நல்வரவு !

ஜூன் 19, 2008

பிரியம் நிறைந்த மனங்களுக்கு பிரியனின் வணக்கங்கள் !

பிரியன் பக்கங்கள் என்ற தலைப்போடு உயர்ந்துகொண்டிருக்கும் எனது களம் –  தமிழுக்கும், கவிதைகளுக்கும்,  படைப்புகளுக்குமானது…

அஞ்சாதே,     காதலில் விழுந்தேன்,     பந்தயம்,     ௮..ஆ..இ..ஈ..,     தநா அல 4777,     ரசிக்கும் சீமானே,     நினைத்தாலே இனிக்கும்,     முன்தினம் பார்த்தேனே,     உத்தம புத்திரன்,    யுவன் யுவதி,     முரண் ,     நான்,     கதிர்வேல்,    வேலாயுதம்     போன்ற…

60 – க்கும் மேற்பட்ட படங்களுக்கும்…
150 – க்கும் மேற்பட்ட பாடல்களுக்கும்…
5 – க்கும் மேற்பட்ட ஆல்பங்களுக்கும்…
7 – க்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்பு புத்தகங்களுக்கும்…
நிறைய விளம்பர வரிகளுக்கும் இடையில்……….

எனது இரவு தூக்கங்களை மொத்தமாய் கொடுத்து இந்த பக்கங்களை  வளர்த்து வருவதற்கு சரியான காரணமுண்டு…

தனது படைப்புகளின் மீதான விமர்சனங்களைக் கொண்டுதான் ஒரு 
படைப்பாளி தன் அடுத்த கட்ட பயணத்தின் திசையை தீர்மானிக்கிறான் !

ஒரு படைப்பாளியாக எனது திரைத்துறை நண்பர்களிடம் இருந்தும்… தமிழ் இலக்கியத்துறை நண்பர்களிடம் இருந்தும், பலதரப்பட்ட தளங்களில் இருந்தும் என் படைப்புகள் மீதான கருத்துக்களை உள்வாங்கி இருக்கிறேன்…

எல்லாவற்றையும்விட…   எனது படைப்புகளை மட்டுமே தெரிந்த…   என்னைத் தெரியாத…  என் சமூகத்தின்…   சராசரி ரசிகனின்…   ரசிகையின்…   உண்மையான விமர்சனங்களைப் பெறவே நான் விரும்புகிறேன் !

எதிர்பார்த்ததற்கு மேலாக… எனது கவிதைகள் மீதான நிறைவான  விமர்சனங்கள் நிறையவே கிடைத்து வருகின்றன !   மகிழ்ச்சி…

நதி போல பயணித்துக்கொண்டே இருப்போம் நமக்கான சுவடுகளை நாளைகளுக்கு விட்டபடி…

  

பிரியமுடன்…
பிரியன்…

 


இலவச தமிழ் நூல்கள்… :)

ஜனவரி 26, 2012
இதயம் இனிக்கும் இனிய தமிழ் நூல்களை இலவசமாய் பதிவிறக்கம் செய்து படித்து மகிழ.. மதுரைத் தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் அரிய வாய்ப்பை தந்திருக்கிறது.. அதற்கு அடியேனது நன்றிகளும் வாழ்த்துக்களும்..
http://projectmadurai.org/pmworks.html
வாழட்டும்.. வளரட்டும்.. தாய்மொழி… எம் தமிழ் மொழி..
.

போகி..

ஜனவரி 14, 2012
வெளிச் சுத்தத்தோடு..
மனக் குப்பைகளையும்..
இதய அழுக்குகளையும்..
மிச்சமின்றி நீக்கி..
உள்ளத் தூய்மை கொள்வதே..
உண்மையான போகி..

 

வேண்டாததை  எரித்து
வேண்டிய காற்றை மாசுபடுத்தாமல்..
கனிவாய் கொண்டாடுவோம் போகியை..
வாழ்த்துக்கள்…  :)
.

பிரத்தியேக பக்கம்..

ஜனவரி 5, 2012

 

இது அடியேனது பிரத்தியேக பக்கம்.. சந்திப்போம்.. அங்கும்…

 

http://www.facebook.com/#!/pages/Piriyan-Lyricist/271931312834926

 

நன்றி..

 


2012 – நாளைய இந்தியா..

December 31, 2011

நம் மூவர்ணக் கொடியில்

முக்கால்வாசி கறைகள்..

திணறத் திணற ஊழல்கள்..

விலைவாசி உயர்வு சாபங்கள்..

என்னவொரு கேவலம்..

எண்ணுகிறோம் நாமளும்..

படிந்த கறை அத்தனைக்கும்

காரணங்கள் யாரைக் காட்ட..

ஒரு சிலரின் வஞ்சகமா..

சமூகத்தின் அலட்சியமா..

சக மனிதா உண்மை சொல்..

வளர்ச்சி இனி சாத்தியமா..

ஒற்றுக் கொள்வோம் நண்பர்களே..

தவறில் பங்கு நமக்கும் உண்டு..

இல்லை இல்லை என்றாலும்..

உள் மனது உரக்கச் சொல்லும்..

நாம் செய்த பிழை என்ன..

அதை இதயம் உணர்ந்து துள்ளும்..

தனி மனிதன் செய்கின்ற

சின்னச் சின்னப் பிழைகள் சேர்ந்து

போட்டு விட்ட ஓட்டை..

உலுக்குதிந்த நாட்டை..

இதற்குண்டா தீர்வொன்று..

இருளென்றால் ஒளி உண்டு..

விடிவுக்கு வழி உண்டு..

இனி ஒரு விதி செய்தால்..

புதிதாகும் நாடின்று..

காசு பணம் தேடித் தேடி..

காலமெல்லாம் ஓடி ஓடி..

ஐம்புலன்கள் மூடி மூடி..

அடிமை போல வாடி வாடி..

வாழும் வாழ்வை நாளும் சாடி..

அன்பு வழியை நாடுவோம்..

சுய கொள்கை தன்னை சூடுவோம்..

தன்னை மதித்து வாழுவோம்..

மனசாட்சி ஜெயிக்க மீளுவோம்..

தனி மனித ஒழுக்கம்..

சுய உணர்வு சுத்தம்..

இந்த மாற்றம் போதும்..

மனித மனம் மாறும்..

மனித மன மாற்றம்..

இனத்தின் குண மாற்றம்..

இனத்தின் குண மாற்றம்..

மாநிலத்தின் மாற்றம்..

மாநிலத்தின் மாற்றம்..

மொத்த தேசம் காணும் மாற்றம்..

எளிதாகும் முன்னேற்றம்..

ஒவ்வொரு மனிதனும் மாறுவோம்..

ஒட்டு மொத்த தேசத்தையும் மாற்றுவோம்..

விந்தையா இது என வியக்கும் வண்ணம்

இந்தியா உயர்வேறும் திண்ணம்..

வாழ்க தமிழ் மொழி..

வளர்க பாரதம்..

நாளைய இந்தியா குறித்து “இனி ஒரு விதி செய்வோம்” எனும் தலைப்பில் இமயம் தொலைக்காட்சியில் வாசித்த கவிதை இது…

பிரியம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்களோடு…


அலை பிழை..

December 26, 2011
கால் நனைத்துக் கொஞ்சும் அலை..
ஆள் இழுத்துச் சென்ற நிலை..
பாழ் இதென்று நெஞ்சு உலை..
பதறுகின்ற நேரக்கிளை..
முறிந்த அந்த நிமிடங்களை..
எண்ண எண்ண கண்ணில் மழை..
மீண்டும் அந்த தருணங்களை..
பிழை அலை உன் அலை பிழை
நீ விட்டுத் தொலை..
.
பிஞ்சுப் பிள்ளைகள் முதல்.. நெஞ்சுக் கனவுகள் வரை.. வாரி எடுத்துச் சென்ற கடல் பசியில்.. கணக்கின்றிக் கரைந்த அத்தனை  இதயங்களுக்கும் சமர்ப்பணம்…….
.

புனித இனம்…

December 24, 2011
மனித இனத்தை நெறிப்படுத்த
மகத்தான உயிர்  கொடுத்த
உன்னத புனிதர்களால்தான்
இன்னமும் புரண்டு விடாமல் இருக்கிறது
இந்த பூமி..

 

பகவத்கீதை.. பைபிள்..  குரான்.. என..
வார்த்தைகளாய் வாழ்ந்து வரும்
புனித தத்துவங்கள்..
என்றும் நம் புத்திக்கு
சக்தி ஏற்றட்டும்..

 

பிரியம் நிறைந்த அத்தனை இதயங்களுக்கும்  இனிய  கிறிஸ்துமஸ்  நல்வாழ்த்துக்கள்..

 


சலனச் சத்தம்..

நவம்பர் 20, 2011
மூட முடியாத ஜன்னல்..
முகத்தில் அறையும் குளிர்க்காற்று..
வசதியற்ற இருக்கை..
தூக்கிப் போடும் சாலைகள்..
தூக்கம் தொலைத்த கண்ணெரிச்சல்..
தனிமை தின்னும் நடு நிசி..
வியர்வை நாற்றம்..
குறட்டைச் சத்தம்..
படுத்தும் அலுப்பு..
பயணக் களைப்பு..
இப்படி பலவித இடைஞ்சல்களுக்கிடையில்..
நள்ளிரவுப் புறநகர் பேருந்தில்..
தூரப் பயணித்துக் கொண்டிருக்கும் வேளையிலும்..
சுவாரஸ்யமாய் கவனத்தை
எழுப்பித் திசை திருப்பி..
மெதுவாய் சலனத்தை
சிந்தாமல் சிதறடிக்கிறது..
முன் இருக்கையில் அமர்ந்திருக்கும்
புதுமணப் பெண்ணின்
வளையல்கள் சிணுங்கும் சத்தம்…
.

உன் தினப் பார்வை..

நவம்பர் 5, 2011
 
 
தினசரிகளின் சில நொடிகளில்
உன்னைக் கடந்து செல்ல நேர்கையில் எல்லாம்..
வார்த்தைகளோ.. ஜாடைகளோ.. ஏதுமன்றி..
இமை அசைக்காமல்.. விழி எடுக்காமல்..
கூரான பார்வை ஒன்றால்..
குத்திக் கடந்து விடுகிறாய்..
 
கடக்கும் கடைசி நொடித் துளியில்
கள்ளப் புன்முறுவல் வேறு..
 
 
மூர்ச்சையுராமல் மூர்ச்சையுருவதும்..
மயக்கமடையாது மயக்கமடைவதுமாய்..  
நான் தவிப்பது..
சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன..
 
 
.
 
 

இன்று – 26/10/2011…

அக்டோபர் 26, 2011

இளைய தளபதி நடிப்பில்.. ஜெயம் ராஜா இயக்கத்தில்..

விஜய் ஆண்டனி இசையில்.. ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில்.. 

அடியேன் எழுதிய “வேலா.. வேலா.. வேலாயுதம்..” பாடலோடு.. 

இன்று வேலாயுதம் திரையில்….

.


தினங்கள் அழகடைதல்…

அக்டோபர் 25, 2011
 
 
தீபத்தின் வெளிச்சம்
நம் இருளகற்றும் பொழுதுகளில்..
 
புத்தாடை.. பட்டாசு.. இனிப்போடு..  
குட்டிக் குறும்புகள் தித்திப்பு சிரிப்பு சிதறும் நொடிகளில்..
 
தினம் தினம் நில்லாமல் நகரும்  
நாட்களின் வரிசைகதியில்..  
சட்டென புது வசந்தமாய் வந்து  
புன்முறுவல் சிந்தும்..
பண்டிகை தினங்களின் தருணங்களில் எல்லாம்..  
 
நம் வாழ்வும் உறவும்
அழகடைகிறது இன்னும் இன்னும்..
 
பிரியம் நிறைந்த அத்தனை இதயங்களுக்கும்
பிரகாச தீப ஒளி  தின வாழ்த்துக்கள்…
 
 
.
 

Follow

Get every new post delivered to your Inbox.