நாட்கடந்த வணக்கங்கள்..

பிப்ரவரி 3, 2014

பிரியம் நிறைந்த இதயங்களுக்கு பிரியனின் வணக்கங்கள்..

அனைவரும் நலமென நம்புகிறேன். ஆறுமாத கால இடைவெளிக்குப் பிறகான எனது பதிவு இது என நினைக்கிறேன்.

குறைந்தபட்சம் வாரமொருமுறையாவது பதிவிட்டத் தருணங்கள்.. குறிப்பாக.. திரைப்பாடல் இயற்றுநர் பட்டயப் படிப்பு தொடர்பாக தொடர் பதிவுகளோடு பயணித்த சமயத்திற்கு பிறகு.. தற்போது மாதங்கள் கடந்த பெரிய இடைவெளிக்குப் பின்.. பதிவிடுவதில் மகிழ்வு..

பதில்.. பதிவிட நேரமில்லை என்பதல்ல.. பதிவிடாதிருந்த காரணமுண்டு என்பதே..

தேவை இருக்கிறதோ இல்லையோ.. இடைவெளிக்கான காரணங்கள் மற்றும் திரைப்பாடல் இயற்றுநர் படிப்பு என்னானது என உங்களுக்குள் எழுந்த கேள்விகளுக்கான பதில்களோடு அடுத்தக் கட்டத் தகவல்களை பகிர்தல் கடமையெனக் கருதுகிறேன்..

விஜய் ஆண்டனியின் சலீம், முரண் குழுவினரின் அடுத்த படமான உலா, ஒளிப்பதிவாளர் விஜய்மில்டன் இயக்கும் கோலிசோடா, அய்யனார் வீதி என 10-க்கும் மேற்பட்டப் படங்கள்.. இத்தோடு சேர்த்து வெளிவரக் காத்திருக்கும் பல படங்கள் என சரியான திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது படைப்புலகப் பயணம்..

திரைப்பாடல் இயற்றுநர் பட்டயப் படிப்பைப் பொறுத்தவரை..

உலகிலேயே முதல் முறை.. இந்தியக் கல்விக் கட்டமைப்பில் இதுவரை இல்லாத படிப்பு.. பெரும் வரலாற்றுப் பதிவு எனப் பன்பெருமைகளைக் கொண்ட தனிச்சிறப்பு வாய்ந்த.. அடியேனது பத்தாண்டுக் கனவான.. திரைப்பாடல் இயற்றுநர் பட்டயப் படிப்பு..

சில காரணங்களால் முன் குறிப்பிட்டப் பல்கலைக்கழகம் வாயிலாக அல்லாது.. அப்பல்கலைக்கழக வேந்தரின் ஆசியுடன்.. தனிப்பட்ட முறையில்.. அடியேனது ஒருங்கிணைப்பில்.. உறுதுணையாய் பாடலாசிரியர் அண்ணாமலை.. நூலாக்கத்திற்கு பாடலாசிரியர் கிருதியா மற்றும் பல படைப்பாளிகள் இணைந்து உருவாக்கியுள்ள “தமிழ்த் திரைப்பாக்கூடம்” எனும் அமைப்பின் வழி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

தடையில்லா ஆற்றலுடன்.. சுதந்திரத்துடன்… நேரடியாக பாடலாசிரியர்கள் தலைமையில் புத்திளம் பாடலாசிரியர்கள் படைப்பைக் கற்றுக் கொள்ளும் வீரியத்துடன்.. வாரயிறுதி நாட்களில்.. மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றன வகுப்புகள்..

முந்நிலை கடந்து இந்நிலை.. இத்தருணம் வருவதற்கான இடைவெளிதான் அடியேன் பதிவுகள் இடாமைக்குக் காரணம்..

இனி “தமிழ்த் திரைப்பாக்கூடம்” வழங்கும் திரைப்பாடல் இயற்றுநர் படிப்பின் பயணப் பதிவுகளையும்.. அடியேனது படைப்புப் பதிவுகளையும் அடிக்கடி களமிறக்க முனைகிறேன்..

அடியேனுக்கு என்றும் உங்கள் அன்பும்.. ஆதரவும்.. கிடைக்குமெனும் நம்பிக்கையோடு..

பிரியமுடன்..
பிரியன்..


பாடல் எழுதக் கற்றுக் கொள்ள வாய்ப்பும்.. பட்டயப் படிப்பும்..

மே 25, 2013

காலத்தால் அழியாப் பாடல் படைக்க.. பாடல் எழுதக் கற்றுக்கொள்ள.. பாடலாசிரியராய் பரிணமிக்க.. படைப்பாளியாய் உயர.. தாளா விருப்பமெனில்.. இந்தத் தகவல் உங்களுக்கானதுதான்..

வார்த்தைச் சிறகுகள் முளைத்து வழி தேடி அலைகிற.. பாடல் படைத்துப் பறக்கக் கற்றுக் கொள்ள பாதை நாடி வருகிற ஒவ்வொருவருக்கும்.. பிரத்தியேகமாய்.. பிரகாசமாய்.. திறந்திருக்கிறது ஒரு புத்தம்புது வானம்..

தேடித்தேடியும் கிடைத்திராதொரு புது அறிவும்.. இதற்கு முன் இல்லா அரிய வாய்ப்பும்.. மனம் நிறையும் பெரும் அங்கீகாரமும்.. எழுத்துப்பசி கொண்ட.. படைப்புத்தீ கொண்ட.. உங்களில் எழுபது பேருக்கு காத்திருக்கிறது..

ஒரு பாடல் உங்கள் வாழ்வை மாற்றலாம்.. ஒரு பாடல் உங்களை உயரே ஏற்றலாம்.. ஒரு பாடல் உங்கள் புகழாய் மாறலாம்.. ஒரு பாடல் உங்களை வரலாறாக்கலாம்..

ஒட்டுமொத்த உலகின் அத்தனைக்கோடித் தமிழ்த்திரை ரசிகர்களும் ரசிக்கும் ஆயிரக்கணக்கானப் பாடல்களைப் படைப்பது.. திரைத்துறையின் இருபதுக்கும் குறைவான பாடலாசிரியர்களே. காரணம் அவர்களுக்கு மட்டுமே வசப்பட்ட படைப்புச் சூட்சுமம்.

ஒரு சிலருக்கே சாத்தியப்பட்ட அந்த வித்தை, ஆர்வமும் அடிப்படைத் தகுதியும் உள்ள அனைவருக்கும் கைக்கூடும் எனில்.. அதுவும் எவரால் பாடல் இயற்றப்படுகிறதோ அந்த முன்னணிப் பாடலாசிரியர்களே அதைக் கற்றுத்தர முன்வந்தால்.. மேலும் இது தனிப்பட்ட முறையில் அல்லாது இந்தியாவின் தலைச்சிறந்த ஒரு பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தோடு நிகழ்ந்தால்..

பாடலாசிரியர் பிரியன் ஆகிய அடியேனது தலைமையில்.. முயற்சியில்.. ஒருங்கிணைப்பில்.. எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறது.. உலக வரலாற்றில் முதல்முறையாக.. தமிழ்த் திரைப்பாடலுக்கான ஒர் ஆண்டுப் பட்டயப் படிப்பு (one-year diploma in lyric writing).

உள்ளுக்குள் உயிர்த்திருக்கும் சொந்த வார்த்தைகளைச் சந்த மெட்டுகளுக்குள் ஊற்றி, உலகறிய மேடையேற்ற விரும்பும் ஒவ்வொருவருக்குமான சரியான களம்.

இதுவரை எளிதில் அறிந்துகொள்ள இயலாதிருந்த பாடல் இயற்றும் அறிவு. ஒரு முழுமையான பாடல் இயற்றுநராய் மிளிரத் தக்க பல வாய்ப்பு. நேரடியாக பாடலாசிரியர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளும் அனுபவம். பல்கலைக்கழக அளவில் திரைப்பாடல் இயற்றுநர் படிப்புக்கான அங்கீகாரம். இவை அனைத்தும் இதில் வசம்.

மொழியறிவு, கவியறிவு, பாட்டறிவு, இசையறிவு, படைப்பறிவு, ஆய்வறிவு எனப் பல்லறிவு வளர்த்து.. பாடல் படைப்பு, பாடல் பதிவு எனச் செயலறிவு செழித்து.. திரைத்துறை, சின்னத்திரை, ஆன்மீகப் பாடல்கள், விளம்பரக் குறும்பாடல்கள், ஆல்பங்கள் எனப் பாடல் நுழையும் அனைத்துத் துறையறிவும் அறிந்து.. இறுதியில் திறன்மிக்க முழுமையான பாடல் இயற்றுநராய் இச்சகத்தில் படைப்பெய்த இதுவே பாதை..

எஸ்.ஆர்.எம். சிவாஜி கணேசன் திரைப்படக்கல்லூரியில், வரும் ஜீலை 2013-ஆம் ஆண்டிற்கான திரைப்பாடல் இயற்றுநர் – தினசரி மற்றும் வாரயிறுதி வகுப்பில் இணைய விரும்புபவர்கள்.. diplyric.piriyan@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்கள் புகைப்படத்துடன் கூடிய முழு சுயவிவரங்கள் (Bio-data) மற்றும் கவிதை, பாடல் என முன் படைத்த ஏதாவது ஒரு பதிவை இணைத்து அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.. தேவைப்படும் விவரங்கள் அனுப்பி வைக்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் எழுபது நபர்களுக்கு சேர்க்கைக்கான தகவல் தரப்படும்.

மேலதிகத் தகவல்கள் தேவைப்படின், பிரத்தியேக அலைபேசி எண் 8056161139-இல் தொடர்பு கொள்ளுங்கள். வாழ்த்துகள்..

வகுப்பு :

திரைப்பாடல் இயற்றுநர் – ஓர் ஆண்டுப் பட்டயப் படிப்பு
(தினசரி மற்றும் வாரயிறுதி வகுப்புகள்)

குறைந்தபட்சக் கல்வித்தகுதி – பன்னிரெண்டாம் வகுப்பு (any group)

சிறப்புத் தகுதி – தமிழ்ப் பாடத்தில் குறைந்தபட்சம் 55 சதவிகிதம்.

கூடுதல் தகுதி – கவிதை, பாடல் எனப் படைப்புப் பதிவு ஏதாவது.

இடம் – எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் திரைப்படக்கல்லூரி, எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர்.

சேர்க்கை அலுவலகம் :

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம்,
எஸ்.ஆர்.எம். நகர், காட்டாங்குளத்தூர் – 603203.

மேலும் விவரங்களுக்கு..

பாடலாசிரியர் பிரியன் (ஒருங்கிணைப்பாளர்) – 8056161139

மின்னஞ்சல் – diplyric.piriyan@gmail.com

.


எழுத்துப்பசிக்கு விருந்து…

மே 23, 2013

வணக்கம்..

பாடலின் மேல் காதல் கொண்ட ஒவ்வொருவருக்காகவும் ஒரு மிகப் பெரிய காரியத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்..

இதை மனதில் விதைத்துப் பலப்பல வருடங்கள்.. கையில் எடுத்துச் சில வருடங்கள்.. என் வசமிருந்து கரைந்தே போயின..

இப்போது கைக்கூடிய தருணத்தின் விளிம்பில் இருக்கிறேன்..

மிகப்பெரிய ஆச்சரியமும்.. எதிர்பாரா மகிழ்வும்.. தேடித்தேடியும் கிடைத்திராதொரு அறிவும்.. வாய்ப்பும்.. அங்கீகாரமும்.. எழுத்துப்பசிக்கு.. பாட்டுப் பசிக்கு ஏற்ற விருந்தும்.. உங்களில் எழுபது பேருக்கு..

காத்திருங்கள்..
தயாராயிருங்கள்..

தகவல்கள்.. மிகமிக விரைவில்…

பிரியமுடன்…
பிரியன்…


சார்தல்…

மே 17, 2013

மழைத்துளிக்கும் மணல்வெளிக்குமான உறவு..
தூரம் சார்ந்ததன்று..
ஈரம் சார்ந்தது..

உனக்கும் எனக்குமான பிணைப்பு..
பருவம் சார்ந்ததன்று..
பிரியம் சார்ந்தது


வெல்லட்டும் போராட்டம்…

மார்ச் 14, 2013

மத்தியில் வேறு மொழி
கொண்டிருக்கும் காரணத்தால்
ஆதிமொழித் தாய்மொழியை
தாங்கி நிற்கும் இனமழிக்க
ஆட்சி இங்கு நினைக்குது..

அண்டைதேசம் வாழும்
அருமைச் சொந்த பந்தங்களை
கூடி இனமழிக்க
ஆதரவும் கொடுக்குது..

சொந்ததேச மக்கள் குரல்
கேட்டிராமல் மவுனித்து
எம்மொழியை வீழ்த்திடவே
பள்ளம் பல பறிக்குது..

உம் பாட்டனுக்கும் பாட்டனையும்
அவனுக்கும் பாட்டனையும்
பார்த்த மொழி எங்கள் மொழி..
பதம் குறையா தங்க மொழி..

எத்தனை இடர் வரினும்
சலிக்காது தாங்கி நிற்கும்..
மொத்தமாய் தடையறுத்து
தனித்துவமாய் ஓங்கி நிற்கும்..

அது நடக்கும்.. அப்பொழுது..
ஓரமாய் ஒடுங்கி நின்று..
கைக்கட்டி வாய் பொத்தி..
அடங்கி ஒடுங்கி திராணியற்று..
பாவமாய் பார்ப்பீர்கள்
பாழாய்ப்போன மவுனிகளே..

வெல்லும் இந்தப் போராட்டம்..
காண்பது வெறும் வெள்ளோட்டம்..
விரைவில் தொடங்கும் முழு ஆட்டம்..
புதிதாய் விதியை அது மாற்றும்..

உணர்வுயிர்த்துப் போராடும் அத்தனை அன்பர்களுக்கும்…


நளின முடிவிலி…

மார்ச் 7, 2013

காற்று மொழி பெயர்க்கும்..
கடல் காற்று மொழி பெயர்க்கும்..
கூந்தல் அலைந்தவிழ்ந்து..
உன் கூந்தல் முகந்தவழ்ந்து..
கூறும் வார்த்தைகளை..
கூறாத வார்த்தைகளை..

வாங்கி மனம் குதிக்கும்..
உள்வாங்கி மனம் குதிக்கும்..
ஒரக் குறுஞ்சிரிப்பால்..
விழியோரக் குறுஞ்சிரிப்பால்..
ஈர்க்கும் உனையணைக்க..
உயிரீர்க்கும் உனையணைக்க..

தாவி அடம் பிடிக்கும்..
எனதாவி அடம் பிடிக்கும்..
மை கண்ணழகின்..
இமைக் கண்ணழகின்..
இடையில் தொலைந்துவிட..
மெல்லிடையில் தொலைந்துவிட..

வைக்கும் உன் நளினம்..
தீ வைக்கும் மென் நளினம்..
நீளும் முடிவிலியாய்..
கதி நீளும் முடிவிலியாய்..
தொடரும் எதுவரையும்..
பின் தொடரும் அதுவரையும்..
பிரியத் தோடென் வரியும்..


குழந்தையின் மரணம்…

பிப்ரவரி 26, 2013

ஜனித்த விதை
முளைத்து வளர்ந்து
செழித்தச் செடியென
கிளை விரித்து எழும் முன்..
முளையில் முறிதல்
எத்தனை துயரம்..

பத்து மாதமும்
பார்த்துப் பார்த்து..
கருவறையில்
காத்துச் சுமந்து..

பிறந்ததில் இருந்து
ஒவ்வொரு நிமிடமும்..
உயிரறையில்
ஊற்றிக் கலந்து..

மூச்சென சேர்த்து வளர்த்த..
முழுப்பாசம் வார்த்து வளர்த்த..
மென்மழலை மாறா
இளந்தளிர்ச் சிறு மகளை..

சட்டென வந்து
சாவு கொண்டு போகுதெனில்..
சாவுன்னைச் சாகடிக்க
வரமெனக்கு வாராதா..

குழந்தைகள் மரணிக்கிற நொடியில்
கடவுளுக்கு இதயமில்லை..

குழந்தைகளை மரணிக்கிற வரையில்
கடவுளே இல்லை இல்லை..

உடலெடுத்தும் உதவாத
உயிர் வாழவே கூடாத..
ஜீவன்களோ நிறைய உண்டு உலகிலே..

பால் மணம் மாறாத..
சூதொன்றும் அறியாத
பிள்ளை உயிர் கொள்ளாதே காலனே..

தோழியவள் கண்ணீரின்
சூடு தாங்கா கவி நெஞ்சு..
வேதனை தாளாது
கட்டளை ஒன்றிடுகிறது..

ஈடு செய்ய முடியாத
இழப்பிற்கு மருந்தாய்..
வலி கொண்ட இதயம்
இளைப்பாற அவள் வாழ்வில்..

மாறுதலும் நிம்மதியும்
தந்துவிடு காலமே.. – கண்ணீர்
துடைத்து.. கை கொடுத்து..
தேற்றிவிடு காலமே..

பிரியத்தோழி காயத்திரியின் காயத்திற்கும்…
அவள் அருமகளின் ஆத்மாவிற்கும்…


வீரிய விதை..

பிப்ரவரி 23, 2013

வீரிய விதை..

கொன்றுத் தீர்ப்பது என
முடிவெடுத்த பிறகு..
குழந்தைகள் என்ன..
பெண்கள் என்ன..
பெரியவர்கள் என்ன..

மொத்தம் அழிப்பது என
துணிந்துவிட்ட பிறகு..
பூக்காடு என்ன..
முட்காடு என்ன..
பறவைக் கூடு என்ன..

கூறு போட்டு.. கூட்டம் கூட்டி..
திட்டமிட்ட.. எண்ணப்படி..
மிச்சமின்றி உங்களால்..
ஒட்டுமொத்தம் தேடித்தேடி..
வேரறுத்தல் நடக்கும்.. – இந்த
சகமழித்தல் பலிக்கும்..

மொத்தத்தையும் அழித்தாலும்..
மீதமின்றி முடித்தாலும்..
அணுவணுவாய் சிதைத்தாலும்..
அத்தனையும் புதைத்தாலும்..

ஒன்று மட்டும் நிச்சயம்..
ஒன்று மட்டும் நிச்சயம்..

எவ்விதமோ.. எப்படியோ..
எவ்விடமோ.. எக்கணமோ..
வீரியத்தை சுயத்தில் கொண்ட..
விடுதலையை உயிர்ப்பில் கொண்ட..

விதை வெடித்து முளைக்கும்..
விருட்சமென நிலைக்கும்..

களைகள் யாவும் மரிக்கும்..
மீண்டும் பூமி சிரிக்கும்..

( பாலச்சந்திரனின் ஆத்மாவுக்கும்…
பாவிகளின் கர்மாவிற்க்கும்… )


வீடழகு…

பிப்ரவரி 17, 2013

ஒழுங்கென்று சொல்லி
அதை அதை அந்தந்த இடத்தில்
அப்படி அப்படியே வைத்த
ஒழுங்கீனங்களை எல்லாம்.. 

பிஞ்சுக் கரங்களால்
உன் இஷ்டத்திற்கு
அங்கும் இங்குமாய்
கலைத்துப் போட்ட பிறகுதான்.. 

உண்மையில்
அழகாகிறது வீடு..


நித்திலப் பவுர்ணமி…

பிப்ரவரி 10, 2013
 
ஓரடிக் கவிதையென
கண்களை உருட்டியபடி..
என் கைகளில் பூவென
முதல்முறை ஸ்பரிசித்தாய்..
முந்தைய வருட இதே நாளில்..
 
இன்று..
தத்தித் தத்தி நடை.. 
அம்ம்ம்மா.. இத்த்த்தோ என
மழைச் சாரல் மழலை..
மூன்றுப் பால் பல் புன்னகை..
வீடெங்கும் தவழல்..
தூக்கக் கால் கட்டி
இரு கை நீட்டல்..
தலையாட்டிப் பாடல் ..
கையாட்டி ஆடல்..
சொல்லிக் கொண்டே போகலாம்..
சொற்களுக்கு பஞ்சம்..
 
மாதப்பிறைகள் வளர்ந்து..
ஒரு வயது முழு நிலவென
ஒளி வீசும் நித்திலமே..
 
செல்ல அடங்களால்
பிள்ளைக் கொஞ்சல்களால்
வாழ்வை அழகாக்கிய
குட்டி தேவதையே..
 
ஒன்று என்பது தொடக்கம் ..
நன்று அதன் வழக்கம்..
தொடங்கட்டும் உன்
வயதில் ஒன்றும்..
வாழ்வில் நன்றும்..
 
பிடித்த முத்தங்களோடும்..
பிறந்த நாள் வாழ்த்துக்களோடும்..
 
பிரியமுடன்…
அப்பா…   🙂