நெருப்பாய் இரு…

ஒக்ரோபர் 30, 2008

 

ஒரே ஒரு முறை 
பிறந்த மனிதனே…

அறிவின் எல்லைகள்
விரிந்த புனிதனே…

 

பிறந்து வந்ததன்  
அர்த்தம் தெரியுமா…

நெருப்பைப்போல் உன்னால்
வாழ முடியுமா…

 

நெருப்பு ஒன்றுதான்
தொட்டதை எல்லாம் நெருப்பாக்கும்…

இன்னும் புதிது புதியதாய் தேடியே
அதையும் வசமாக்கும்…

 

நெருப்பு என்றுமே
மேல்நோக்கித்தான் நடைபோடும்…

தன் பொறுப்பை உணர்ந்துதான்
அனலாய் நடனம் தினம் ஆடும்…

 

அணைத்தாலும் சோராது ஒருபோதும்…

சிறு காற்று பட்டாலும் உடல் சீறும்…

 

சுற்றுவட்டாரம் சூடாகும்…

எந்த திசையும் தாண்டியது விளையாடும்…

 

உனக்குள்ளே சுழலும் வெப்பம்
அது சொல்லும் வாழ்வின் அர்த்தம்…

 

உன்னை நீ உணர்ந்தால் நித்தம்
உனதாகும் உலகின் மொத்தம்…

 

நண்பா நண்பா
என்றும் நெருப்பாய் இரு…

எந்த வெற்றிக்குமே நீ 
பொறுப்பாய் இரு…

 

நண்பா நண்பா
என்றும் தீயாய் இரு…

ஊர் போற்றும் என்றால்
அது நீயாய் இரு…


சுற்றி வரும் கடவுள்…

ஒக்ரோபர் 30, 2008

 

அம்மாவை ஆதரவற்றோர் இல்லத்திற்கு துரத்திவிட்டு
அம்மனுக்கு ஆலயம் கட்ட பணம் கொடுத்தால்..

கிடைத்திடுமா தெய்வத்தின் அருள்…

 

 

கட்டிய மனைவியை காயங்களால் நிரப்பிவிட்டு
கர்த்தரிடம் பாவ மன்னிப்பு கேட்டால்…

கிடைத்திடுமா ஆண்டவரின் ஆசிர்வாதம்…

 

 

பெற்ற பிள்ளைகளிடம் ஒரு வார்த்தை அன்பாய் பேசாமல்
மெக்கா மெதினா சென்று வந்தால்…

கிடைத்திடுமா இறைவனின் கருணை..

 

 

அம்மாவுக்கு அக்கறையையும்…
மனைவிக்கு அன்யோன்யத்தையும்…
பிள்ளைகளுக்கு அரவணைப்பையும்…
கொஞ்சம் கொடுத்துப் பாருங்கள்…

அருளோடும்… ஆசிர்வாதத்தோடும்… கருணையோடும்…
உங்களையே சுற்றிச் சுற்றி வருவார் கடவுள் !


நீ என் தீபாவளி…

ஒக்ரோபர் 26, 2008

 

எனக்கு பூக்கள் பிடிக்கும் என்பதற்க்காய்
இந்த பண்டிகை தினத்தில்
பூ வேலைப்பாடுகள் அமைந்த புதுப் புடவையை
எனக்காய் கட்டிக்கொண்டு
என்னிடம் காட்டுவதற்காய்
உன் தோழிகளோடு என் வீட்டுப் பக்கம்
ஆசையோடு சுற்றிக்கொண்டிருக்கிறாய்…

உனக்கு வேட்டி சட்டை பிடிக்குமென
அணிந்து நான் உன் வீட்டுப் பக்கம்
திரிந்துகொண்டிருப்பது தெரியாமல்…

 

ஒரு கட்டத்தில் இருவரும்
முகம் காண முடியாத சோகத்தோடு
வீடு திரும்பிக் கொண்டிருக்கையில்…

எதேட்சையாய் ஒரு சாலை முனையில் நேர்ந்த
பரவச சந்திப்பில்
நம் கண்களுக்குள் சுழன்றன
சங்கு சக்கரங்கள்…

அப்பொழுது சட்டென ஒரு சரவெடி வெடிக்க
சாலை என்றும் பாராமல்
வந்துவிட்டாய் எனக்கு நெருக்கமாய்…

பின் உணர்வறிந்து வெட்கி ஓடிவிட்டாய்
உன் வீட்டுப் பாதையில்…

அங்கு வெடித்த வெடியால்
நீ என் பக்கம் வந்ததில்
எனக்குள் வெடித்த வெடி அடங்க
அரைமணி நேரம் ஆனது…

 

மெல்ல மாலை நேரத்தில்
இப்பொழுது நீ என்ன செய்துகொண்டிருப்பாய் என
பார்த்துவிட்டுப் போகலாமென
உன் வீட்டுச் சாலைக்கு நான் வந்த பொழுது…

கம்பி மத்தாப்புக்களை கைகளில் ஏந்தியபடி
சின்னப் பிள்ளைப் போல
அங்கும் இங்கும் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தாய்…

என்னைக் கண்டுவிட்ட பதட்டத்தில்
ஒளிந்துகொண்டாய் வீட்டுக்குள்…

பின் மெதுவாய் ஒன்றும் அறியாதவள் போல
வெளியில் வந்து
மற்றவர்கள் வெடிப்பதை
கைகளைக் கட்டிக்கொண்டு
ரசித்துக் கொண்டிருக்கிறாய்
அப்படியே தூரத்தில் இருக்கும் என்னையும்…

 

அக்கணத்தில் திடீரென
வெடித்துவிட்ட புஷ்வானத்தைப்  பார்த்து
கண்கள் நிறைய பயத்துடன்
உன் அன்னையை கட்டிக் கொள்கிறாய் இறுக்கமாய்…

நான் சிரித்துவிட்டதை கண்டு
மீண்டும் உன்னை
தைரியமானவளாய் காட்டிக்கொள்கிறாய்…

 

எனக்கென ஒருத்தி இல்லாத
போன வருட தீபாவளியையும்
எனக்கென நீ கிடைத்திருக்கும்
இந்த தீபாவளியையும்
நினைவில் உருட்டியபடி…

உன் குறும்புத்தனங்கள் அத்தனையும்
அவ்வளவு அழகென சொல்லியபடி…

பட்டாசும் மத்தாப்பும் வானவேடிக்கைகளுமாய்
மின்னிக் கொண்டிருக்கிறது
இந்த ஊரைப் போல
என் மனதும் தீபாவளியில்…

 

 

 

 

 

 

 

 

இயந்திரங்களாய் சுற்றிக் கொண்டிருக்கும் நமக்கு
இன்ப இளைப்பாறல் தரத்தான் வருகின்றன
அடிக்கடி பண்டிகைகள்…

அதனால் அனைத்தையும் மறந்து
அனுபவியுங்கள் கொண்டாடுங்கள்
இந்த கணத்தை இந்த தினத்தை…

பிரியமானவர்களுக்கு பிரியனின் தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்…


தேவை…

ஒக்ரோபர் 26, 2008

 

வாங்கும் சம்பளம் வறட்சி நிலைக்கும் கீழிருக்க…

வயதாகி போனதினால் தேவைகளும் அதிகரிக்க…

அடிக்கடி பண்டிகைகள் அடங்காமல் அலைக்கழிக்க…

புத்தாடை பட்டாசு வனப்பில் ஊர் மகிழ்ந்திருக்க…

சுற்றுவட்டாரம் சுகங்களில் குதூகலிக்க…

 

எங்கேயாவது கெஞ்சிக் கூத்தாடி
கடன் வாங்கியாவது கொண்டாடித்தான் ஆக வேண்டும்
இந்த தீபாவளியை…

என் பிள்ளைகளுக்காக…


வாழ்வு நகர்த்திகள்…

ஒக்ரோபர் 24, 2008

 
பூக்களின் மலர்ச்சியும்…

குழந்தைகளின் புன்னகைகளும்…

நண்பர்களின் ஆறுதல்களும்…

தாய்மையின் பரிவும்…

காதலின் அரவணைப்பும்…

இன்னமும் முழுதாய்
கிடைத்துக்கொண்டு இருப்பதால்தான்…

 

எத்தனை காயங்கள் கண்டாலும்
அத்தனையையும் தாங்கி…

இன்றும் இயல்பாய் வாழ முடிகிறது நம்மால்…


இருக்கின்ற நொடிகள்…

ஒக்ரோபர் 22, 2008

 
அன்றாட போராட்டங்கள்…  அடக்க முடியாத கவலைகள்…

அழ வைக்கும் அவமானங்கள்… தொடரும் துரோகங்கள்…

மனைவியின் சண்டைகள்… பிள்ளைகளின் உதாசீனங்கள்…

வேலை பார்க்கும் இடத்தின் வஞ்சகங்கள்…

கொடுக்கமுடியாத கடன் தொகைகள்…

மறக்க இயலாத இழப்புகள்…

 

இவற்றை எல்லாம் அள்ளி
மூட்டைக் கட்டி
பரணில் போட்டுவிட்டு…

 

இதோ உங்கள் ஜன்னலுக்கு வெளியே
கொண்டாட்டத்துடனும்…
குதூகலத்துடனும்…
உற்சாகமாய்  குதித்து விளையாடிக் கொண்டிருக்கும்
சாரல் மழைத்துளிகளை
கொஞ்சம் ரசிக்க வாருங்கள்…

 

முழுதாய் உங்களை
அதன் அழகில் கரைத்து விடுங்கள்…

 

ஒவ்வொரு துளியையும்
விழிகளுக்குள் நிரப்பி மகிழுங்கள்…

 

ஏனென்றால்
உங்கள் புலம்பல்கள் என்றுமே தொடர்பவை…
முடிவற்றவை…

 

இந்த மழைத்துளிகள் அப்படியல்ல…

இன்று இப்பொழுது
மண்ணில் சந்தோசமாய்
நடனமாடிக் கொண்டிருக்கும் இவை…

மீண்டும் எப்பொழுது வரும் என்பது
யாருக்கும் தெரியாது…

 

அதனால் உங்களுக்காக இருக்கின்ற நொடிகளை
நீங்களே இன்பமாக்கிக் கொள்ளுங்கள்…

 

இந்த வாழ்க்கையை
புரிந்துகொண்டு வாழ முயற்சிப்பதை விட
வாழ்ந்து புரிந்து கொள்ளுங்கள்…

பின் எல்லாம் சுகமே….


தண்ணீர் கூடுகளின் வெளிச்சம்…

ஒக்ரோபர் 21, 2008

 

நட்சத்திரங்கள்
கரைந்து விழுவதைப் போல…

வானத்தில் இருந்து
இறங்கி வருகின்ற
குட்டி மழைத்துளிகள்…

கூட்டத்தோடு மண்ணில் குதித்து
கும்மாளமிடும் இந்த நேரத்தில்…

 

யாருக்கும் தெரியாமல்
மௌனமாய்
ஜன்னல் கம்பிகளில்
பாதரசம் போல
நீர்க்கூடுகள் கட்டி
வசிக்க வந்திருக்கும்
ரகசிய மழைத்துளிகளை
அலுங்காமல் விரல் நுனியில் ஏந்தி
அதன் அழகை
அணுவணுவாய் ரசித்துக் கொண்டிருக்கின்றாய்…

 

சட்டென சின்ன வெளிச்சம் பட்டு
பளபளக்கும் அதை
அதிசயமாய் என்னிடம் காட்டுகின்றாய்…

 

அதற்கு அப்படியொரு
வெளிச்சம் வந்ததற்கு காரணம்…

உன் முகத்தின் அருகில்
நீ அதை கொண்டு சென்றதுதான்
என்பதை அறியாமல்…