பார்வை பட்ட பூச்செடிகள்…

ஏப்ரல் 30, 2010

 

சூரிய வெளிச்சம்பட்ட இலைகள் மட்டும்
பசுமையாகவும்
மற்றவை வாடிப்போயும் நிற்கும்
தாவரத்தின் நிலைபோல..

உன் பார்வை பட்ட மலர்கள் மட்டும்
மகிழ்ச்சியோடு மலர்ந்தும்..
மற்றவை சோகத்தோடு உலர்ந்தும்
காணப்படுகின்றன..

உன் வீட்டுக்கு முன்புறம் உள்ள
சாலையோரப் பூச்செடிகள்..

.

Advertisements

வாழ்தல்…

ஏப்ரல் 25, 2010

 

நிச்சயிக்கப்பட்ட முடிவோடு தொடங்கும்
வாழ்க்கைப் பயணத்தில்
நமக்கான வாழ்தல் என்பது
ஏனோ பெரும்பாலும் 
சாத்தியமற்றுப் போகிறது..

பிறந்தது முதல் பிள்ளைப் பிராயத்து தினங்கள் 
இயல்பாய் அறிந்துகொள்ளும் தகுதி இன்றியே
நகர்ந்துவிடுகின்றன..

வாலிப வயதுகள் வண்ணக் கனவுகளின் ஆக்கிரமிப்பில்
வசம் இழந்துவிடுகின்றன..

மணமானபின் துணையை சார்ந்து
கரையும் காலங்கள்..

அடுத்து பெற்றெடுத்த பிள்ளைகளுக்காக
தொடர்ந்தோடும் நாட்கள்..

இப்படி ஒவ்வொரு கணமும் 
நமக்கான வாழ்வை நமது வாழ்தலை
புறந்தள்ளி வைத்துவிட்டு புறப்படத் தயாராகிறோம்
அடுத்தடுத்த நிலை நோக்கி..

நில்லாமல் கடந்துகொண்டிருக்கும் 
இந்த வாழ்வுப் பயணத்தில்
நமக்கே நமக்கான அந்த வாழ்தலை
எப்பொழுதுதான் வாழப்போகிறோம் நாம்…

.


வித்தியாசம்…

ஏப்ரல் 19, 2010

 

ஒவ்வொருமுறையும் முற்றும்
சண்டைப் பொழுதுகளில்..

எப்போதும் தன் துணையை
காதலி – மனைவி நிலைக்கான
வித்தியாசம் காட்டிக் காட்டி
குறை கூறிக் கொண்டிருந்தவன்.. 

ஏனோ  இதுவரை உணரவே இல்லை
காதலன் – கணவன் நிலைக்கான வித்தியாசத்தை…

.


உன்னோடு வாழும் உரிமை..

ஏப்ரல் 14, 2010

 

நீ முகம் பார்க்க வந்தால் 
கண்ணாடிக்கு கண்கள் முளைத்து விடுகின்றன..

நீ தூக்கிக் கொஞ்ச வந்தால் 
பூக்களுக்கு கைகள் முளைத்து விடுகின்றன..

நீ கூட்டிச் செல்ல வந்தால் 
காற்றுக்கு கால்கள் முளைத்து விடுகின்றன..

உன் பார்வை பட நேர்ந்தால் 
நிலவுக்கு ரெக்கைகள் முளைத்து விடுகின்றன..

இவை எல்லாம் சேர்ந்து
உன்னோடு வாழ உரிமை கேட்டு
இப்போது என்னோடு சண்டை பிடிக்கின்றன…

.


மனசுக்குள் மனசுக்குள் பாடலின் வீடியோ இணைப்பு…

ஏப்ரல் 10, 2010

 

வணக்கம்..

நிறைய இதயங்கள் “மனசுக்குள் மனசுக்குள்..” ( அஞ்சாதே ) பாடலின் இணைப்பை வேண்டியுள்ளதால் இத்தோடு அதன் வீடியோ இணைப்பை அளிக்கிறேன்…

http://www.youtube.com/watch?v=tUHYm-1S8Q4

 

பிரியமுடன்…
பிரியன்…

.


உன் முக வெளிச்சம்…

ஏப்ரல் 5, 2010

 

சாம்பல் நிறம் படிந்த இருள் மாலைப் பொழுதில்
குமிழ் சிரிப்போடு நீ அகலேற்றும் தருணத்தில்
விளக்கு வெளிச்சத்தின் மஞ்சள் ஒளியில்
தங்கமென ஜொலிக்கும் உன் முகத்தை கண்டதில் இருந்து
காதலின் மேல் இன்னும் மரியாதை கூடிப்போனது எனக்கு !

.