சரியான பிழை…

ஓகஸ்ட் 30, 2008

 

சுவாரஸ்யமாக என்னுடன் நீ
பேசிக்கொண்டிருக்கும் வேளையில்…

 

சட்டென ஏதும்
வார்த்தைப் பிழை நேர்ந்தால்…

 

மென்மையாய் நுனி உதட்டை கடித்தபடி…
மெதுவாய் தலையில் தட்டிக்கொள்வாய்…

 

பின் மீண்டும் சுவாரஸ்யமாகும்  
பேச்சுக்கிடையில்…

 

அடுத்து வரப்போகும்
உன் செல்லப் பிழைகளுக்காகவே
ஆவலுடன் காத்திருப்பேன் நான் !


ஜாடை மாடையாய்…

ஓகஸ்ட் 28, 2008

 

கூட்டமிக்க பேருந்து நிலையத்தில்
தோழிகள் கூட்டத்திற்கு நடுவில்
நீ நின்றுகொண்டிருக்கையில்…

 

உன்னைத் தேடி நான்
வந்துவிட்டதை கண்டதும்
யாருக்கும் தெரியாமல்
என்னுடன் ஜாடையில் பேசிக்கொண்டிருப்பாய்…

 

நானும் ஜாடையிலேயே 
கிண்டலாய் ஒன்று சொல்ல
சட்டென்று சிரித்துவிடுவாய்…

 

புரியாமல் என்னவெனக் கேட்கும்
உன் தோழிகளிடம் நீ
“சீ சும்மா இருங்கடி…” என
செல்லமாய் அதட்டியபடி
தலையை குனிந்துகொள்ளும் பொழுதும்…

 

உன்னை சீண்டி கிண்டல் செய்யும்
நெருக்கமான தோழியை
மென்மையாய் கிள்ளும் பொழுதும்…

 

துள்ளிக் கொண்டு வந்து நிற்கும்
வெட்கத்தில் சிவந்த முகத்தில்
சிக்கித் திணறுகிறது
என் மேல் நீ கொண்ட காதல் !


இன்னொரு முத்தம்…

ஓகஸ்ட் 26, 2008

 

ஒரு வேகத்தில்
அழுத்தி வைத்துவிட்ட முத்தத்தில்…

காயமாகிப்போன உன் உதடுகளை
மிருதுவாய் தடவிக்கொண்டே…

“சீ போ… உன்னால வீட்ல மாட்டிக்கப்போறேன்…”

என செல்லமாய் நீ கோபித்துக்கொள்ளும்
அந்த பொழுதில்தான்…

இறுக்கி வைக்கத் தோன்றுகிறது
இன்னொரு முத்தம் !


வார்த்தைகளில் வாழ்பவன்…

ஓகஸ்ட் 25, 2008

 

 
கடிகார முள்ளைப்போல்
ஒரு நொடிகூட நில்லாமல்
உன்னை எண்ணியே ஓடிக்கொண்டிருக்கும்
என் நினைவுக் குதிரைக்கு
பாசக் கடிவாளமிட்டு
அதன்மேல் ஒய்யாரமாய்
பயணம் செய்கிறாய்…

 

பள்ளத்தில் பாயும்
நதியின் சலசலப்பைப்போல்
ஓயாமல் எப்போதும்
எதையாவது பேசிக்கொண்டிருக்கும் நீ…

 

சட்டென சிலநாள்
பாசி படிந்த குளம்போல்
மௌனித்திடும் பொழுது
மரண பயம்கொண்டு
ஸ்தம்பித்து போகின்றன என் நாட்கள்…

 

புதிதாய் பொம்மை கிடைத்த மகிழ்ச்சியில்
அதோடு ரசித்து ரசித்து விளையாடி
பின் மெல்ல மெல்ல ஆர்வம் குறைந்து
அதை ஓரமாய் வைத்துவிட்டு ஓடிப்போகும்
குழந்தையின் மனநிலையில்
ஒருவேளை விழுந்துவிட்டாயோ என நான்
அறிய முற்படுகையில்…

 

முரட்டு வார்த்தைகளால்
என்னை முறித்துப் போடுகிறாய்…

 

உன் சின்ன சின்ன வரிகள்
என்னை சீக்கிரம்
சாகடிக்கத் தொடங்கும் முன்…

 

வானமளவு நிறைந்து
பூமியையே பகிர்ந்து
பூக்களைப்போல் திறந்து
மற்றதெல்லாம் மறந்து
நாம் பேசிய பழகிய நாட்களில்
உனக்கு தெரியவில்லையா…

நான் வார்த்தைகளில் வாழ்பவன் என்று…


மகிழ்சி…

ஓகஸ்ட் 25, 2008

 

இது மிகவும் மகிழ்ச்சியான தருணம் !

 

20/08/08 – ரசிக்கும் சீமானே…

22/08/08 – பந்தயம்…

24/08/08 – மேகம்…

 

தொடர்ந்து எனது மூன்று படங்களின் பாடல்கள் வெளியீடு !


இன்று… 24/08/08

ஓகஸ்ட் 25, 2008

 

எனது மூன்று பாடல்களோடு மேகம் படத்தின் இசை வெளியீடு…


பாடலின் தொடக்கம்…

ஓகஸ்ட் 23, 2008

 

பந்தயம் படத்தில் எனது பாடலின் தொடக்க வரிகள்…

” தீவிரவாதி தீவிரவாதி காதல் தீவிரவாதி
  முத்தச் சூட்டில் என்னை நீ சுட்டுக் கொள்வாயோ !

” தீவிரவாதி தீவிரவாதி காதல் தீவிரவாதி
  காட்டுத் தீப்போல் என்மேல் நீ பற்றிக் கொள்வாயோ !

 

மென்மையான பாடல்….


இன்று 22/08/08

ஓகஸ்ட் 23, 2008

 

 பந்தயம் படத்தின் பாடல்கள் வெளியீடு…

S.A.சந்திரசேகர் இயக்கத்தில்… விஜய் ஆண்டனி இசையில்…

எனது அழகிய மெல்லிசைப் பாடலை கொண்டுவந்திருக்கும் படம்…


பாடலின் தொடக்கம்…

ஓகஸ்ட் 22, 2008

 

ரசிக்கும் சீமானே படத்தில் எனது பாடல்களின் தொடக்க வரிகள்…

 

1.

”  கோடி கோடி மின்னல்கள்
   கூடி பெண்மை ஆனதே !

   மூடி மூடி வைத்தாலும்
   வெளிச்சம் வீசுதே !

   மெத்தை என்னும் மலையேறி தியானம் செய்யலாம் !
   வெட்கம் விட்டு நீயும் வா ஞானி ஆகலாம் ! “

 

.

2.

”  நான் உன்னை பார்க்கும் நேரம்
   நீ மண்ணை பார்ப்பதேனோ…

   உன் கண்ணை உற்றுப் பார்த்தால் சரியோ !

 

   நான் வெட்கம் சிந்தும் நேரம்
   நீ முத்தம் வைக்கக்கூடும்…

  என் கண்கள் மூடிக்கொண்டால் பிழையோ ! ”

 

அழகான மெல்லிசைப் பாடல்கள் எழுதும் சுகமே தனி !


இன்று 20/08/2008…

ஓகஸ்ட் 21, 2008

 

ரசிக்கும் சீமானே ( எட்டப்பன் ) படத்தின் பாடல்கள் வெளியீடு…

 

வித்யாதரன் இயக்கத்தில்… விஜய் ஆண்டனி இசையில்… ஸ்ரீகாந்த், நவ்யா நாயர் நடிப்பில்…

 

எனது இரண்டு மெல்லிசைப் பாடல்கள் தங்களுக்கு ரசனைகளுக்கு உணவாக… இசையாய் வெளியாகி இருக்கின்றன…