சார்தல்…

மே 17, 2013

மழைத்துளிக்கும் மணல்வெளிக்குமான உறவு..
தூரம் சார்ந்ததன்று..
ஈரம் சார்ந்தது..

உனக்கும் எனக்குமான பிணைப்பு..
பருவம் சார்ந்ததன்று..
பிரியம் சார்ந்தது


வெல்லட்டும் போராட்டம்…

மார்ச் 14, 2013

மத்தியில் வேறு மொழி
கொண்டிருக்கும் காரணத்தால்
ஆதிமொழித் தாய்மொழியை
தாங்கி நிற்கும் இனமழிக்க
ஆட்சி இங்கு நினைக்குது..

அண்டைதேசம் வாழும்
அருமைச் சொந்த பந்தங்களை
கூடி இனமழிக்க
ஆதரவும் கொடுக்குது..

சொந்ததேச மக்கள் குரல்
கேட்டிராமல் மவுனித்து
எம்மொழியை வீழ்த்திடவே
பள்ளம் பல பறிக்குது..

உம் பாட்டனுக்கும் பாட்டனையும்
அவனுக்கும் பாட்டனையும்
பார்த்த மொழி எங்கள் மொழி..
பதம் குறையா தங்க மொழி..

எத்தனை இடர் வரினும்
சலிக்காது தாங்கி நிற்கும்..
மொத்தமாய் தடையறுத்து
தனித்துவமாய் ஓங்கி நிற்கும்..

அது நடக்கும்.. அப்பொழுது..
ஓரமாய் ஒடுங்கி நின்று..
கைக்கட்டி வாய் பொத்தி..
அடங்கி ஒடுங்கி திராணியற்று..
பாவமாய் பார்ப்பீர்கள்
பாழாய்ப்போன மவுனிகளே..

வெல்லும் இந்தப் போராட்டம்..
காண்பது வெறும் வெள்ளோட்டம்..
விரைவில் தொடங்கும் முழு ஆட்டம்..
புதிதாய் விதியை அது மாற்றும்..

உணர்வுயிர்த்துப் போராடும் அத்தனை அன்பர்களுக்கும்…


நளின முடிவிலி…

மார்ச் 7, 2013

காற்று மொழி பெயர்க்கும்..
கடல் காற்று மொழி பெயர்க்கும்..
கூந்தல் அலைந்தவிழ்ந்து..
உன் கூந்தல் முகந்தவழ்ந்து..
கூறும் வார்த்தைகளை..
கூறாத வார்த்தைகளை..

வாங்கி மனம் குதிக்கும்..
உள்வாங்கி மனம் குதிக்கும்..
ஒரக் குறுஞ்சிரிப்பால்..
விழியோரக் குறுஞ்சிரிப்பால்..
ஈர்க்கும் உனையணைக்க..
உயிரீர்க்கும் உனையணைக்க..

தாவி அடம் பிடிக்கும்..
எனதாவி அடம் பிடிக்கும்..
மை கண்ணழகின்..
இமைக் கண்ணழகின்..
இடையில் தொலைந்துவிட..
மெல்லிடையில் தொலைந்துவிட..

வைக்கும் உன் நளினம்..
தீ வைக்கும் மென் நளினம்..
நீளும் முடிவிலியாய்..
கதி நீளும் முடிவிலியாய்..
தொடரும் எதுவரையும்..
பின் தொடரும் அதுவரையும்..
பிரியத் தோடென் வரியும்..


குழந்தையின் மரணம்…

பிப்ரவரி 26, 2013

ஜனித்த விதை
முளைத்து வளர்ந்து
செழித்தச் செடியென
கிளை விரித்து எழும் முன்..
முளையில் முறிதல்
எத்தனை துயரம்..

பத்து மாதமும்
பார்த்துப் பார்த்து..
கருவறையில்
காத்துச் சுமந்து..

பிறந்ததில் இருந்து
ஒவ்வொரு நிமிடமும்..
உயிரறையில்
ஊற்றிக் கலந்து..

மூச்சென சேர்த்து வளர்த்த..
முழுப்பாசம் வார்த்து வளர்த்த..
மென்மழலை மாறா
இளந்தளிர்ச் சிறு மகளை..

சட்டென வந்து
சாவு கொண்டு போகுதெனில்..
சாவுன்னைச் சாகடிக்க
வரமெனக்கு வாராதா..

குழந்தைகள் மரணிக்கிற நொடியில்
கடவுளுக்கு இதயமில்லை..

குழந்தைகளை மரணிக்கிற வரையில்
கடவுளே இல்லை இல்லை..

உடலெடுத்தும் உதவாத
உயிர் வாழவே கூடாத..
ஜீவன்களோ நிறைய உண்டு உலகிலே..

பால் மணம் மாறாத..
சூதொன்றும் அறியாத
பிள்ளை உயிர் கொள்ளாதே காலனே..

தோழியவள் கண்ணீரின்
சூடு தாங்கா கவி நெஞ்சு..
வேதனை தாளாது
கட்டளை ஒன்றிடுகிறது..

ஈடு செய்ய முடியாத
இழப்பிற்கு மருந்தாய்..
வலி கொண்ட இதயம்
இளைப்பாற அவள் வாழ்வில்..

மாறுதலும் நிம்மதியும்
தந்துவிடு காலமே.. – கண்ணீர்
துடைத்து.. கை கொடுத்து..
தேற்றிவிடு காலமே..

பிரியத்தோழி காயத்திரியின் காயத்திற்கும்…
அவள் அருமகளின் ஆத்மாவிற்கும்…


வீரிய விதை..

பிப்ரவரி 23, 2013

வீரிய விதை..

கொன்றுத் தீர்ப்பது என
முடிவெடுத்த பிறகு..
குழந்தைகள் என்ன..
பெண்கள் என்ன..
பெரியவர்கள் என்ன..

மொத்தம் அழிப்பது என
துணிந்துவிட்ட பிறகு..
பூக்காடு என்ன..
முட்காடு என்ன..
பறவைக் கூடு என்ன..

கூறு போட்டு.. கூட்டம் கூட்டி..
திட்டமிட்ட.. எண்ணப்படி..
மிச்சமின்றி உங்களால்..
ஒட்டுமொத்தம் தேடித்தேடி..
வேரறுத்தல் நடக்கும்.. – இந்த
சகமழித்தல் பலிக்கும்..

மொத்தத்தையும் அழித்தாலும்..
மீதமின்றி முடித்தாலும்..
அணுவணுவாய் சிதைத்தாலும்..
அத்தனையும் புதைத்தாலும்..

ஒன்று மட்டும் நிச்சயம்..
ஒன்று மட்டும் நிச்சயம்..

எவ்விதமோ.. எப்படியோ..
எவ்விடமோ.. எக்கணமோ..
வீரியத்தை சுயத்தில் கொண்ட..
விடுதலையை உயிர்ப்பில் கொண்ட..

விதை வெடித்து முளைக்கும்..
விருட்சமென நிலைக்கும்..

களைகள் யாவும் மரிக்கும்..
மீண்டும் பூமி சிரிக்கும்..

( பாலச்சந்திரனின் ஆத்மாவுக்கும்…
பாவிகளின் கர்மாவிற்க்கும்… )


நித்திலப் பவுர்ணமி…

பிப்ரவரி 10, 2013
 
ஓரடிக் கவிதையென
கண்களை உருட்டியபடி..
என் கைகளில் பூவென
முதல்முறை ஸ்பரிசித்தாய்..
முந்தைய வருட இதே நாளில்..
 
இன்று..
தத்தித் தத்தி நடை.. 
அம்ம்ம்மா.. இத்த்த்தோ என
மழைச் சாரல் மழலை..
மூன்றுப் பால் பல் புன்னகை..
வீடெங்கும் தவழல்..
தூக்கக் கால் கட்டி
இரு கை நீட்டல்..
தலையாட்டிப் பாடல் ..
கையாட்டி ஆடல்..
சொல்லிக் கொண்டே போகலாம்..
சொற்களுக்கு பஞ்சம்..
 
மாதப்பிறைகள் வளர்ந்து..
ஒரு வயது முழு நிலவென
ஒளி வீசும் நித்திலமே..
 
செல்ல அடங்களால்
பிள்ளைக் கொஞ்சல்களால்
வாழ்வை அழகாக்கிய
குட்டி தேவதையே..
 
ஒன்று என்பது தொடக்கம் ..
நன்று அதன் வழக்கம்..
தொடங்கட்டும் உன்
வயதில் ஒன்றும்..
வாழ்வில் நன்றும்..
 
பிடித்த முத்தங்களோடும்..
பிறந்த நாள் வாழ்த்துக்களோடும்..
 
பிரியமுடன்…
அப்பா…   🙂
 

வதை செய் வன்புணர்வை… – மறு புது பதிவு…

திசெம்பர் 31, 2012

புணர்ச்சி என்பது
உடல் கரைந்து
உயிர் நிறைந்து திளைக்கும்
புனித உணர்ச்சி..

இரண்டு மனங்கள்
இணைந்த அன்பின்
உச்சகட்ட கிளர்ச்சி..

காட்டு வெள்ளமாயினும்
பள்ளம் நோக்கித்தான்
பாயும்..

மிருகங்கள் கூட
துணை நிலை கண்டே
புணரும்..

வெள்ளைத்துளி கொட்ட
விரிசல் கிடைத்தால்
போதுமென்றலையும்
இச்சை வெறிகளின்
விந்துப் பை
பிய்த்தெடுப்போம்..

மங்கையுடல் தின்ன
மதி கெட்டலையும்
காமப் பேய்களின்
உயிர்க் குறியை
அறுத்தெறிவோம்..

உலவி தரி கெட்டு
கலவி காணத் துடிக்கும்
அசுத்தக் கண்களை
ஆயிரம் துண்டுகளாய்
கிழித்தெடுப்போம்..

வதை செய்து வன்புணர்வை
வேரோடு எடுத்தெரிப்போம்..

மலரட்டும் மனிதநேயம்..
மணக்கட்டும் உண்மைப் பாசம்..


மக்காயாலா பாடல் வரிகள்.. – நான்

ஓகஸ்ட் 25, 2012
.
பல்லவி
.
மக்காயாலா மக்காயாலா காயமாவுவா..
மக்காயாலா மக்காயாலா காயமாவுவா..
மக்காயாலா மக்காயாலா காயமாவுவா..
எலா..  எலா.. எலா.. ( விஜய் ஆண்டனி )
.
இளமைக்கு எப்பொழுதும் தயக்கமில்லை..
தடையேதும் கண்களுக்குத் தெரிவதில்லை..
எங்களுக்குக் கால்கள் இன்று தரையில் இல்லை..
இல்லை.. இல்லை.. இல்லை..
.
தனிமையிலே கூச்சம் இல்லை..
தயங்கி நின்றால் மோட்சம் இல்லை..
காற்றுக்கென்றும் பாரம் இல்லை..
எல்லைகள் மீறு தப்பில்லை..
.
மக்காயாலா.. மக்காயாலா..
.
சரணம்  1
.
இரவினில் தூக்கம்  கிடையாதே..
பகல்வரை ஆட்டம் முடியாதே..
கலர் கலர் கனவுகள் குறையாதே.. குறையாதே..
.
நேற்றைய பொழுது கடந்தாச்சே..
நாளைய பொழுது கனவாச்சே..
இன்றைய பொழுது நம் வசமாச்சே வசமாச்சே..
.
நண்பர் கூட்டம் ஒன்றாக சேர்ந்தால் பொங்கும் சந்தோசம்..
கோடி கோடி ஆசைகள் வந்து கதவு தட்டும்..
.
மக்காயாலா.. மக்காயாலா..
.
சரணம்  2
.
நட்புக்கு நேரங்கள் தெரியாதே..
பேச்சுகள் தொடர்ந்தால் முடியாதே..
இடைவெளி இங்கே கிடையாதே.. கிடையாதே..
.
மனதுக்குள் எதையும் அடைக்காதே..
வாய்ப்புகள் மறுபடி கிடைக்காதே..
இருப்பது ஒரு லைப் மறக்காதே.. மறக்காதே..
.
நண்பன் தோளில் சாய்ந்தாலே போதும் கவலைகள் தீரும்..
இன்ப துன்பம் நேர்கின்ற போதும் நட்பு தாங்கும்..
.
மக்காயாலா.. மக்காயாலா..
.

வாழ்க தமிழினம்…

ஏப்ரல் 12, 2012

 

நிலா நிலா ஓடி வா என்கிறது தமிழ்..
rain rain go away என்கிறது ஆங்கிலம்..

அன்பிற்கான ஆதாரமாய்
அம்மாவில் தொடங்குகிறது தமிழ்..

ஆதாம் ஏவாள் தவறுக்கான
ஆப்பிளில் தொடங்குகிறது ஆங்கிலம்..

என்றாலும் நமக்கு நம் பிள்ளைகள்
அம்மா அப்பா என்று அழைத்தால் கோபம்
மம்மி டாடிதான் சந்தோசம்..

வாழ்க தமிழ் மக்கள்..
வளர்க தமிழினம்..

 

.

சொந்த மண்ணில் சொந்த மொழி பேசக் கூசுகிற கேவலம் விரைவில் மாறும் நாள் வரும்.. விடியல் காணும் நாள் வரும்..
.
உயிரென.. மூச்சென.. உயிரையும் மூச்சையும் விட உயர்ந்த உன்னத சுயமென உள்ளே என்னுள்ளே நம்முள்ளே நிறைந்திருக்கும் சுத்தத் தாய்மொழித் திருநாள் வாழ்த்துக்கள்..
.