என்ன செய்வது..
எடை குறைவுதான்..
இருந்தாலும் அதை சரி கட்டத்தான்
நிறைவாய் நிரம்பி இருக்கிறதே அழகு..
நிறம் கொஞ்சம் கம்மிதான் என
யாரோ சொன்னது காதில் விழுந்துவிட்டதைப் போல்..
உடனே பிஞ்சுக் கை கால்களை ஆட்டி ஆட்டி
நீ சத்தமாய் அழ ஆரம்பித்த பொழுதில்..
சிவந்து போன முகம்
கோபத்தோடு சொல்வதாய் தோன்றியது
“பாத்தியா என் நிறத்தை என்று..”
நிர்வாணத்தின் கூச்சம் தெரியாத தெளிவே..
உறக்கத்தில் உருகிச் சிரிக்கும் நிலவே..
நகர்ந்து செல்லும் நாள் வராத சூரியனே..
அதனாலென்ன..
எப்போதும் உன்னை சுற்றித்தான் திரிகின்றன
என் குடும்பத்து மனிதக் கோள்கள் அத்தனையும்..
ஒன்றரை அடி கவிதையே..
ஒப்பில்லா உவமையே..
மென் தாமரை தேகம்..
கரு வண்டுக் கண்கள்..
சிவப்பு ரோஜாத்துண்டு உதடுகள்..
பனித்துளி கால் விரல்கள்..
மழைத்துளி கை நகங்கள்..
செம்பருத்தி பாத மத்தி..
நீ இரண்டரை கிலோ புனித சக்தி..
அமைதி.. அழுகை..
ஆட்டம்.. தூக்கம்.. மட்டும் தெரிந்த மகத்துவமே..
உன்னால் தினம் தினம்
திருவிழாக் காலம் போலானது வீடு..
பிறந்து சில நாட்களே ஆன
செல்ல மழலையே..
குட்டிக் கடவுளே..
சொல்வதற்கு வேறென்ன இருக்கிறது..
புது வரவே உனக்கு நல்வரவு
என்ற ஒன்றைத் தவிர…
.
hai priyan, Pudhu varavu kavidhayil ” sembaruththi paadha maththi, nee irandarai kilo punidha sakthi” these lines are amazing.