றடித்து எழுகிற காகிதமும்..
சிறகு விரித்து திரிகிற பறவையும்..
பறப்பதால் ஒன்றாகுமா என்ன…

 

நொடிப் பொழுதில் பற்றி
எரிந்து அணைகிற காமமும்..
ஜென்மம் தாண்டி
நிலைத்து வாழ்கிற காதலும்..
சுகத்தால் ஒன்றாகுமா என்ன…

 

பொய்கள் இங்கு பிழைப்பதில்லை..
மெய்கள் என்றும் அழிவதில்லை…


வாழ்தல்…

ஏப்ரல் 2, 2009

 

உள்ளே பொத்திப் பொத்தி வைத்து
ஒரு நாள் அடக்க முடியாமல் வெடிக்கும்
எரிமலையாகவும் இருக்க வேண்டாம்…

 

எதையும் அடைத்து வைக்காமல்
எப்போதும் கொட்டித் தீர்த்து விடுகின்ற
அருவியாகவும் இருக்க வேண்டாம்…

 

எல்லைகள் ஏதுமற்ற
வானமே சொந்தமாய் இருந்தாலும்..

இஷ்டம் போல சுற்றித் திரிய
சுதந்திர சிறகுகள் இருந்தாலும்..

வரம்பு மீறாத பறவையைப் போல
என்றும் மகிழ்ச்சியாய் வாழ்தல் போதுமானது…

உண்மையில் அதுதான் சுகமானது….