செல்லத் தொல்லை…

அக்டோபர் 3, 2009

 

ரத்த ஓட்டப் பாதை எல்லாம்
சத்தம் போட வைச்சவளே..

கண்ணு முழிக்குள்ளார
கனவ வைச்சு தைச்சவளே..

 

ஒத்த இதயத்த தகர்க்கிறியே
வெடிகுண்டுக் கண்ணால..

மூச்சுக் காத்து போகும் இடமெல்லாம்
சாத்திக்கிச்சே உன்னால..

 

ஒடம்பு துடிக்க ஒரசி நின்னு
உச்சி முடி சிலுக்க வைப்ப..

சட்டுன்னுதான் தள்ளிப்போயி
சத்தியமா துடிக்க வைப்ப..

 

கொஞ்சிக் கொஞ்சிப் பேசி என்ன
சொட்டுச் சொட்டா நனைய வைப்ப..

கோபத்தோட ஏசி என்ன
கொத்துத் தீயா எரிய வைப்ப..
 

நீ நல்லப் பிள்ளையா.. – இல்ல
செல்லத் தொல்லையா…

 

.


சாகாது உன் நினைவு…

ஜூன் 25, 2009

 

நெஞ்சுக் குழிக்குள்ளார
நெருப்பக் கொட்டி ரசிச்சவளே..

மனசுக் குளமதிர
கல்லெறிஞ்சு சிரிச்சவளே..

 

நாடி நரம்புக்குள்
ஓடியாடி திரிஞ்சவளே..

இதயத்து மத்தியில
இடம் வாங்கி அமர்ந்தவளே..

 

கண்ணு முழிக்குள்ளார
கண்டபடி நெளிபவளே..

கன்னத்தோட பாதையில
கண்ணீரா வழிபவளே..

 

கசக்கி எரிஞ்சாலும்
கலங்காது என் மனசு..

நீ வெறுத்து மறுத்தாலும்
மறக்காது என் உசுரு..

 

மூச்சு எதுக்கையிலும்
மூழ்காது என் கனவு..

என் சாவுப் படுக்கையிலும்
சாகாது உன் நினைவு…
 

.


அம்மா சுட்ட சூயம்…

ஜூன் 5, 2009

 

எத்தனையோ நாளாச்சு
அம்மா நீ சூயம் சுட்டுத் தந்து..

ஆயிரந்தான் தின்பண்டம்
கடைக்கடையா நிறைச்சிருந்தாலும்..

 

அரிசிமாவும் மைதாமாவும்
கடலைப்பருப்பும் வெல்லப்பாகும்
பக்குவமா கலந்துருட்டி..

கொதிக்க வைச்ச எண்ணையில
முக்கி முக்கி மூழ்கடிச்சு..

இனிக்க இனிக்க சூயத்த
சுடச்சுட எடுத்து வைக்கும்
அம்மா கைய பாத்ததுமே..

 

பசி வந்து பச போல
உக்காந்துக்கும் வயித்துக்குள்ள…

உண்மையில அது வந்தது
பசிக்கு இல்ல ருசிக்கு…

 

மழ வந்து தல மேல
நட போடும் நாளுலயும்..

சில்லுன்னுதான் குளிர்காத்து
காதுரசும் நாளுலயும்..

மனசு வாய் திறந்து
வேணுமின்னு கேட்கும் முன்ன..

பாசத்தோட என் தாயி
பத்துப் பத்தா சுட்டு வைப்பா…

 

கொட்டும் மழ சொட்டுரத
எட்டி நின்னு பாத்தபடி..

சூடா ஒரு சூயத்த
எடுத்து கடி கடிக்கயில..

உடம்பெல்லாம் இனிக்கும்..
உசுரெல்லாம் இனிக்கும்..

 

அத்தனையும் அலுங்காம
நாங்க எடுத்து திங்க திங்க..

வைச்ச கண்ணு வாங்காம
ஆசையோட பாத்திருப்பா எங்கம்மா..

 

பத்தாம போகுமுன்னு
நெனச்சாளோ  என்னவோ..

ஒருபோதும் அவ ஒன்ன
எடுத்துத் தின்னு பாத்ததில்ல..

 

காத்தெல்லாம் அழுக்கான
நகரத்து வாழ்கையில..

ஓயாம நாங்க தினம்
நசுங்கி திரியும் வேளையில..

 

வயக்காத்தும் புல்நாத்தும்
சுவையான சுன ஊத்தும்..

சுத்தி சுத்தி சொகம் கொடுக்கும்
எதமான கிராமத்த..

 

அப்பப்போ சூயம் தந்து
புத்திக்கு நெனப்பூட்டும்
என்ன பெத்த சத்தியமே..
தாயான தத்துவமே..

வயசாகிப் போனாலும்
வாடாத மல்லிகையே..

 

மாசம் ஏழு கடந்திருச்சு..
மழைக்காலம் நெருங்கிருச்சு..

மனசோட மத்தியில
ஒரு ஏக்கம் உறுத்திருச்சு.. 

 

எத்தனையோ நாளாச்சே
நம்மூரு நெனப்பு வந்து..

என் தாயே..
எத்தனையோ நாளாச்சே
நீ சூயம் சுட்டுத் தந்து…

 

 

எத்தனையோ கவிதைகளில்.. இது போன்ற ஒன்று.. அத்திப்பூ போல்.. குறிஞ்சிப்பூ போல்.. பூப்பதுண்டு எண்ணத்தில்…

 

என் அன்னையோடு சேர்த்து.. தன் பிள்ளைகளுக்காய் வாழும் எல்லா அன்னைகளுக்கும்.. தன் பசி மறந்து குடும்ப பசி தீர்க்கும் எல்லா வீட்டுச்சாமிகளுக்கும்.. இந்த கவிதையை சமர்ப்பிக்கிறேன்……..

 

பிரியமுடன்..
பிரியன்…

 

.


அட்டைப் பெட்டி வீடுகள்…

மார்ச் 10, 2009

 

கான்கிரீட் காடுகளுக்கு இடையில்
எட்டுக்கு பத்து அட்டைப் பெட்டி அறைகள் கட்டி
ஜன்னல் கதவுகள் அடைத்து வைத்து
புழுக்கத்தில் பழகிப் போய்
தூங்கும் இதயம்
ஒவ்வொரு நாளும்
ஏக்கத்தோடு நினைத்துப் பார்க்கும்..

வேப்ப மரத்தடியில் கயிற்றுக் கட்டிலில்
குளிர் காற்று வாங்கி
ஆசுவாசமாய் கண்ணசந்த
அப்பாவுடனான கிராமத்து நாட்களை…


யாரிருக்கா உனக்கு சொல்ல…

December 23, 2008

 

பத்துபேரு கூடி நின்னு
பல்லாயிரம் தடவையின்னு
பால் பாலுன்னு சொல்லி வைச்சா..

பச்சத் தண்ணி இனிச்சிடுமா…
பாலப் போல ருசிச்சுடுமா…

 

என் மச்சானே…

ஒத்த சொல்லு நீ சொல்லி
முடிப்பதுக்குள்ளார
உசுர கூட வுட்டுடுவேன்…
உன் மூச்சு காத்தா சுத்திடுவேன்…

 

தாமரைப்பூ கொளத்துகுள்ள
மாமரந்தான் வளர்வதில்ல…

உன்ன விட்டா நெஞ்சுக்குள்ள
சத்தியமா யாருமில்ல…

 

வாசலுல கொட்டி வைச்ச
அரிசியத்தான் குருவி திங்கும்…

ஜோடி சேந்து பறக்குறப்போ
ஏனோ மனசு உன்ன எண்ணும்…

 

காலையில முழிச்செழுந்தா 
கண்ணு ரெண்டும்
உன்னத் தேடும்…

ராத்திரிக்கு தூங்கும் வர
வாசல் எட்டிப் பாத்து வாடும்…

 

நட்சத்திரக் கூட்டமெல்லாம்
நடுவானில் சுத்தி வந்தும்..

பாவம் அந்த நிலவுக்குத்தான்
எந்தவொரு துணையுமில்ல…

 

கட்டபொம்மன் உன் வருகைக்காக
காதலோட காத்துருக்கேன்…

காதுல என் கதைய மெல்ல
யாரிருக்கா உனக்கு சொல்ல…