சகோதர அலைகள்…

 
உன்னை கடற்கரைக்கு அழைத்துச் செல்லும்
பொழுதுகளில் எல்லாம் கவனிக்கிறேன்…

உனக்கே தெரியாமல்
நீ ஒரு குழந்தையாய் மாறிவிடுவதை…

 

இந்த கடல் மட்டுமென்ன
உன்னைக் கண்டவுடன்
சும்மாவா இருக்கின்றது…

சந்தோஷத்தில் வழக்கத்தைவிட அதிகமாக
துள்ளிக் குதிக்கின்றது…

 

அத்தனை அலைகளும்
ஆசை ஆசையாய் ஓடி வருகின்றன
உன்னைப் பார்த்த உடனே…

அவை உன் பாதங்களை
முத்தமிட வருகின்றனவோ என நான்
கோபம் கொள்ளும்பொழுது சொல்கிறாய்…
இவை என் சகோதரங்கள் என்று…

 

ஆஹா என்ன அழகு..
அத்தனை பெரிய அலைகள்
அப்படியே சின்ன பிள்ளைப் போல மாறி
உன் கால் கொலுசை
மெதுவாய் வருடிபோகின்றன பாசத்துடன்…

 

உன்னிடம் வரும் பொழுது மட்டும்
ஒருவித சிநேகத்துடன்
அவை உறவாடுதல் பற்றிய
குழப்பம் எப்போதும் என்னை
சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தது…

 

என்னை உணர்ந்த நீ
இந்த கணத்தில்
அர்த்தத்துடன் எனை பார்த்து சிரித்து
என் கைகளைப் பற்றி இழுத்துவந்து
என்னையும் நிறுத்துகிறாய் அலைகளுக்கிடையில்…

 

உன்னோடு நானிருக்கையில்
என்னையும் சேர்த்து தழுவும் அலைகள்
மௌனமாய் ஒன்றை சொல்லியது…

 

ஆனந்த அலைகளில் ஒன்று
ஐந்தரையடிப் பெண்ணாகி
உனக்காய் பிறந்து
உன்னருகில் நிற்கிறதென்று…

 

அதனால்தான் ஒவ்வொருமுறை நீ
கடற்கரைக்கு வரும்பொழுதும்
இந்த அலைகள் எல்லாம்
அப்படி துள்ளிக் குதிக்கின்றனவா…

 

உண்மை புரிந்த சந்தோஷத்தில்
உன்னையே உற்றுப் பார்த்த என்னை…

எதேட்சையாய் கவனித்து
எதுவும் தெரியாததுபோல
சாய்ந்துகொள்கிறாய் தோளில்…

 

அந்த ஆழ நிமிடத்தில்
உன் உச்சந்தலையில்
உனக்கேயான என் முத்தங்களை கவனித்தபடி…

மெல்ல மெல்ல இருள்கிறது கடற்கரை…
ஓயவே இல்லை அலைகள்…

2 Responses to சகோதர அலைகள்…

  1. preethikumaravel சொல்கிறார்:

    ஆனந்த அலை எனக்குள்ளும் இந்த கவிதையால்.

  2. hsirahg சொல்கிறார்:

    Priyan sir sagothara alaigal arpudham.

preethikumaravel -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி