சமரச முத்தம்…

ஏப்ரல் 20, 2011

 

சண்டையிட்ட கோபத்தில் 
சத்தமின்றி அழுது கொண்டிருக்கும் உன்னை 
என்ன செய்தும் 
சமாதானப்படுத்த முடியாமல் போகும் நிலையில்.. 

அடுத்து என்ன செய்வதெனத் தெரியாமல்
இழுத்தணைத்து நான் வைக்கும் சமரச முத்தத்தில்
சட்டென சமாதானம் அடைந்து
செல்லமாய் என்னை அடித்தபடி 
கண்ணீரோடு  சிரித்து விடுகிறாய் நீ..

அடியே..
அன்னை அடித்தாலும்
அவளையே கட்டிக்கொண்டு அழும் 
சின்னக் குழந்தைக்கும் உனக்கும் 
என்னடி வித்தியாசம் !

.

Advertisements

அந்தரங்கப் புன்னகை…

ஏப்ரல் 3, 2011

 

முற்றாத இளம் அதிகாலை
ஒரு சூரிய உதயத்தைப் போல
கிழக்கில் நீ நடந்து வருகிறாய்..

பக்கத்தில் வர வர 
கூடிக் கொண்டே போகிறது உன் அழகு..

நானோ அசைவற்ற மரமாய்
உன் வருகையை 
வைத்தக்கண் வாங்காமல் பார்த்துக்கொண்டே நிற்கிறேன்..

வந்து விட்டாய் என்னருகில்..

இப்பொழுது இயல்பாய் இருக்க முயற்சித்து முயற்சித்து 
முடியாமல் தோற்றுக்கொண்டே இருக்கிறேன் நானுன் முன்னால்..

அக்கணத்தில் நெருங்கி வந்து நீ சிந்திய
அந்த அந்தரங்கப் புன்னைகைக்கான அர்த்தம்
எனக்கு மட்டும்தான் தெரியும் !

.