புத்தம்புது தீபாவளி…

அக்டோபர் 17, 2009

 

பிள்ளைப் பிராயத்து தீபாவளிகள்..
பள்ளிப் பருவத்து தீபாவளிகள்..
கல்லூரிக்கால தீபாவளிகள்..
இளமைக்குகந்த தீபாவளிகள்.. போல இல்லை
இந்த வருட தீபாவளி !

இது கொஞ்சம் வித்தியாசமானது..
நிறைய புதுமையானது !

 

விடியற்காலையிலேயே எழுந்து குளித்து..
ஈரத்தை துவட்டி..  நடு வகிடெடுத்து..
பொட்டுக் குங்குமம் வைத்து..
தழையத் தழைய பட்டுப் புடவை உடுத்தி..
கூந்தல் நிறைய பூக்கள் சொருகி..

தூங்கிக் கொண்டிருந்த என்னை எழுப்பி..
என்னங்க நான் இப்ப பாக்க எப்படி இருக்கேன் ?
என வெட்கச் சிரிப்போடு கேட்கிறாள்  
மனைவியானாலும் மாறாத என் காதலி !

 

என்னை வேட்டிச் சட்டையில் பார்ப்பதில்தான்
எவ்வளவு ஆசை அவளுக்கு !

எப்போதும் என் பக்கத்திலேயே
என்னையேச் சுற்றி சுற்றி
வந்து கொண்டிருந்தவள்..

நான் முதல்வெடி வெடிக்க வா.. என்றழைத்த 
அந்தப் பொழுதில் மட்டும்
நிற்கிறாள் பயத்தோடு விலகி..

வீட்டு பூஜை முடித்து..
பலகாரம் பகிர்ந்துண்டு..
பக்கத்துக் கோவிலுக்கு ஜோடியாய் சென்று வந்து..

வீட்டு வாசல் கதவைப் பிடித்துக்கொண்டு 
வர மறுக்கும் அவள் கையைப் பிடித்திழுத்து
அணைத்தபடி வெடி வெடிக்க வைத்து..

அவளுக்கு வெடிமீதான பயம் போயிருந்தாலும்
நான் அணைத்து வெடிக்க வைப்பதற்காக
இன்னும் பயப்படுவதாய் நடித்து..

மாலையில் குடும்பத்தோடு ஊர் சுற்றி..
இருட்டியதும் வானவேடிக்கைகள் ரசித்து..

கம்பி மத்தாப்புகளின்.. புஷ்வானங்களின்..  
சங்குச் சக்கரங்களின்.. வெளிச்சத்தில்
அவள் குழந்தையாய் மாறிவிட்டதை ருசித்து..

இதோ இன்னும் இன்னும் எவ்வளவோ அழகான
பரவசம் மிக்க பண்டிகை நிமிடங்கள்..

 

கடல் பார்த்து தனிமையோடு 
அமர்ந்திருக்கும் பொழுதில்
அலை கரை சேர்த்த அதிசயச் சிலை போல..
எப்போதாவது கிடைக்கும்
அரிய பொக்கிஷ தினம் இது..

 

நான் இதுவரை கடந்த தீபாவளி எல்லாம்
என்னை மட்டும் சார்ந்தது..

இது என்னோடு இணைந்த
ஒரு பெண்ணையும் சேர்ந்தது..

 

இது இதுவரை இல்லா தீபாவளி..
நான் இதுவரைக் காணா தீபாவளி..

இதயத்தில் மழை தூறும் தீபாவளி..
மனம் வானவில்லாய் மாறிப்போகும் தீபாவளி..

ஐந்தடி இனிப்பு கிடைத்த தீபாவளி..
துள்ளிச் சிரிக்கின்ற மத்தாப்பு கிடைத்த தீபாவளி..

ஒவ்வொரு நாளுமே என் வாழ்வில் தீபாவளி..
இருந்தும் இதுதான் எனக்கும் அவளுக்கும் தலை தீபாவளி..

 

 

தலை தீபாவளி கொண்டாடும் அத்தனை புதுமணத் தம்பதியருக்கும்.. அத்தனை பிரியமானவர்களுகும் தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்களோடு…
 

பிரியமுடன்…
பிரியன்…

.


செல்லத் தொல்லை…

அக்டோபர் 3, 2009

 

ரத்த ஓட்டப் பாதை எல்லாம்
சத்தம் போட வைச்சவளே..

கண்ணு முழிக்குள்ளார
கனவ வைச்சு தைச்சவளே..

 

ஒத்த இதயத்த தகர்க்கிறியே
வெடிகுண்டுக் கண்ணால..

மூச்சுக் காத்து போகும் இடமெல்லாம்
சாத்திக்கிச்சே உன்னால..

 

ஒடம்பு துடிக்க ஒரசி நின்னு
உச்சி முடி சிலுக்க வைப்ப..

சட்டுன்னுதான் தள்ளிப்போயி
சத்தியமா துடிக்க வைப்ப..

 

கொஞ்சிக் கொஞ்சிப் பேசி என்ன
சொட்டுச் சொட்டா நனைய வைப்ப..

கோபத்தோட ஏசி என்ன
கொத்துத் தீயா எரிய வைப்ப..
 

நீ நல்லப் பிள்ளையா.. – இல்ல
செல்லத் தொல்லையா…

 

.


சுவாசமிழந்த காதல்…

செப்டம்பர் 20, 2009

 

உயிர் மூச்சாய் நின்றவளே..
உடைத்து எனைத் தின்றவளே..

விழி நழுவிச் சென்றவளே..
விதவிதமாய் கொன்றவளே..

 

ஆக்சிஜெனாய் உனை எண்ணி
உள்ளிழுத்து உறைந்து விட்டேன்..

மாயமதை அறியாது
மயங்கி மதி கலங்கி விட்டேன்..

 

வற்றாது வழியுதெந்தன்  
கண்ணிரெண்டில் நீரோடை..

நீ காதலுக்கு தந்துவிட்டாய்
கார்பன்டை ஆக்சைடை…

 

 

காதல் தோல்விக் கவிதைகள் அதிகம் இல்லையென சொல்லி எழுத வேண்டுகோள் விடுத்த ஒவ்வொரு இதயதிற்க்காகவும்…

.


எங்கிருக்கிறது காதல்…

ஆகஸ்ட் 5, 2009

 

உன் பார்வையும் என் பார்வையும்
சந்திக்கும் புள்ளியிலா..

உன் வார்த்தையும் என் வார்த்தையும் 
மரணிக்கும் மௌனத்திலா..

உன் இதயமும் என் இதயமும் 
இசை மீட்டும் நிமிடத்திலா..

உன் விரலும் என் விரலும்
பிணையும் ஸ்பரிச்த்திலா..

உன் உதடும் என் உதடும்
உரசி உருகும் தருணத்திலா..

என் உடலும் உன் உடலும்
பற்றிக்கொள்ளும் நெருக்கத்திலா..

என் உயிரும் உன் உயிரும்
ஒன்றெனத் தோன்றும் உணர்ச்சியிலா..

எங்கிருக்கிறது காதல்..
இதற்குள் எங்கிருக்கிறது இந்தக் காதல்..

 

உண்மையில் இதில் எல்லாம் இல்லை காதல்..

இடைவெளியில்தான் இருக்கிறது காதல்..
இதன் இடைவெளியில்தான் இருக்கிறது காதல்..

 

ஆம்..
ஒரு பார்வைக்கும் மறு பார்வைக்கும் உள்ள
அந்த இடைவெளியில்…

ஒரு வார்த்தைக்கும் மறு வார்த்தைக்கும் உள்ள
அந்த இடைவெளியில்…

இதயமும் இதயமும் பிணையும் நிமிடதிற்க்குள்ள
அந்த இடைவெளியில்…

விரலும் விரலும் இணையும் ஸ்பரிச்துக்குள்ள 
அந்த இடைவெளியில்…

உதடும் உதடும் உருகும் தருணத்திற்க்குள்ள  
அந்த இடைவெளியில்…

உடலும் உடலும் கொள்ளும் நெருக்கதிற்க்குள்ள 
அந்த இடைவெளியில்…

உயிரும் உயிரும் ஒன்றெனக் கருதும் உணர்சிக்குள்ள
அந்த இடைவெளியில்…

சுகமாய் முழுதாய் நிறைந்திருக்கிறது காதல்..

 

கைவிரல்களில் இருக்கும் இடைவெளிகளை
இன்னொரு கையின் விரல்கள் வந்து நிரப்புவதைப் போல..

ஆணுக்கும் பெண்ணுக்கும்
இயற்கையிலேயே விடப்பெற்றிருக்கும் விடுபட்டிருக்கும்
ரகசிய இடைவெளிகளை இனிக்க இனிக்க நிரப்ப
அந்த இடைவெளிகளின் மத்தியில்தான் 
காதலுடன் காத்திருக்கிறது காதல்…

 

இந்த ரகசியம் தெரிந்தவருக்கு 
மிக எளிதாய் வசமாகிறது காதல்..

உண்மையில் இந்த சூட்சுமம் உணர்ந்தவரிடம்தான்
கை கட்டி நிற்கிறது காதல்…


சாகாது உன் நினைவு…

ஜூன் 25, 2009

 

நெஞ்சுக் குழிக்குள்ளார
நெருப்பக் கொட்டி ரசிச்சவளே..

மனசுக் குளமதிர
கல்லெறிஞ்சு சிரிச்சவளே..

 

நாடி நரம்புக்குள்
ஓடியாடி திரிஞ்சவளே..

இதயத்து மத்தியில
இடம் வாங்கி அமர்ந்தவளே..

 

கண்ணு முழிக்குள்ளார
கண்டபடி நெளிபவளே..

கன்னத்தோட பாதையில
கண்ணீரா வழிபவளே..

 

கசக்கி எரிஞ்சாலும்
கலங்காது என் மனசு..

நீ வெறுத்து மறுத்தாலும்
மறக்காது என் உசுரு..

 

மூச்சு எதுக்கையிலும்
மூழ்காது என் கனவு..

என் சாவுப் படுக்கையிலும்
சாகாது உன் நினைவு…
 

.


களங்கமற்ற புனிதம்..

ஏப்ரல் 14, 2009

 

உடலை பிசைந்து தின்னும் காமம்
நாகரீகம் கருதி
காதலென்னும் பெயர் சூட்டிக் கொள்கிறது…

 

உயிரை உன்னதமாக்கும் காதலோ
தன் பெயர் களங்கமாவது கண்டு
செய்வதறியாமல் திகைக்கிறது…

 

எந்த திசையாய் இருந்தால் என்ன
விடியல் என்பது கிழக்கில்தான்..

எத்தனை களங்கம் செய்தாலும்
காதல் என்றும் புனிதம்தான்…


இச்சைப் பொய்கள்…

மார்ச் 18, 2009

 

உடல் துளைகளின்
இச்சைப் பசிக்கு
காதலென அர்த்தம் சொன்னால்…

கருவறைகள் எல்லாம்
கழிவறைகள் என்று அர்த்தம்…

 

உள்ளத்துத் தேடலில்
உயிர்த்த ஒன்றை
காதலென அர்த்தம் கண்டால்…

கடவுளின் இருப்பிடம்
கருவறை என்று அர்த்தம்…

 

பசித்த காமத்துக்கு
புனிதக் காதலின்
முகம் மாட்டித் திரிவதை விட
விரும்பி விபச்சாரம் ஏற்கலாம்…


காதலின் கதை…

மார்ச் 6, 2009

 

மனது முழுக்க நிறைந்திருக்கும்
வாஞ்சையான வரிகளை
காற்றலைகளில் பாடலாக்கி
பரவசப்பட்டுக் கொண்டிருக்கும்
என் நளினமான நாட்களுக்கிடையில்..

எழுத்தைத் தவிர எதுவும்
தோன்றியதில்லை எனக்கு பெரிதாக…

 

பல சமயங்களில்
எனது வார்த்தைகளின் வசீகரத்தில் வளைந்து
என்மேல் ஆசைத் தூறல் தூவிய
மெல்லின மேகங்களுக்கெல்லாம்.. 

மௌனத்தை மட்டுமே பதிலாய் தந்து
மறுபடி எழுத்துக்குள் புதைந்துவிடுவது
எனது நெடுநாள் வழக்கம்…

 

எனது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும்
கவிதைகளுக்கான காலமாய்
கச்சிதமாய் கரைந்துகொண்டிருந்த சமயத்தில்…

பலபேர் போல் அவளும் அறிமுகமானாள்
எந்தன் ரசிகையாய்..

 

ரசனைகளின் பரிமாற்றம்
தோழமையாய் தோற்றம் எடுத்தது…

அந்த கண பிழையில்லா பகிர்தல்களின் மத்தியில்
ஒன்றை மட்டும் முழுதாய் உணர்ந்துகொள்ள முடிந்தது..

இருவருக்குமான எண்ண அலைகள்
ஒன்றென்பதுதான் அது….

அப்பொழுது நிறைவாய் நான்
அவளிடம் கூறியது ” நீ என் நகல்…
என்ற ஒன்றைத்தான்…

 

எந்த சலனமும் இன்றி
நட்போடு நகர்ந்துகொண்டிருந்த
அந்த கண்ணியமான காலங்களில்
பழகிவிட்டிருந்தோம் இருவர் வீடுகளிலும்..

 

ஆழ ஆழ அடர்ந்துகொண்டிருந்த
எங்கள் பழகுதல்களின் பாரம் தாங்காமல்
ஒருநாள் இதழ் விரித்து அவள் சொல் மலர்ந்தாள்..

உங்கள் கவிதையும் காதலும்
வேண்டும் என் வாழ்நாள் முழுதும்…
” என…….

ஆம்.. தன் மொத்தக் காதலையும்
இந்த கவிஞனிடம் அழகாய் வரிகளில் வார்த்துவிட்டாள்..

சட்டென சின்ன புன்னகையைத் தவிர
அப்பொழுது பதிலாய் தர ஏதுமில்லை என்னிடம்..

 

நிறைய அவகாசங்களுக்கும்..
நிறைய பரிமாற்றங்களுக்கும்..
நிறைய நிறைய கலந்துரையாடல்களுக்கும் பிறகு..

சொல்லித்தான் விட்டேன்
நானும் என் சம்மதத்தை…

 

அடுத்த கட்டம்..
பெற்றவர்களுடனானது..

ஜாதகங்களின்.. சாதிகளின் வேறுபாடுகளால்
இருவரின் பெற்றோரும் நேரில் சந்திக்கும் வரை
கொஞ்சம் நீடிக்கத்தான் செய்தன குழப்பங்கள்..

 

ஒரு கோவிலில் நிகழ்ந்த
அனைவரின் சந்திப்பு
அமைதியாக்கியது அனைத்தையும்…

மெதுவாய் பழகப் பழக பாசமாகி
எங்களுக்கான முழு சம்மதத்தோடு மட்டுமல்லாமல்
திருமணம் செய்வதில் ஆழ்ந்த திருப்தியோடும்
மகிழ்வோடும் இருக்கிறார்கள்  
எங்கள் பெற்றோர்கள் இருவரும்..

 

மெல்ல மெல்ல மெல்ல மெல்ல
விதைத்து வேர்விட்டு
துளைத்து முளைத்து
செழித்த பாசம்..

திருமண பேச்சுக்களால்
வீசியது பூக்களின் வாசம்…

 

இதோ இத்தனை நாட்களை
வாழ்வதற்கான கர்ப்பகாலமாய் எடுத்து..
இந்த  08 / 03 / 2009  தேதியில்
நாளைகளுக்காக நல்லபடியாக
திருமணமாய் பிரசவமாகி இருக்கிறது
எங்கள் சத்தியக் காதல்…

இனி…
பிரியமுடன் ரம்மியமும்….
 

 

 

 

 

 

பிரியம் நிறைந்த மனதிற்கு பிரியனின் வணக்கங்கள்…

என் கவிதைகளில் மட்டுமல்லாது.. எனது வாழ்விலும் எப்போதுமே நான் வெளிப்படையாய் இருக்கத்தான் விரும்புகிறேன்.. எனது வார்த்தைகள் உண்மையாய் இருக்கும் வரைதான் அதற்க்கு மற்றவரை வசீகரிக்கும் சக்தியும் இருக்குமென நம்புகிறேன் நான்…

நான் எனது நாளைகளை தீர்மானிக்க ஒரு வகையில் இந்த பக்கங்களும் காரணம்.. அதனால் அதற்கான வார்த்தைகள் தாண்டிய நன்றிகளோடு நான் எழுதி இருக்கும் இந்த கவிதை கவிஞனின் நிஜ பிம்பம்…………….

 

தங்கள் பார்வைக்காக இத்தோடு எனது திருமண அழைப்பிதழையும் இணைத்திருக்கிறேன்…

என்றும் பிரியமுடன்..
பிரியன்…

pathirikkai-for-blog


காணும் முன்பு வரை…

மார்ச் 4, 2009

 

குறு நட்சத்திரங்களும்
குட்டி மின்மினிகளும்
அழகாய்தான் தெரிந்தன..

இருட்டு நேரத்தில் விளக்கு வெளிச்சத்தில்
உன்னை காணும் முன்பு வரை…


உன் பிரிவின் பொழுதுகளில்…

மார்ச் 2, 2009

 

என்னருகில் நீ
இருக்கின்ற பொழுதுகளில் எல்லாம்
நகர்கின்ற நேரங்கள் போதாமல்
ஆனது பஞ்சம்..

 

என்னை விட்டு நீ
பிரிந்து செல்கின்ற
அந்த வலி மிக்க நொடிகளை மட்டும்
தேடிக் கண்டுபிடித்து
மொத்தமாய் தீயிட்டு
கொளுத்திவிட சொல்கிறதென் நெஞ்சம்..

 

இன்னும் சில நிமிடங்களில்
நீ என்னை விலகி விடுவாய் என்றறிந்து
இருக்கும் நிமிடங்கள்
இன்னும் கொஞ்சம் நீளாதா என
இதயமும் மௌனமாய் கெஞ்சும்..

 

நீ பிரிந்தபின் வரப்போகும்
தனிமையின் வெறுமையை எண்ணி
இப்போதே உயிர் துடித்து அஞ்சும்…