அது… இது…

பிப்ரவரி 23, 2009

 
முன் செய்த வல்வினையால்
முந்தி வந்த விந்துத்துளி..

அடைத்து வைத்த தோல் பைக்குள்
அடங்கிப்போய் சூல் கொள்ள…

வெள்ளை ரத்தம் சிவப்பாகி
நாடி நரம்பு சதை பிடித்து..

அவனவளாய் இனம் பிரிந்து
பிண்டமென உருவெடுத்து..

ஐயிரெண்டு மாதமதில்
அன்னையவள் உந்தித் தள்ள..

நச்சுப் பையும் ஒட்டிப் பிறந்து
அண்டமதில் அலைந்து திரிந்து..

அங்கும் இங்கும் கூத்தாடி
பொய்யை மெய்யாய் தினம் நாடி..

அகமதன் அர்த்தநிலை  
ஐயோ ஒன்றும் புரியாது…

சொந்த பந்த காட்டுக்குள்ளே
இன்பத் துன்பக் கூடு கட்டி..

இன்னொரு சதைப் பிண்டம் தேடி
சேர்த்து வைத்த விந்துக் கொட்டி..

மீண்டும் மீண்டும்
மீண்டும் மீண்டும்
பிறப்பெடுத்து பிறப்பெடுத்து…

பிறவியதன் கட்டறுக்க
இருக்கும் வழி காணாது…

சுழல்கின்ற பூமியின்மேல்
சுற்றி சுற்றி வந்து வந்து..

சூட்சுமத்தை உணராது
சுடுகாட்டில் பிணமாகி…
 
மற்றுமொரு தோல்பைக்குள்
மாற்றமில்லா விந்தாகி……

 

அப்பப்பா போதுமப்பா
கண்டுகொள்வோம் மூலமதை…

உயிர் கொடுத்து உருட்டியவன்..
உலகமதை திரட்டியவன்..

பிறப்பு எனும் வட்டத்துக்குள்
செக்கு மாடாய் சுழற்றியவன்..

அவனை இனம் காணத் தேடி
நித்தம் தேடி ஓடி ஓடி..

வெளியெங்கும் காணாது
வேறு வழி தெரியாது..

உள்ளுக்குள் உள் நுழைந்து
உற்றவனை கண்டு கொண்டு..

அவனே நானாகி..
நானே அனைத்துமாகி..

ஆதி அந்தம் தெளிந்து
உண்மையதை உணர்ந்து.. 

 

அம்மம்மா இறுதியில்
அண்டசராசரம் எங்கும்..

எல்லையற்று கலந்திருக்கும் அது
என ஆனதப்பா முடிவிலே இது !

 

 

 

என் நெஞ்சுக்குள் நீண்ட நாளாய் முட்டிக் கொண்டிருந்த வரிகளை கொட்டி விட்ட திருப்தியோடும்…

சிவராத்திரி… மகா சிவராத்திரிக்கான சிவநிலையோடும்…….

பிரியமுடன்…
பிரியன்…


கட்டிப் பிடிக்கும் கண்கள்…

பிப்ரவரி 21, 2009

 

விடிந்ததும் திறக்கின்ற விழிகள் ரெண்டும்
உன் மடி சாயும் அந்நொடி தேடி
அலைகிறதடி அங்கும் இங்கும்..

 

இரவில் வேர் விட்ட
ஆசையின் கனவுகள் அத்தனையும்
காலையில்
புன்னகைகளாகவும்
முத்தங்களாகவும்
பூத்துக் காத்திருக்கின்றன
காதலியே உன் முகம் பார்த்து..

 

உன்னை அப்படியே
அள்ளிக் கொஞ்சத்தான் வேண்டும் என்றாலும்
கொஞ்சம் தள்ளியே நிற்கிறேன் நான்
மற்றவர்கள் இருப்பதற்காய்..

 

ஆனாலும் என் கண்கள்
ரகசியமாய் உன்னை
இறுக்கக் கட்டிப் பிடிப்பதை
தடுக்க முடியாதடி யாராலும்…..


இன்று – 20/02/2009…

பிப்ரவரி 21, 2009

38

 

விஜய் ஆண்டனி இசையில் எனது இரண்டு பாடல்களோடு தநா 07 அல 4777  படம் வெளியீடு…


காதல் தினம்…

பிப்ரவரி 14, 2009

 

இரவு 11.59 வரை காத்திருந்து..
12 மணிக்கு ரகசியமாய்
கொஞ்சல் வாழ்த்துக்கள் சொல்லி..

பொழுது விடியும் வரை துடித்து..
காலையில் ஆசை முகம் பார்க்க
வரும் வழியை பார்த்திருந்து..

வருவதற்குள் பரிதவித்து..
வந்தவுடன் பரவசித்து..

விழிகள் முழுக்க சந்தோசம் நிரப்பி..
பூங்கொத்து பரிசுப்பொருட்கள் பரிமாறி..
ஒன்றாய் பேசி ஒன்றாய் சிரித்து..
முத்தங்கள் பகிர்ந்து..
கைகள் கோர்த்து பயணித்து..
கொஞ்சி.. கெஞ்சி.. சில்மிஷித்து..
நிறைவாய் நிமிடங்கள் நகர்த்தி..

மாலையில் பிரிதலுக்காய்
முகம் வாடி.. கண் கலங்கி..

மீண்டும் இரவில்
தனித்து வீட்டிற்க்கு திரும்பும்
இதயங்கள் உணர்வதில்லை..
காதலின் நிஜ அர்த்தத்தை !

 

பகிர்தலை காட்டிலும்
புரிதலில்தான் உணரப்படுகிறது
உண்மையான காதல் !

 

தினம் தினம்
காதலுக்கான தினமாய் இருக்கையில்
காதலுக்கென ஒரே ஒரு தினம் போதுமா..

அதற்குள்
காதலை புரிந்துகொள்ளத்தான் முடியுமா…

 

ஒட்டுமொத்தக் காதலையும்
ஒற்றை நாளுக்குள் எல்லாம்
அடைத்துவைக்க முடியாது…

 

காதலை கொண்டாடுங்கள்
தவறே இல்லை…

காதல் என்ற பெயர் மட்டும் பூசி
கொண்டாடுவதாய் கொச்சைப்படுத்தாதீர்கள்…

 

சத்திய காதலர்க்கு மட்டுமேயான
காதலர் தின வாழ்த்துக்களோடு…

பிரியமுடன்…
பிரியன்…


வார்த்தை சண்டை..

பிப்ரவரி 11, 2009

 

இதுவரை நான் எழுதிக் குவித்த
வார்த்தைகள் எல்லாம் ஒன்றாய் சேர்ந்து
செல்ல சண்டையிடுகின்றன
சகியே உன்னுடன்..

 

என்னை வார்த்தைகளற்ற மௌனத்திற்குள்
நீ முழுதாய் மூழ்கடித்ததற்காய்…..