?…

அக்டோபர் 12, 2009

 

மேலிருந்து கீழ் விழும் அருவி..
கீழிருந்து மேல் எழும் குருவி..

விழுவதால் சிறிதா அருவி..
எழுவதால் பெரிதா குருவி..

 

.


செல்லத் தொல்லை…

அக்டோபர் 3, 2009

 

ரத்த ஓட்டப் பாதை எல்லாம்
சத்தம் போட வைச்சவளே..

கண்ணு முழிக்குள்ளார
கனவ வைச்சு தைச்சவளே..

 

ஒத்த இதயத்த தகர்க்கிறியே
வெடிகுண்டுக் கண்ணால..

மூச்சுக் காத்து போகும் இடமெல்லாம்
சாத்திக்கிச்சே உன்னால..

 

ஒடம்பு துடிக்க ஒரசி நின்னு
உச்சி முடி சிலுக்க வைப்ப..

சட்டுன்னுதான் தள்ளிப்போயி
சத்தியமா துடிக்க வைப்ப..

 

கொஞ்சிக் கொஞ்சிப் பேசி என்ன
சொட்டுச் சொட்டா நனைய வைப்ப..

கோபத்தோட ஏசி என்ன
கொத்துத் தீயா எரிய வைப்ப..
 

நீ நல்லப் பிள்ளையா.. – இல்ல
செல்லத் தொல்லையா…

 

.


சாகாது உன் நினைவு…

ஜூன் 25, 2009

 

நெஞ்சுக் குழிக்குள்ளார
நெருப்பக் கொட்டி ரசிச்சவளே..

மனசுக் குளமதிர
கல்லெறிஞ்சு சிரிச்சவளே..

 

நாடி நரம்புக்குள்
ஓடியாடி திரிஞ்சவளே..

இதயத்து மத்தியில
இடம் வாங்கி அமர்ந்தவளே..

 

கண்ணு முழிக்குள்ளார
கண்டபடி நெளிபவளே..

கன்னத்தோட பாதையில
கண்ணீரா வழிபவளே..

 

கசக்கி எரிஞ்சாலும்
கலங்காது என் மனசு..

நீ வெறுத்து மறுத்தாலும்
மறக்காது என் உசுரு..

 

மூச்சு எதுக்கையிலும்
மூழ்காது என் கனவு..

என் சாவுப் படுக்கையிலும்
சாகாது உன் நினைவு…
 

.


அம்மா சுட்ட சூயம்…

ஜூன் 5, 2009

 

எத்தனையோ நாளாச்சு
அம்மா நீ சூயம் சுட்டுத் தந்து..

ஆயிரந்தான் தின்பண்டம்
கடைக்கடையா நிறைச்சிருந்தாலும்..

 

அரிசிமாவும் மைதாமாவும்
கடலைப்பருப்பும் வெல்லப்பாகும்
பக்குவமா கலந்துருட்டி..

கொதிக்க வைச்ச எண்ணையில
முக்கி முக்கி மூழ்கடிச்சு..

இனிக்க இனிக்க சூயத்த
சுடச்சுட எடுத்து வைக்கும்
அம்மா கைய பாத்ததுமே..

 

பசி வந்து பச போல
உக்காந்துக்கும் வயித்துக்குள்ள…

உண்மையில அது வந்தது
பசிக்கு இல்ல ருசிக்கு…

 

மழ வந்து தல மேல
நட போடும் நாளுலயும்..

சில்லுன்னுதான் குளிர்காத்து
காதுரசும் நாளுலயும்..

மனசு வாய் திறந்து
வேணுமின்னு கேட்கும் முன்ன..

பாசத்தோட என் தாயி
பத்துப் பத்தா சுட்டு வைப்பா…

 

கொட்டும் மழ சொட்டுரத
எட்டி நின்னு பாத்தபடி..

சூடா ஒரு சூயத்த
எடுத்து கடி கடிக்கயில..

உடம்பெல்லாம் இனிக்கும்..
உசுரெல்லாம் இனிக்கும்..

 

அத்தனையும் அலுங்காம
நாங்க எடுத்து திங்க திங்க..

வைச்ச கண்ணு வாங்காம
ஆசையோட பாத்திருப்பா எங்கம்மா..

 

பத்தாம போகுமுன்னு
நெனச்சாளோ  என்னவோ..

ஒருபோதும் அவ ஒன்ன
எடுத்துத் தின்னு பாத்ததில்ல..

 

காத்தெல்லாம் அழுக்கான
நகரத்து வாழ்கையில..

ஓயாம நாங்க தினம்
நசுங்கி திரியும் வேளையில..

 

வயக்காத்தும் புல்நாத்தும்
சுவையான சுன ஊத்தும்..

சுத்தி சுத்தி சொகம் கொடுக்கும்
எதமான கிராமத்த..

 

அப்பப்போ சூயம் தந்து
புத்திக்கு நெனப்பூட்டும்
என்ன பெத்த சத்தியமே..
தாயான தத்துவமே..

வயசாகிப் போனாலும்
வாடாத மல்லிகையே..

 

மாசம் ஏழு கடந்திருச்சு..
மழைக்காலம் நெருங்கிருச்சு..

மனசோட மத்தியில
ஒரு ஏக்கம் உறுத்திருச்சு.. 

 

எத்தனையோ நாளாச்சே
நம்மூரு நெனப்பு வந்து..

என் தாயே..
எத்தனையோ நாளாச்சே
நீ சூயம் சுட்டுத் தந்து…

 

 

எத்தனையோ கவிதைகளில்.. இது போன்ற ஒன்று.. அத்திப்பூ போல்.. குறிஞ்சிப்பூ போல்.. பூப்பதுண்டு எண்ணத்தில்…

 

என் அன்னையோடு சேர்த்து.. தன் பிள்ளைகளுக்காய் வாழும் எல்லா அன்னைகளுக்கும்.. தன் பசி மறந்து குடும்ப பசி தீர்க்கும் எல்லா வீட்டுச்சாமிகளுக்கும்.. இந்த கவிதையை சமர்ப்பிக்கிறேன்……..

 

பிரியமுடன்..
பிரியன்…

 

.


காற்றுப் பூசாரி…

மே 25, 2009

யாருக்கும் அடங்காத 
பேய் பிடித்த பெண் போல 
தலை விரித்தாடும் தென்னை மரம்..

காற்றுப் பூசாரியிடம் மட்டும்
கைக்கட்டி நிற்கும் பவ்வியமாய்…

 

 .


அட்டைப் பெட்டி வீடுகள்…

மார்ச் 10, 2009

 

கான்கிரீட் காடுகளுக்கு இடையில்
எட்டுக்கு பத்து அட்டைப் பெட்டி அறைகள் கட்டி
ஜன்னல் கதவுகள் அடைத்து வைத்து
புழுக்கத்தில் பழகிப் போய்
தூங்கும் இதயம்
ஒவ்வொரு நாளும்
ஏக்கத்தோடு நினைத்துப் பார்க்கும்..

வேப்ப மரத்தடியில் கயிற்றுக் கட்டிலில்
குளிர் காற்று வாங்கி
ஆசுவாசமாய் கண்ணசந்த
அப்பாவுடனான கிராமத்து நாட்களை…


நிஜப் பூக்கள்…

ஜனவரி 18, 2009

 

நந்தவனங்களில் மட்டும் இல்லை
நடைபாதைகளில் பூத்தாலும்
பூக்கள் அழகுதான்..

நம் சேரிக் குழந்தைகள் போல…


எங்களுக்கில்லை வட்டம்…

ஜனவரி 13, 2009

 

மீன்களை நடக்கச் சொல்லாதவர்கள்..
மான்களை பறக்கச் சொல்லாதவர்கள்..

 

சூரியனை உடையச் சொல்லாதவர்கள்..
சந்திரனை உருகச் சொல்லாதவர்கள்..

 

காற்றை கரையச் சொல்லாதவர்கள்..
கடலை கருகச் சொல்லாதவர்கள்..

 

மலரை அழச் சொல்லாதவர்கள்..
மலையை விழச் சொல்லாதவர்கள்..

 

இரும்பை இனிக்கச் சொல்லாதவர்கள்..
உடம்பை மிதக்கச் சொல்லாதவர்கள்..

 

ஏன் சொல்கிறீர்கள்..

கவிஞர்களை மட்டும்
உங்களைப் போல்
வட்டத்துக்குள் வாழ…


அழுவதின் சுகம்…

ஜனவரி 6, 2009

எப்போதும் சிரித்துக்கொண்டே
சந்தோஷித்திருக்கத்தான் ஆசை எல்லோர்க்கும்..

அழுவதின் சுகம் அறியாதவரை…


என்ன செய்ய முடியும்…

ஜனவரி 6, 2009

தீப்பொறிகளுக்கு இடையில்
தவறி விழுந்துவிட்ட பனித்துளி..
பாவம் என்ன செய்ய முடியும்…

உருகி இளகி கடைசியில்
கரைந்து போவதைத் தவிர…

 

என் முத்தங்களுக்கு இடையில்
விரும்பி விழுந்துவிட்ட உன் உதடுகள்..
பாவம் என்ன செய்ய முடியும்…

வெட்கித் திணறி கடைசியில்
ஒன்றிவிடுவதைத் தவிர…